Friday, September 12, 2014

காண்டெபெரி - யாத்திரை செல்வோமா..! - 4

யாத்திரை தொடர்கின்றது - 4

காண்டபெரி ராஜா ராணி கதையைத் தொடர்கிறேன்...

கி.பி 3ம் நூற்றாண்டு வாக்கிலே தற்போதைய காண்டபெரி நகரிலே அடிப்படையில் ஜெர்மனியின் வடக்குப் பகுதியிலிருந்து வந்து சேர்ந்த யூட்டஸ், சாக்ஸன்  இனக் குழுவினர் நிறைந்திருந்தனர். கி.பி. 407ம் ஆண்டு வாக்கில் காண்டபெரி நகரை விட்டு ரோமானியப் படைகள் சென்று விட்ட பின்னர் அங்கே இப்பகுதியில் ஒரு சில குடியானவர்கள் மட்டுமே விவசாயம் செய்து கொண்டு கோட்டைப் பகுதிக்கு உள்ளே வசித்து வந்தனர். இது ஒரு சிறு நகரமாக அப்போது உருவாகியிருந்தது. இந்த சாக்ஸன் இனக்குழுவைச் சேர்ந்தவர் கெண்ட் அரசர் ஏதல்பெர்ட்(Ethelbert).  இவர் அப்போதைய ப்ரான்ஸ் நாட்டின் இளவரசி   பெர்தா (Bertha) வை மணந்தார்

அப்போது ப்ரான்ஸ் கத்தோலிக்க மதத்தைத் தழுவி இருந்தது. ஆக மகாராணியார் பெர்தாவும் கத்தோலிக்க கிறிஸ்து மதத்தைச் சார்ந்தவர் என்பதை அறியலாம். சாக்ஸன் இனத்து மகாராஜா ஏதல்பெர்டோ இயற்கை  பேகன் வழிபாட்டு முறையை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

ரோம் நகரின் கத்தோலிக்க  மடம் இங்கிலாந்தின்  கெண்ட் பேரரசுக்குப் பாதிரியார் ஆகுஸ்தீன் அவர்களை அனுப்பி வைத்தது. கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவரான பெர்தா தாமும் இதே மதத்தைச் சார்ந்தவர் என்ற அடிபப்டையில் பாதிரியாரை வரவேற்றார் என்பதோடு மட்டுமல்லாமல் கெண்ட் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகளில் கத்தோலிக்க கிறிஸ்துவ மதம பரவ அரசு சார்ந்த உதவிகளையும் செய்தார். 

முதலில் காண்டெபெரி காத்தீட்ரல் காண்டெபெரி நகர கோட்டைக்குள் கி.பி 597ல் கட்டப்பட்டது.  இங்கே பாதிரியார் ஆகுஸ்தீன் சமய நடவடிக்கைகளை ஏற்படுத்தவும்  அது சமயம் இது முக்கிய இடமாகத் திகழ்ந்தது.


​கெத்தீட்ரல்


கி.பி 598ம் ஆண்டில் பாதிரியார் ஆகுஸ்தீனும் அவரோடு வந்து சேர்ந்த ஏனைய கத்தோலிக்க சாதுக்களும் காண்டெபெரி கோட்டைக்கு வெளிப்புறத்தில் ஒரு மடத்தை நிறுவினர். இந்தக் கட்டிடம் இன்னமும் இருக்கின்றது.  


St Augustine's Abbey

படிப்படியாக காண்டபெரி மிகப் பெரிய சமய மத போதனை நடைபெறும் நகரமாக உருபெற ஆர்மபித்தது. ரோம் நகரின் கத்தோலிக்க மத பீடத்திலிருந்து கொடுக்கப்பட்ட ஆணையின் படி கி.பி.603ம் ஆண்டு காண்டபெரி ஆர்ச்பிஷப் கொண்ட ஒரு தேவாலயத்தையும் உள்ளடக்கி ஒரு பெரும் கத்தோலிக்க சமய நகரமாக உயர்ந்தது.

கெண்ட் பேரரசு அதன் ஆதிக்கத்தை விரிவாக்க இங்கிலாந்து முழுமையும் கத்தோலிக்க மதம் பரவியது. போப்பின் ஆணையின் படி தொடர்ந்து பல மத போதகர்கள் வருவதும் தேவாலயங்கள் கட்டப்படுவதும் என்று கொஞ்சம் கொஞ்சமாக கத்தோலிக்க மதத்தின் ஆதிக்கம் இங்கு நிலைபெற்றது. 

இது தான் இந்த ராஜா-ராணி கதை. அடுத்து கெண்டபெரிக்கே முக்கியமான தோமஸ் பெக்கட் கதையைச் சொல்கிறேன். கேட்க ஆவல் உண்டு தானே ?

தொடரும்...

2 comments:

kumaraguruparan said...

சுபா அவர்களுக்கு, நான் கேட்டுக் கொண்டபடியே காண்டெபெரி பற்றிய பயணக் கட்டுரையைத் தொடர்கிறீர்கள். நன்றி. தாமஸ் பெகெட் கொலைக்களம் என்பதானது ஆங்கில சமூக வரலாற்றின் கறை; ஆங்கில இலக்கியத்தின் இரங்கற்பா.
ஜெர்மன் டவுன்ஹால்களைப் போலவே காண்டெபெரியும் உங்களுக்குக் காட்சியளித்திருக்கும், இதமாளிதிருக்கும் என நம்புகிறேன். சாஸர் காலத்தைய ஆங்கில எழுத்தும், பழந்தமிழ் மொழி எழுத்து போலவே மாற்றங்களுக்கு உள்ளானது வியப்பாகவே இருக்கும்.
தொடரட்டும் தங்கள் சுவையான பயணத் தொடர்.
-இரா.குமரகுருபரன் சென்னை

kumaraguruparan said...

சுபா அவர்களுக்கு, நான் கேட்டுக் கொண்டபடியே காண்டெபெரி பற்றிய பயணக் கட்டுரையைத் தொடர்கிறீர்கள். நன்றி. தாமஸ் பெகெட் கொலைக்களம் என்பதானது ஆங்கில சமூக வரலாற்றின் கறை; ஆங்கில இலக்கியத்தின் இரங்கற்பா.
ஜெர்மன் டவுன்ஹால்களைப் போலவே காண்டெபெரியும் உங்களுக்குக் காட்சியளித்திருக்கும், இதமளித்திருக்கும் என நம்புகிறேன். சாஸர் காலத்தைய ஆங்கில எழுத்தும், பழந்தமிழ் மொழி எழுத்து போலவே மாற்றங்களுக்கு உள்ளானது வியப்பாகவே இருக்கும்.
தொடரட்டும் தங்கள் சுவையான பயணத் தொடர்.
-இரா.குமரகுருபரன் சென்னை

Post a Comment