Sunday, July 1, 2012

லா பல்மாவில் நடையாக நடந்த கதை - 9


சாண்டா க்ரூஸ்



லா பல்மா தீவின் தலைநகரம் சாண்டா க்ரூஸ். இத்தீவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது இந்நகரம். கடற்கரை துறைமுக நகரம் இது. மே மாதம் 3ம் நாள் 1493ம் ஆண்டில் Alonso Fernández de Lugo இத்தீவைக் கைப்பற்றி உருவாக்கிய நகரம். ஏனைய கனேரி தீவிகளைப் போலவே இத்தீவும் கடற்கொள்ளையற்களின் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு நகரம். அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமிடையிலான வர்த்தகப் போக்குவரத்துக்கு முக்கியமாக விளங்கிய, விளங்கிவரும் ஒரு துறைமுக நகரம் இது.



வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துப்படி இது மிகப்பழமையான ஒரு நகரமாகக் கருதப்படுகின்றது. பழங்குடி மக்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையும் இப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

1553ம் ஆண்டு ஜூலை 21ம் நாள் இந்தத் தீவை 700 பேர் கொண்ட ப்ரென்ச் படை ஆக்கிரிமித்தது. 9 நாள் நடைபெற்ற போரில் இந்த நகரத்தையே முற்றிலும் அழித்துச் சென்றது இப்படை. இந்த அழிவுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட நகர் தான் இப்போது உள்ள சாண்டா க்ரூஸ். அதற்குப் பின்னர் இந்த நகரம் ஒரு துறைமுக நகரமாக விரிவாக வளர்ச்சியடைந்ததோடு அக்கால கட்டத்தில் உலகிலேயே மூன்றாவது மிக முக்கிய துறைமுகமாக விளங்கியது என்பது வியக்க வைக்கின்றது.

நாங்கள் லா பல்மாவில் இருந்த நாட்களில் மூன்று முறை சாண்டா க்ரூஸ் சென்று வந்தோம். ஒரு தலைநகருக்குரிய எல்லா அம்சாங்களும் உள்ள ஒரு சிறு நகரம் இது. பொருட்காட்சி சாலைகள், நகர மையம், டவுன் ஹால், கத்தோலிக்க தேவாலயங்கள், வரலாற்று சின்னமாகத் திகழும் கட்டிடங்கள், தற்கால வாழ்க்கை முறைக்குத் தேவையான நவீன அங்காடிக் கடைகள், உணவகங்கள், சாலையோர இசைக் கலைஞர்கள், வரலாற்றில் இடம் பெறுபவர்களின் சிலைகள் என்று பார்க்க நிறைய அம்சங்கள் நிறைந்த ஒரு நகரம் இது.



சாண்டா க்ரூஸ் நகரத்தின் வீடுகளின் கட்டிட அமைப்பு ஒரே வகையாக அமைந்திருப்பதையும் முன்பக்கத்தில் பால்கனி வைத்து அதில் பூக்கள் கொண்டு அலங்கரித்திருப்பதையும் நகர் முழுதும் காணலாம். இவ்வகை கட்டிடக் கலை இங்கு ப்ரத்தியேகமாக அமைந்துள்ளதோடு இது சுற்றுலா பயணிகளைக் கவரும் ஒரு அம்சமாகவும் திகழ்கிறது. என்னைப் போலவே பலர் கேமராவின் லென்ஸைத் திருப்பி மாற்றி படம் எடுத்துக் கொண்டு செல்வதைப் பார்த்துக் கொண்டே நானும் பல படங்களை எடுத்துக் கொண்டேன்.



லா பல்மா தீவு முழுதுமே மிகத் தூய்மையாக, சாலைகளில் எங்கனுமே குப்பைகளைப் பார்க்க முடியாத படி நேர்த்தியாகப் பாதுகாக்கப்படுகின்றது. தலைநகரத்திலும் இதே நிலைதான். சாலைகள், கடைத்தெருக்கள், துறைமுகப்பகுதி, உணவகத்தின் சுற்றுச் சூழல் எல்லாமே மிகத் தூய்மையாக அமைந்து மிக ரம்மியமான அனுபவத்தை உருவாக்குவதாக அமைந்துள்ளது.

சாண்டா க்ரூஸ் நகர மத்தியில் வரலாற்றுச் சின்னங்களும் கட்டிடங்களும் அமைந்துள்ள பகுதியில் தான் 16, 17ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடங்கள் பல இருக்கின்றன. கனேரி தீவுகளுக்கே உறிய கட்டிடக் கலை அமைப்பை காட்டும் அழகான கட்டிடங்கள் இவை. பொதுவாகவே வெள்ளை நிறத்திலும் இடைக்கிடையே எரிமலைக் கற்களை இணைத்த கரும் பகுதிகளும் இணைந்ததாக அமைவது கனேரித் தீவுகளின் கட்டிடக் கலை. இந்த வகை கட்டிடங்கள் சூழ்ந்ததாக இப்பகுதியில் பல கட்டிடங்கள், தேவாலயங்கள் ஆகியவை இருக்கின்றன.



இப்பகுதியில் தான் டவுன் ஹால் கட்டிடமும் உள்ளது. இக்கட்டிடம் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அரசர் இரண்டாம் பிலிப் அவர்களின் காலத்தைச் சார்ந்தது. டவுன் ஹால் கட்டிடத்தின் எதிர் புறத்தில் எல் சல்வடோர் தேவாலயம் இருக்கின்றது. கத்தோலிக்க கிறிஸ்துவ சமய வழிபாடுகள் இன்றளவும் இத்தேவாலயத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

லா பல்மா செல்பவர்கள் சாண்டா க்ரூஸ் நகரைச் சுற்றிப்பார்ப்பதற்காக ஒரு நாள் ஒதுக்கிக் கொள்ளலாம். நகரின் அருகாமையிலேயே அமைந்துள்ள மலைப்பகுதிக்கு நடைப்பயணம் செய்வதற்கும் வாய்ப்புக்கள் உள்ளதால் நகரைச் சுற்றிப் பார்த்து நடைப்பயணமும் மே|ற்கொண்டு வரலாம். சாண்டா க்ரூஸில் தான் இத்தீவின் விமான நிலையமும் அமைந்துள்ளது. துறைமுகம், விமான நிலையம், வர்த்தகம், கலை பண்பாட்டு விஷயங்கள் என பல வகையில் முக்கியத்துவம் கொண்டதாகத் திகழ்கின்றது சாண்டா க்ரூஸ்.

தொடரும்..

சுபா

1 comment:

விச்சு said...

சாண்டா க்ரூஸ் நகரம் பார்க்கவே அருமையாக உள்ளது. பால்கனியில் பூக்கள் வைத்திருக்கும் அவர்களின் ரசனை சூப்பர்.

Post a Comment