நேராக நடந்து St. Angelo மாளிகையை அடைந்தேன். பார்க்கும் அனைவரையும் ஒரு நிமிடம் அசர வைக்கும் அற்புதம் இந்த மாளிகை. 130 A.C- 139A.C தான் முதலில் இந்த மாளிகைக் கட்டப்பட்டது. இந்த மாளிகையை பேரரசர் Honorius 403 A.D -ல் கட்டினார் எனவும் குறிப்புகள் கூறுகின்றன. முதலில் இறந்தவர்களின் சமாதியாகவும் நினைவுச் சின்னமுமாக இருந்த இந்த மாளிகை நாளடைவில் போர் காலங்களில் தேவைப்படும் பாதுகாப்புக் கோட்டையாக மாறியது. இது ஒரு முழு மாளிகையாக உருவெடுத்தது 10ம் நூற்றாண்டில் தான். இதன் தனித்துவம் என்னவென்றால் சதுரமான அடித்தளத்தில் வட்ட வடிவிலான 4 tower-கள் இருப்பதுதான். St. Matthew, St. John, St. Mark, மற்றும் St. Luke என்று பெயரிடப்பட்ட இந்த நான்கும் தான் அவை.

இந்த பிரமாண்ட மாளிகையை அடைவதற்கு ஒரு பாலம் அமைத்திருக்கின்றனர்.இந்த பாலத்தில் கறுப்பர்கள் திருவிழா சந்தைகளில் விற்பது போல கைப்பைகள், துணி வகைகள் தொலைபேசிகள் என பலவிதமான பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். வழியில் ஒருவர் இத்தாலிய கஸ்டானியா விற்றுக் கொண்டிருந்தார். இத்தாலிய கஸ்டானியாவை வாங்கி சுவைத்துக் கொண்டே பாலத்தின் ஓரத்தில் அமர்ந்து இந்த மாளிகையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த மாளிகையின் வாசலிலிருந்து ஏறக்குறைய 50 மீட்டர் தூரத்தில் தான் vatican city இருக்கின்றது. t.Basilica தேவாலயத்தின் முகப்புப் பகுதியை அங்கிருந்தே ஓரளவு பார்க்க முடிந்தது.

அந்தப் பகுதியையெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு சுவையான இத்தாலிய உணவைத் தேடி நடக்க ஆரம்பித்தேன். சற்று வாகனங்களின் சத்தமில்லாத அழகிய ஒரு இத்தாலிய உணவகம் தென்பட்டது. இத்தாலிக்கே உரிய அலங்காரத்துடன் இந்த உணவகம் காட்சியளித்தது. இத்தாலிய உணவு வகைகளில் பல வகை உண்டு அல்லவா? அதில் பிரத்தியேகமானதை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற திட்டம் இத்தாலிக்கு வருவதற்கு முன்பே இர்ந்ததால், மெனுவைப் பார்த்து Gnochhi பாஸ்டா தருமாறு கேட்டுக் கொண்டேன். பொதுவாகவே பாஸ்டா வகையறாக்களை சைவமாகவே தயாரிப்பதால் எனக்கு உணவைத் தேடுவதில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படவில்லை. [இத்தாலிக்கு வருபவர்கள் சைவ உணவு கிடைக்காதோ என கொஞ்சமும் கவலைப்படத் தேவையில்லை. Pizza, Pasta, Spegheti, Macroni எனப் பலவகையான உணவு வகைகளை நாம் கேட்டுக் கொண்டால் சைவமாகவே தயாரித்துக் கொடுக்கின்றனர்]

சுவையான உணவுக்குப் பின்னர் இரவின் வெளிச்சத்தில் St.Angelo, மற்றும் அருகில் இருந்த ஏனைய இடங்களுக்கும் சென்று ரோமானிய கலைத்தன்மையையும் அதன் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு சிலையும் அழகையும் பார்க்கும் போது அதனை உருவாகியவனின் கற்பனையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இரவில் ரோம் நகரைப் கட்டாயம் பார்க்கத்தான் வேண்டும். பகலில் பார்ப்பதை விட இரவில் தான் அதன் அழகு மேலும் கூடிகின்றது என்பதை நேராகவே பார்த்து தெரிந்து கொண்டேன். தொடரும்...
No comments:
Post a Comment