Wednesday, October 8, 2003

இத்தாலி - [Oct 3-5] - 3

40 வயது மதிக்கத்தக்க இரண்டு இத்தாலிய ஆண்களும் 1 இளைஞனும் ஒரு முதியவரும் எனக்கு அருகாமையில் வந்து அமர்ந்தனர். அதில் ஒருவரின் இடத்தில் ஏற்கனவே மற்றொறு 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரது இருக்கைக்கு அவர் reservation செய்யவில்லை. ஆனால் புதிதாக வந்த இந்த 4 பேரும் அவர்களுக்கான இருக்கைகளை ஏற்கனவே reservation செய்திருக்க வேண்டும். தனது இருக்கையில் வேறொறுவன் அமர்ந்திருப்பதைப் பார்த்த உடனே அந்த 40 வயது மதிக்கத்தக்க, நீளாமான கூந்தலைக் கொண்ட மனிதருக்கு தாங்க முடியாத கோபம் வந்திருக்க வேண்டும். இத்தாலிய மொழியில் சண்டை போட ஆரம்பித்து விட்டார்.

பாவம் அங்கு அமர்ந்திருந்த அந்த மனிதர். உடனே தனது பையைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து நகர ஆரம்பித்து விட்டார். அவர் சென்று விட்ட பின்னரும் கூட இவருக்குக் கோபம் தீரவில்லை. தொடர்ந்து திட்டிக் கொண்டே அதுவும் உரக்கக் கத்தி திட்டிக் கொண்டேயிருந்தார். [ஜாக்கிரதை.. இத்தாலியில் பயணம் செய்து கண்டிப்பாக உங்கள் இருக்கைகளை முன்கூட்டியே reserve செய்து விடுங்கள்]

பொதுவாக ஜெர்மனியில் பொதுவாகனங்களில் பயணிக்கும் போது ஜெர்மானியர்கள் சத்தம் போட்டு பேசிக் கேட்டதில்லை. தங்களுக்குள் கதை பேசிக்கொண்டாலும் சத்தம் குறைத்து மிக மிக அமைதியாகத்தான் பேசுவர். யாராவது கொஞ்சம் சத்தமாகப் பேசி விட்டால் போதும் உடனே திரும்பிப் பார்ப்பர்; அதிலும் கொஞ்சம் கோபமாக முறைத்துப் பார்ப்பதுதான் அவர்களுடைய வழக்கம். அப்படிப்பட்ட மேற்கத்தியர்களுடனே வாழ்ந்து கொண்டிருந்து விட்டு இப்போது மிகச் சகஜமாக சத்தம் போட்டு பேசும் இந்த இத்தாலியர்களைப் பார்த்தபோது கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது; நமது கிராமத்து மக்களைப் பார்ப்பது போன்று.

4 மணி நேர இரயில் பயணம் அது. அதில் இந்த 4 பேரும் வந்து ஏறி அமர்ந்த நிமிடத்திலிருந்து ஓயாமால் காதை பேசிக் கொண்டே வந்தது சற்று ஆச்சரியமாகத் தான் இருந்தது. போதாக் குறைக்கு எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு இத்தாலியப் பெண்ணையும் அவர்கள் விட்டு வைக்க வில்லை. அவளிடமும் பேச்சுக் கொடுத்து அவர்களுடைய உரையாடலில் சேர்த்துக் கொண்டனர். நானும் அவர்களுடைய உரையாடலில் சேர்ந்து கொள்வேனா என்ற எதிர்பார்ப்பில் அவ்வப்போது என்னையும் பார்த்து சிரித்து வைத்துக் கொண்டனர். எனக்கு இத்தாலிய மொழி புரியாது என்பதை எந்த உணர்ச்சியும் எனது முகத்தில் காட்டாததை வைத்து ஒரளவு உணர்ந்திருக்கக் கூடும். இப்படியே சுவாரஸ்யம் குறையாத பொழுது போக்கு அம்சம் ஒன்று அறங்கேறிக் கொண்டிருக்க நான் ஜே.கே யின் 'Letters to The School' நூலை படித்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தை படித்து முடிக்கும் போது, இரயில் உலகப் பிரசித்தி பெற்ற Rome நகரை மெல்ல நெருங்கிக்கொண்டிருந்தது.

No comments:

Post a Comment