Monday, August 27, 2018

ஓஸ்லோ - வைக்கிங் ஊருக்கு ஒரு பயணம் -18



ஓஸ்லோவில் இருந்த நாட்கள் இனிமையாக அமைந்தன.
நான் செல்லும் நாளில் மழை பெய்து விடுமோ என்ற ஐயம் இருந்தது. ஆனால் ஒவ்வொரு நாளும் வெயில் இதமாக அமைந்ததால் காலைத் தொடங்கி முழு நாளும் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளுக்கும், அருங்காட்சியகங்களுக்கும் சென்று அங்கு எனக்கு தேவைப்பட்ட தகவல்களை நேரில் பார்த்தும் தேடியும் அறிந்து கொள்ள முடிந்தது.
ஓஸ்லோவை மனதில் நினைக்கும் போது என் மனதை இதமாக வருடுவது அதன் கலப்படமற்ற குளிர்ந்த காற்று. இக்காற்று நம் உடலின் சுவாசத்தில் நுழைந்து உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கின்றதோ என நான் வியக்கும் வகையில் இதமான அனுபவமாக அமைந்தது.
நகரின் மையப் பகுதியிலேயே நான் தங்கியிருந்ததால், அது மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியென்பதால் பொதுமக்களை அவதானிக்க வாய்ப்பு அமைந்தது. Man watching என்போமே... அப்படி மனிதர்களின் முகங்கள், செயல்பாடுகள், நடவடிக்கைகளைப் பார்த்து ஆராய வாய்ப்பும் நிறைய கிடைத்தது.
புதிதாக அறிமுகமான திரு.ரமேஷ் சுஜா தம்பதியினரும் அவரது குடும்பத்தினர், திரு முருகையா வேலழகன் - யசோதா தம்பதியினர், நோர்வே தமிழ்ச்சங்க தோழர்கள் அனைவரின் அன்பும் மறக்கமுடியாதது.
நோர்வே தமிழ்ச்சங்க தோழர்கள் செய்ய வேண்டிய பணிகள் என சிலவற்றை குறிப்பிட்டு சொல்லியிருக்கின்றேன். நான் முன்வைத்த கருத்துக்கள் காலத்தின் தேவை என்பதை நண்பர்களும் ஆமோதித்தது மனதிற்கு உற்சாகமளிப்பதாக இருக்கின்றது.
அடுத்த முறை நோர்வே செல்லும் போது விடுபட்ட பெர்கன் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் சென்று வர விருப்பம் இருக்கின்றது. காலமும் வாய்ப்பும் அமைந்தால் விரைவில் மீண்டும் நோர்வே வருவேன்.
சுபா

No comments:

Post a Comment