Saturday, December 3, 2011

திருவண்ணாமலை பதிவுகள்

திருவண்ணாமலை பதிவுகள் அனைத்தும் தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இங்கே உள்ளன.

[மின்தமிழ் மடலாடற் குழுவில் இப்பதிவுகளையும் கேள்விகள் இவை தொடர்பான கலந்துரையாடல்களை இங்கே காணலாம். ]

திருவண்ணாமலை பதிவுகள் வெளியீடுகளின் வழி எனது 2011 மார்ச் மாத தமிழக பயணத்தின் போது நான் பதிந்து வந்த தகவல்களை தயாரித்து தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்த்தில் இணைத்து வைத்துள்ளதோடு உங்களிடமும் பகிர்ந்து கொண்டேன். உங்களின் பின்னூட்டங்களும் கேள்விகளும் பதில்களும் ஊக்கமளிப்பவையாக இருந்தன. நமது வலைத்தளத்திலும் திருவண்ணாமலைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் சில இடம்பெற இந்த முயற்சி உதவி உள்ளது.

இந்தப் பதிவின் தொடரை இத்துடன் நிறைவு செய்ய விரும்புகிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் இவ்வளவு தானா என நினைத்து விட வேண்டாம். எனது பதிவுகள் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து சில பதிவுகளையும் குறிப்புக்களை அவ்வப்போது நாம் இணைத்து வரலாம்.

எனது பயணத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் இப்பகுதிக்குச் சென்று சில பதிவுகளை ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்களுடன் திரு.உதயன், திரு.துரை திரு.ப்ரகாஷ் ஆகியோர் சென்று கேட்டு தகவல் பெற்று வந்துள்ளனர். அந்தத் தகவல்களையும் பதிய வேண்டும். அதுமட்டுமல்லாது மின் தமிழ் வாசகர்கள் நீங்கள் உங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செல்லும் வாய்ப்பு அமைந்தால் அங்கு நீங்கள் காணும் வரலாற்று விஷயங்களைப் பதிந்து வந்து இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்பயணத்தின் போது என்னுடன் உடனிருந்து உதவிய நண்பர்களின் அன்பையும் ஆதரவையும் மறக்க முடியாது. அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குடும்பத்தினரின் இணைந்த பணி இது என்றாலும் எனக்கு மன நிறைவளிக்கும் வகையில் பயணத்திலும் உதவிய இவர்களை மீண்டும் நினைத்துப் பார்த்து நன்றி கூற விரும்புகிறேன்.



எங்களை சென்னையிலிருந்து திருவண்ணாமலை அழைத்துச் சென்று பயணத்தில் கூடவே இருந்து வாகனமோட்டி உதவி செய்தவர் இவர். ஒரு முன்னாள் ராணுவ வீரர்.

அவ்வப்போது ஏதாவது வித்தியாசமான விஷயங்களை நான் பார்த்து விட்டால் வாகனத்தை நிறுத்தச் சொல்லி கேட்டுக் கொள்வேன். சலிக்காமல் வாகனத்தை நிறுத்தி நான் புகைப்படங்கள் எடுத்து முடித்து வரும் வரை காத்திருந்து அழைத்துச் சென்றார்.


ஒரு சமயம் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது வாகனத்தை நிறுத்தி என்னிடம் தன்னை ஒரு படம் எடுக்க முடியுமா எனக் கேட்டார். அந்தப் படம் தான் நீங்கள் இங்கே பார்ப்பது.

இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் கார்கில் போரில் வீரமரணம் அடைந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ப.கிருஷ்ணன் அவர்களின் உருவச்சிலை. இங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு அவருக்கு இராணுவ முறையில் வணக்கம் தெரிவித்தார். பின்னர் ஒரு புகைப்படம் எடுக்கச் சொல்லி கேட்டுக் கொண்டார். அவரது நாட்டுப் பற்று மனதை நெகிழ வைத்தது.


திருவண்ணாமலை மாவட்டக் கலெக்டர் டாக்டர்.ம.ராஜேந்திரன் (மார்ச் 2011). எங்கள் பயணத்தின் பதிவுகளுக்கான எல்லா உதவிகளையும் ஏற்படுத்திக் கொடுத்ததோடு மட்டுமல்லாது எங்களை வீட்டிற்கு அழைத்து அருமையான விருந்தும் பரிமாறினார். இவரது அன்பான துணைவியாரின் மதுரை நகர சமையலின் காரத்தை ரசித்து ருசித்து சாப்பிட்டேன். இவரது மகள் வரலாற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட குழந்தை. திறமை மிக்கவள். இவர்கள் இனிதே பல்லாண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.


திருமதி.புனிதவதி இளங்கோவன். எங்களுடன் பயணத்தில் இணைந்து கொண்டவர். எனது பேட்டிகளின் போது பல்வேறு கோணங்களில் கேள்விகளை எழுப்பி பதிவுகள் சிறப்பாக வந்திட துணை புரிந்தார். இவர் ஒரு தகவல் பொக்கிஷம். சைவ சித்தாந்தம் தேவாரத் திருமுறைகள், வரலாறு, பெண்ணியம் என பல துறை வல்லுனர். முன்னாள் தமிழ்நாடு ஆல் இந்தியா ரேடியோ இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது நட்பு கிடைத்ததில் நான் மனம் மகிழ்கிறேன்.


அட்வகேட் ஷங்கர். நான் எதிர்பார்க்காத நேரத்தில் எங்களுடன் இணைந்து கொண்டு திருவண்ணாமலை கோயிலைப் பற்றிய நல்ல அறிமுகத்தை எனக்கு வழங்கினார். இவரை அறிமுகம் செய்து கொண்டதில் மிகவும் மகிழ்கிறேன்.

ப்ரகாஷ் சுகுமாரன். மின்தமிழில் எனக்கு அறிமுகமாகி சீத்தாம்மா வழியாக நல்ல நட்பாக உறுவாகி இருப்பவர். என்னை சென்னையிலிருந்து அழைத்துச் சென்று கூடவே இருந்து எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து பல செய்திகளை அவ்வப்போது வழங்கிக் கொண்டும் இருப்பவர். நன்றி ப்ரகாஷ்.


ஸ்ரீமதி சீதாலட்சுமி அவர்கள். திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நான் செல்ல காரணமாக இருந்தவர். இவரது ஆக்கமும் ஊக்கமும் எனது இயற்கையான வேகத்தை மேலும் அதிகப் படுத்தும் தன்மை கொண்டது. இவரது துணையுடன் மேலும் பல பதிவுகள் இன்னமும் செய்வோம்.

சீதாம்மா - மீண்டும் தமிழகம் வரும் போது மீண்டும் இணைந்து சில காரியங்களை நாம் செய்ய வேண்டும். செய்வோம். உங்களுக்கு இறைவன் திடமான உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டும் என்று ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
சுபா

No comments:

Post a Comment