Saturday, November 15, 2003

Travelog - Basel, Swizerland 5 [6 - 10 Nov]சுவிஸர்லாந்து அதன் சுற்றிலும் இருக்கும் ஸ்பெய்ன், ப்ரான்ஸ் ஜெர்மனி ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் ஒரு சிறிய நாடுதான். சிறியதாக இருந்தாலும் அரசாங்க மேளாண்மைக்காக இதை 23 சிறிய கண்டோ ன்களாகப் ( ~மாநிலங்கள்) பிரித்திருக்கின்றனர். அந்த வகையில் பாசலும் ஒரு தனி கண்டோ ன் என்றே குறிப்பிடப்படுகின்றது. பாசல் நகரத்தின் மொத்த சுற்றளவு 555km. இந்த கண்டோ னின் தேசிய மொழி ஜெர்மன். [சுவிஸர்லாந்தில் ஜெர்மன், ப்ரெஞ்ச், இத்தாலி அதோடு மேலும் சில எனக்குப் பெயர் தெரியாத மொழிகளும் தேசிய மொழிகளாக அந்தந்த கண்டோன்களினால் தேசிய மொழிகளாகக் கொள்ளப்படுகின்றன.]

பாசலைப் பொருத்தவரை இது மேலும் இரண்டு சிறிய கண்டோ ன்களாகப் பிரிக்கப்பட்டு ஆட்சி தனித்தனியாக செய்யப்பட்டு வருகின்றது. Basel Stadt என்ற ஒன்றும் Base Land என்ற மற்றொன்றும் தான் அவை. இந்த வகையில் சிறிய சிறிய அமைப்புக்களாகப் பிரிக்கும் போது மேளாண்மை, ஆட்சி அமைப்புக்கள், சட்ட திட்டங்கள் போன்றவை சற்று எளிமையாகவே கடைபிடிக்கப்பட முடிகின்றது.

பாசலின் மிக முக்கிய சாலையான Freier Strasse-வில் தற்பொழுது 10 திரையரங்குகளைக் கொண்ட ஒரு மிகப் பெரிய கட்டடம் கட்டப்படுவதற்காக பாசல் கண்டோன் முயற்சியில் இறங்கியிருக்கின்றதாம். ஆனால் Basel Stadt மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் தெரிந்து கொண்டேன். சுவிஸர்லாந்தில் எனக்குத் தெரிந்தவரை மக்கள் தீர்ப்புத்தான் மகேசன் தீர்ப்பு. அரசாங்கம் எந்த ஒரு காரியத்தையும் மக்கள் ஒப்புதல் இன்றி செய்துவிட முடியாது.

எங்கள் வேலை எதிர்பார்த்ததை விட சற்று சிரமமாகித்தான் போனது. 7 மணி அளவில் டேனியலும் ஸ்டெபானும் தங்களின் வேலையை முடித்து விட்டு கிளம்பி விட்டனர். நானும் பீட்டரும் தொடர்ந்து எங்கள் வேலையில் மூழ்கிப் போனோம். அன்றைய வேலையை முடிப்பதற்கு இரவு 12:15 ஆகிவிட்டது. பாசல் சாலைகளில் உணவுக்கடையைத் தேடி நடக்க ஆரம்பித்தோம். பல கடைகள் அந்த இரவு வேளையிலும் திறந்திருந்தன. சற்று வித்தியாசமாகப் பட்ட ஒரு கடைக்குள் நுழைந்தோம். லெபனானினிய உணவு விடுதி அது. மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட சுவர்கள்; இந்திய பாரம்பரியத்தோடு ஒட்டியது போன்ற கலைப்பொருட்கள் எல்லா மூலைகளிலும் வைக்கப்படிருந்தன.

மெனுவைப் பார்த்தால் எந்த உணவுமே புரியாத ஒன்றாகவே இருந்தது. சைவமாக எதையாவது செய்து கொடுங்கள் என்று எனது கோரிக்கையை வைத்து விட்டு காத்திருக்க புழுங்கல் அரிசி சாதமும் சாலட்டும் தயிர் பச்சடியும் கிடைத்தது. லெபனானிய உணவு வகையிலும் தயிர் முக்கிய அங்கமாக இருப்பதை நினைத்து சற்று ஆச்சரியமாக
இருந்தது.வேலை செய்த களைப்பும் பசியும் இருந்ததால் மிகச் சாதாரணமான அந்த உணவும் அப்போது அமிர்தமாகவே எனக்குத் தோன்றியது. சாப்பிட்டு விட்டு எங்கள் தங்கும் விடுதியை நோக்கி நடந்து வருகையில் சாலையின் மூலைகளில் மக்கள் கூட்டம் நின்று கொண்டு வானத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தைக் காண முடிந்தது. என்ன அதிசயம் வானத்தில் என்று பார்த்த எங்களுக்கு ஒரே ஆச்சரியம்.
சந்திர கிரகணம் தோன்றியிருந்தது. இதுவரை நான் நேராக சந்திர கிரகணத்தைப் பார்த்ததில்லை. நிலவில் ஒரு சிறு பகுதியே தெரிந்திருக்க மற்ற பகுதிகளெல்லாம் மறைந்து மிக மிக மிக அழகான, அற்புதமான ஒரு காட்சியை கண்டேன். என் வாழ்க்கையில் இதுவும் ஒரு மறக்க முடியாத நாளாகிப் போனது!

No comments:

Post a Comment