காலை 8 மணிக்கெல்லாம் வேலையைத் தொடங்கி விட்டோ ம். எங்கள் இருவரோடு மேலும் Stefan, Daniel என்ற இரண்டு வன்பொருள் பொறியியலாளர்களும் சேர்ந்து கொண்டனர். 5 மணிக்கெல்லாம் வேலையை முடித்து விட்டு மாலையில் நகரைச் சுற்றிப்பார்க்கலாம் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் இந்த ஆசையையெல்லாம் கனவாக்கும் வகையில் எதிர்பாராத பிரச்சனைகளை வரிசையாக கணினி கொடுக்க ஆரம்பித்தது. ஒரு வழியாக ஏழு மணியளவில் வேலை ஒரு முடிவுக்கு வந்தது. மதியம் நல்ல உணவு சாப்பிட வாய்ப்பு கிடைக்காததால் நல்ல இரவு உணவுக்காக காத்திருந்தோம். எங்களது சுவிஸ் அலுவலக மானேஜர் மார்க்குஸ் எங்களுக்கு இரவு உணவு விருந்தளிப்பதாக காலையிலேயே கூறியிருந்தார்.
அன்றைக்கான வேலை திருப்திகரமாக திட்டமிட்டபடி முடிவடைந்த திருப்தியில் மார்க்குஸோடு Basel நகரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம். எங்களின் நல்ல நேரம்; அப்போது மிகப் பெரிய திருவிழா Basel-ன் மிக முக்கிய நகரான Freier Strasse முழுதையும் ஆக்கிரமித்திருந்தது. பல விதமான கேளிக்கை விளையாட்டுக்கள் விளையாடுகின்ற மக்கள் கூட்டத்தில் புகுந்து ரைன் நதிக் கரையை அடைந்தோம். ரைன் நதியை ஒட்டியது போல Munster என்று அழைக்கப்படும் தேவாலயம் ஒன்றும் இங்கு இருக்கின்றது. அதனை ரசித்து விட்டு, ராட்டினத்தில் ஏறி மூன்று பேரும் ஒரு சுற்று வந்தோம்.
சுவிஸர்லாந்தில் புகழ் பெற்ற உணவு வகைகளின் Fondue மிக முக்கியமானது. இந்த உணவை தயாரிப்பது எளிமையான காரியம் அல்ல. இதனைக் கேள்விப்பட்டிருக்கின்றேனே தவிர இது வரை சாப்பிட்டதில்லை. ஆக Fondue சாப்பிடுவோம் என்ற எனது ஆலோசனையைப் பீட்டரும் மார்க்குஸும் ஏற்றுக் கொள்ள பாரம்பரிய உணவுகளை விற்கும் உணவு விடுதிக்குச் சென்றோம்.

Fondue என்பது முக்கியமாக சீஸ் பயன்படுத்தி செய்யப்படும் ஒரு உணவு. கூடை நிறைய சிறிய துண்டுகளிலான ரொட்டித் துண்டுகளை தருகின்றனர். அதோடு தொட்டுக் கொள்வதற்குச் சிறப்பான முறையில் தயாரித்த கொதித்துக் கொண்டிருக்கும் சீஸ். இதனை சாப்பிடுவதற்கென்றே தனிப்பட்ட ஒரு நீளமான கரண்டியும் இருக்கின்றது. பல வகையான சீஸ் வகைகளை நான் ஜெர்மனியில் சாப்பிட்டிருக்கின்றேன். ஆனால் இந்த சீஸில் இருக்கும் புளிப்புத்தன்மையை இது வரை அனுபவித்ததில்லை. சாப்பிட்டு முடிக்கும் வரை இந்த சீஸ் கொதித்துக் கொண்டே இருக்கும் வகையில் ஒரு குட்டி அடுப்பையும் கொடுத்து விடுகின்றனர். வித்தியாசமான இந்த உணவு வகையை சுவிஸர்லாந்து வருகின்ற அனைவருமே முயற்சி செய்து பார்க்க வேண்டும்.
தொடரும்...
No comments:
Post a Comment