Friday, July 2, 2021

பிரான்சு பயணக்குறிப்பு - 4

 லியானார்டோ டாவின்சி தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. கலையை அறிதலிலும் ஆய்வுகள் செய்வதிலும் புதிய கண்டுபிடிப்புக்களை உலகுக்கு வழங்குவதிலுமே அவரது வாழ்நாள் கழிந்தது. ஒரு மனிதரால் இவ்வளவு காரியங்களைச் செய்ய முடியுமா என்றால் முடியும் என்பதற்குச் சான்றாக லியானார்டோ டா வின்சி திகழ்கிறார்.

என்னிடம் லியானார்டோ டா வின்சி பற்றி கேட்டால் நேரம் செல்வதே தெரியாத அளவிற்குப் பேசிக் கொண்டிருப்பேன்.
லியானார்டோ டாவின்சி மோனாலிசா ஓவியத்தை வரைவதற்கு 4 வருடங்கள் எடுத்துக் கொண்டார். 1503ம் ஆண்டு தான் இந்த ஓவியத்தை அவர் வரையத் தொடங்கினார். இடையில் அவ்வப்போது ஓய்வு எடுத்துக் கொள்வது. பிறகு மீண்டும் வரைவது. இப்படியே சென்றது அவரது காலம். தான் எங்கே சென்றாலும் மோனாலிசா ஓவியத்தைக் கையோடு எடுத்துக் கொண்டே செல்வார். இறுதியில் அவர் பிரான்சுக்குத் தனது இறுதிக் காலத்தில் சென்று விட்டபோதும் அவர் கையோடு கொண்டு சென்ற சொத்து நான்கு ஓவியங்கள். அதில் மோனாலிசாவும் ஒன்று.
கலைஞர்கள் மனதில் என்னதான் ஓடிக் கொண்டிருக்கின்றது என்பதை யார் அறிவார்?
டாவின்சியின் இறுதி காலத்தில் அவரைத் தன்னோடு அழைத்துக் கொண்டார் பிரான்சு மன்னர் முதலாம் பிரான்சிஸ். அப்போது தான் கொண்டு வந்த மோனாலிசா ஓவியத்தை தனது இறுதி நாள் வரை வைத்திருந்தார் டாவின்சி. டாவின்சியின் மறைவுக்குப் பின்னர் அரச சொத்தாகவே மோனாலிசா ஓவியம் இருந்தது.
1799ம் ஆண்டு நெப்போலியனின் கவனத்திற்கு இந்த ஓவியம் வந்தபோது அவர் தனது படுக்கை அறையில் இந்த ஓவியத்தை வைத்திருந்தார். 1804ம் ஆண்டில் லூவ்ர அருங்காட்சியகம் பொது மக்களுக்குத் திறக்கப்பட்ட போது மோனாலிசா ஓவியம் பொது மக்கள் பார்வைக்கு வந்தது.
மோனாலிசா வரைந்து முடிக்கப்படாத ஓவியம் என்றே அறியப்படுகிறது. மீண்டும் மீண்டும் இந்த ஓவியத்தின் மீது வர்ணங்களைக் குழைத்து தீட்டிக் கொண்டேயிருந்தாலும் டாவின்சியின் மனம் நிறைவு பெறவில்லை.
இந்த ஓவியத்தைத் தீட்ட டாவின்சி ஸ்டுமாட்டோ (Stumato) என்ற ஒரு புது உத்தியைக் கையாண்டார். நிழலிலிருந்து வெளிச்சம் தெரியும் வகையில் இந்த ஓவியத்தை அவர் வரைந்துகொண்டேயிருந்தார்.
மோனாலிசா ஓவியத்திற்கு முகம் கொடுத்தவர் யார் என்ற கேள்வியும் விடைதெரியாது பல காலங்கள் இருந்தது. பணம் படைத்த Isabella d’Este என்பவரோ என்று சிலரும், Marquise of Mantua அல்லது ஃப்ராங்காவில்லா அரசி Costanza d’Avalos என்றும் சில அனுமானங்கள் உலவின. சிலர் இது லியானார்டோ தன்னையே பெண்ணாகப் பாவித்து உருவாக்கிய ஒன்றோ என்றும் கருதினர். அல்லது அவருக்கு உதவியாளராக இருந்த Gian Giacomo Caprotti யாக இருக்குமோ என்றும் கருதினர். ஆனால் இன்று அவர் இத்தாலியிலும் பிரான்சிலும் நன்கு அறியப்பட்ட வணிகரின் மனைவி Francesco del Giocondo ஆக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.
இந்த ஓவியத்தில் நெஞ்சுப் பகுதி ஒரு பக்கமாக சாய்ந்த வகையிலும் முகம் நேராகவும் இருக்கும். ஓவியங்களுக்கு முகத்தை சீரியசாக வைத்துக் கொள்ளும் அக்காலகட்டத்தில், மறைந்தும் மறையாமலும் தெரிந்து தெரியாமலும் ஒரு இளம் புன்னகை இந்த ஓவியத்தின் முகத்தில் தெரியும் வகையில் கம்பீரமான பெண்ணின் தோற்றமாக இதனை டாவின்சி படைத்திருக்கின்றார்.
எனக்கு என்னவோ மோனாலிசா டாவின்சி தன்னையே வரைந்ததாகத்தான் தோன்றுகின்றது.
ஒரு ஓவியம் இத்தனை காலங்கள் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றது என்பது ஆச்சரியம் தான். இந்த ஆச்சரியம் பிரான்சின் லூவ்ரவில் தான் இருக்கின்றது. இதனைக் காண ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய இந்த அருங்காட்சியகத்துக்கு 16 மில்லியன் மக்கள் வருகின்றார்கள்.
மோனாலிசாவின் கண்களையே உற்றுப் பாருங்கள். அக்கண்கள் நம்மோடு கதை பேசும்.
தொடர்வேன்..
-சுபா






No comments:

Post a Comment