ரோம் நகர மையத்தில் பலர் இம்மாதிரியான வேஷங்களோடு செல்வதைக் காணமுடிகின்றது. சாலைகளிலேயே நின்று கொண்டு வேடிக்கை காட்ட ஆரம்பித்து விடுகின்றனர். வருவோர் போவோர் இந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு காசு போட்டு விட்டுச் செல்கின்றனர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டே Victor Emmanuel II நினைவகம் வந்து சேர்ந்தேன். மிகப் பெரிய செம்பால் ஆகிய 2 குதிரைகள் இந்த கட்டிடத்தின் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன. தூரத்திலிருந்தே இதனைக் காண முடிகின்றது. இந்த பிரமாண்டமான நினைவுச் சின்னம் Giuseppe Sacconi என்பவரால் (1885-1911) வடிவமைக்கப்பட்டது. வெள்ளை பளிங்கினால் இம்மாளிகையின் பெரும் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு ரோமானிய கலையழகைச் சொல்லும் மற்றொரு இடமான Fontana Di Trevi பார்க்கக் கிளம்பினேன். சற்று களைப்பாக இருந்தாலும் இந்த இடத்தை வந்து சேர்ந்ததும் இவ்வளவு தூரம் நடந்தது வீண் போகவில்லை என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். அத்தனை அழகு இந்த இடம். இந்த Fontana விற்கு ஒரு சிறப்பு கதையும் இருக்கின்றது. யார் ஒருவர் இந்த நீரை அருந்துகிறார்களோ, அல்லது இந்தக் குளத்தில் காசு போடுகின்றார்களோ அவர்கள் மீண்டும் ரோம் வருவர் என்பது இங்குள்ள ஐதீகம். Salvi எனும் கட்டிடக் கலைஞனால் இந்த இடம் 1735-ல் உருவாக்கப்பட்டது. இதன் அழகைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த ஒரு இத்தாலிய உணவகத்தில் இத்தாலிய Milch Caffee சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நடந்து வந்த களைப்பேல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாய் பறந்து கொண்டிருந்தது.
தொடரும்..
No comments:
Post a Comment