Tuesday, June 7, 2016

அயர்லாந்தின் அழகில்...! மொஹீர் மலை 18

லிமெரிக் பகுதியில் பண்டைய ஈமக்கிரியை கல்திட்டை சின்னங்களைப் பார்த்து விட்டு எங்கள் பேருந்து பயணம் தொடர்ந்தது. இப்போது மழை சாரல் நின்று சற்றே வெயில் வர ஆரம்பித்திருந்தது. நாங்கள் அடுத்துச் செல்ல பயணத்தில் திட்டமிடப்பட்டிருந்த பகுதி மொஹிர் மலை உச்சி. எங்கள் பயணம் அயர்லாந்தின் மேற்கு பகுதியில் தொடர்ந்தது. 

அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒட்டிய நிலப்பகுதி அது. கடல் பகுதியிலிருந்து 214மீட்டர் உயரம் அமைந்த பகுதி. அயர்லாந்தின் சுற்றுலா தலங்களில் முக்கியமான இடமாகக் குறிப்பிடப்படுவது. 


இந்த உயரமான பகுதியில் அமைந்திருக்கும் பாறைகள் அட்லாண்டிக் சமுத்திரத்தை ஒட்டினார் போல அமைந்தவை. 300 மில்லியன் ஆண்டுகள் பழமையான சிறு ஆறுகள் பாய்ந்து ஓடும் நிலப்பகுதி இது. உறுதியான பாறைகளைச் சுற்றி மணற்கல் அழுத்தம் சேர்ந்து உருவாக்கப்பட்ட இயற்கை அமைப்பாக இது அமைந்திருக்கின்றது. 

இந்தப் பகுதியில் மட்டும் இருபது வெவ்வேறு வகையான 300,000 பறவைகள் வாழ்கின்றன என்று இங்குள்ள குறிப்புக்கள் சொல்கின்றன. 

எங்களை அழைத்து வந்த பேருந்து கீழடிவாரத்திலேயே நின்று விட நாங்கள் உள்ளே சென்று கட்டணம் கட்டி டிக்கட்டை பெற்றுக் கொண்டு இப்பகுதியைக் காணச் சென்றோம். காற்று மிகப் பலமாக வீசிக் கொண்டிருந்தது. உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் இங்கே செல்ல வேண்டாம் என எங்கள் பயண வழிகாட்டி கூறியிருந்தார். 

சுற்றுப்பயணிகளைத் தவிர அங்கு வேறு யாரும் இல்லை. வீடுகளோ குடியிருப்புப் பகுதியோ ஏதும் இல்லை. வெட்ட வெளி. அட்லாண்டிக் சமுத்திரம், அந்தச் சமுத்திரத்தை அண்டிய பாறை நிலப்பகுதி, சில்லென்று வீசும் பலமான காற்று, பசுமையான புல்வெளி. 

ஏதோ புதியதொரு உலகத்திற்கு வந்து விட்டது போல மனதில் எண்ணம் தோன்றியது. 

மேலே செல்லச் செல்ல மலைப் பகுதியில் சமுத்திரத்தை அண்டிய பகுதிக்கு அருகில் வரை சென்று காணலாம். ஒரு அளவிற்கு மேல் செல்லக்கூடாது எனத் தடை ஏற்படுத்தியிருக்கின்றார்கள். காற்று பலமாக வீசும் போது மனிதர்களையும் காற்று அடித்துச் சென்று விடும் அபாயம் இருப்பதால் இத்தகைய ஏற்பாட்டினைச் செய்திருக்கின்றார்கள். 

நான் நீண்ட தூரம் பயணம் செய்து மலையுச்சியின் அழகையும் சமுத்திரத்தின் அழகையும் ரசித்தேன்.ஆயினும் காற்றின் அழுத்தம் மனதில் சிறு கலக்கத்தை ஏற்படுத்தவே செய்தது. எத்தனை ஆண்டு பழமையான அமைப்பு இது என எண்ணிப்பார்த்த போது உலகம், பேரண்டம், இந்தப் பேரண்டத்தில் உள்ள கோள்கள் என எல்லாமே என்னை வியக்கவைப்பதை மறுக்கமுடியவில்லை. எவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் ஒரு துகள் போன்று நாம் இருக்கின்றோம் என்பதுவும், நமது நிலையாமையும், நிரந்தரமற்ற மனித வாழ்க்கையின் இயல்பையும் நினைத்துக் கொண்டேன். அதற்கு மாறாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இங்கே நிற்கும் இந்த மலைகளும் சமுத்திரங்களும் ஆறுகளும் அதன் பெருமையை வெளிப்படுத்திக் கொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன. 

மலை உச்சியில் இயற்கையின் பிரம்மாண்டத்தைப் பார்த்து ரசித்து விட்டு கீழே வரும் வழியில் ஒரு பெண்மணி ஐரிஷ் இசைக்கருவி ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார். அவரது இசையை சிலர் ஓரமாக நின்று கேட்டு ரசித்து அவரது சிடிக்களை விரும்பியோர் வாங்கிக் கொண்டும் சென்றனர். 


அங்கே இரண்டு மணி நேரங்கள் செலவிட்டு இயற்கை அழகில் மனதைத் தொலைத்தபடி மீண்டும் பேருந்து இருக்கும் இடத்தை நோக்கி எங்கள் குழுவில் இருந்த அனைவரும் வந்து சேர்ந்தோம். எல்லோரும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் திரும்பியதில் எங்கள் பயண வழிகாட்டிக்கு மன திருப்தி இருந்தது முகத்தில் தெரிந்தது. மாலை வேளை நெருங்கிக் கொண்டிருந்தமையால் அங்கிருந்து புறப்பட்டு மேலும் தென் மேற்கு அயர்லாந்தில் எங்கள் பேருந்து பயணத்தைத் தொடர்ந்தது.











தொடரும்..
சுபா




No comments:

Post a Comment