Thursday, January 1, 2004

Travelog - Seoul, S.Korea 6




கலாச்சாரமும் பண்பாடும் ஒவ்வொரு நாட்டிற்கும் அதனதன் தனித்துவத்தை வெளிக்காட்டும் முக்கிய அம்சங்களாக அமைந்து விடுகின்றன. கொரியர்கள் தங்களுக்கே உரிய பரம்பரிய விஷயங்களை இன்றளவும் நடைமுறையில் வைத்திருப்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகவே தோன்றுகின்றது. கொரியர்களுக்கென்று தனிப்பட்ட இசை, நடனம், பாரம்பரிய ஆடைகள், வாழ்க்கை முறை, பெயர்கள், கைவினைப் பொருட்கள் இப்படி பல விஷயங்கள் அவர்களை மற்ற இனத்தவரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக அமைந்திருக்கின்றன.

பெரும்பாலான கொரியர்களின் குடும்பப்பெயர்களைச் சிறிய பட்டியலாக்க முடியும். தென்கொரியா சுற்றுலா வழிகாட்டியின் அறிக்கையின்படி Kim எனப்படும் குடும்பப்பெயர் கொண்டோ ர் ஏறக்குறைய 21 விழுக்காட்டினர் உள்ளனர். Yi (அல்லது Lee அல்லது Rhee) ஏறக்குறைய 14 விழுக்காட்டினர். Park (அல்லது Pak) ஏறக்குறைய 8 விழுக்காட்டினர். Choi ( அல்லது choe) Joong (அல்லஹு Chung), Jang (அல்லதுChang), Han, Lim, போன்றவை பிற. ஒரு கொரிய பெயர் எப்போதும் குடும்பப் பெயரோடுதான் தொடங்கும். திருமணமான பிறகும் பெண்கள் தங்கள் குடும்பப்பெயரை மாற்றிக்கொள்வதில்லை. அவர்கள் தங்களுடைய குடும்பப் பெயரையே வைத்திருக்கின்றனர். ஆனால் பிறக்கின்ற குழந்தைகளுக்குத் தந்தையின் குடும்பப்பெயரை தான் முதற்பெயராக வைக்கின்றனர். ஜெர்மனியில் இப்படியில்லை. பொதுவாகவே திருமணம் நடக்கும் போது பெண், மணமகனின் குடும்பப்பெயரை எடுத்துக் கொள்ளவேண்டும். திருமணம் ஆனபிறகு அவர்களுக்கு ஒரு குடும்பப்பெயர் தான் இருக்கும். குழந்தைகளும் இதையே வைத்திருப்பர்.(ஆனால் இதிலும் இப்போது மாற்றம் வந்து கொண்டிருக்கின்றது. திருமணம் செய்து கொள்ளும் ஆண் பெண்ணின் குடும்பப்பெயருக்கு மாறிக்கொள்வதும் இப்போது இங்கே அதிகரித்து வருகின்றது)

சியோல் நகரின் தெருக்களில் நடந்து செல்லும் போதே பல கடைகளில் அழகான கொரிய பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்வதைக் காணமுடியும். இந்த வகை ஆடைகளை அணிந்த பெண்களைச் சாதாரணமாக சாலைகளில் காணமுடிவதில்லை. இதற்கு குளிர் காரணமா அல்லது இவர்கள் இதனை அணிய விரும்புவதில்லையா எனத் தெரியவில்லை.




பெண்கள் அணிந்து கொள்ளும் இந்த உடைக்கு hanbok என்று பெயர். ஆண்கள் அணிந்துகொள்ளும் பண்பாட்டு உடைக்கு jeogori-baji என்று பெயர். திருமணத்தின் போது கட்டயமாக இந்த உடை அணிந்து கொள்வார்கள் போலும். நூறு அண்டுகளுக்கு முன்னர் இன்றைய நாகரீக உடைகள் தென்கொரியாவிற்கு அறிமுகமாவதற்கு முன்னர் பெண்கள் இவ்வகை ஆடைகள் தான் அன்றாடம் அணிந்திருப்பார்களாம். ஆனால் இப்போது நிலமை மாறிவிட்டது. அதிகமாக இந்த வகை ஆடைகள் பயன்படுத்தப்படாத போதும் இதனை விற்பனை செய்யும் கடைகள் பல இருப்பது ஆச்சரியமாகவே இருக்கின்றது. இந்த உடையைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த வலைப்பக்கத்திற்குச் செல்க!

No comments:

Post a Comment