
1972ம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டு மூன்ஷன் நகரத்தில் நடைபெற்றது. அதற்காக பிரத்தியேகமாக கட்டப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு மையத்தைக் காண காலையிலேயே நண்பர்கள் அனைவரும் கிளம்பி விட்டோம். இந்த ஒலிம்பிக் விளையாட்டு மையத்தின் பக்கத்தில் தான் மூன்ஷனின் தொலைகாட்சி கோபுரம் இருக்கின்றது. முதலில் கோபுரத்திற்குச் சென்று பின்னர் விளையாட்டு மையத்தை பார்வையிடுவதுதான் எங்கள் திட்டமாக இருந்தது.
தொலைகாட்சி கோபுரத்தின் மேலே செல்லுவதற்கு கட்டணம் தேவை. (மலேசியாவில் இரட்டைக் கோபுரத்தின் மேலே செல்வதற்குக் கூட காசு கேட்பதில்லை. ஆனால் இங்கு எங்கு சென்றாலும் நுழைவுக் கட்டணம் கட்டாயம்) கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால் ஏறக்குறைய மூன்ஷன் நகரம் முழுவதும் தெரிகிறது. BMW கார் நிறுவனத்தின் தலைமையகம் அருகாமையிலயே உள்ளது. அதன் அருகிலேயே BMW Musuem இருக்கின்றது. பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் இது. தாலைகாட்சி கோபுரத்தின் மற்றொரு பகுதியிலிருந்து பார்த்தால் ஒலிம்பியா பார்க் காட்சியளிக்கின்றது. விளையாட்டு மைதானம், அதனைச் சேர்ந்தார் போல உள்ள ஆறு, பூங்கா ஆகியவை மனதை கொள்ளை கொள்ள வைக்கின்றன.

1972ல் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வோடு சேர்ந்தார்போல நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை பலரும் ஞாபகம் வைத்திருக்கக் கூடும். ஆகஸ்டு 26ம் நாள் தொடங்கப்பட்ட விளையாட்டுக்கள் சீராக 10 நாட்கள் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் செப்டம்பர் 5ம் தேதி காலையில் 8 பாலஸ்தீனிய தீவிரவாதிகள் விளையாட்டு வீரர்களுக்காக அருகிலேயே அமைக்க ப்பட்டிருந்த ஒலிம்பிக் கிராமத்திற்குள் புகுந்து 2 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொன்று விட்டு மேலும் 9 பேரை பிணையாக பிடித்துக் கொண்டு சென்று பின்னர் அவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஒலிம்பிக் விளையாட்டு உடனே நிறுத்தப்பட்டது. ஒலிம்பிக் விளையாட்டு வரலாற்றில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வு.

இந்த ஒலிம்பிக் விளையாட்டு மைதானப் பகுதி தற்போது உலகளாவிய அளவில் பல நிகழ்வுகள் நடத்துவதற்காகப் பயன்படுகின்றது. ஓய்வு நேர கேளிக்கை விளையாட்டுக்களில் ஈடுபாடு உடையவர்கள் பலர் இங்குள்ள வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ஜெர்மனியைப் பொறுத்தவரை மூன்ஷன் நகரம் இருக்கின்ற பாயர்ன் மாநிலம், ஜெர்மனியின் ஏனைய மாநிலங்களை விட பணக்கார மாநிலமாக கருதப்படுகின்றது. இங்கு வெளிநாட்டவர்களும் அதிகம். இதற்கு முக்கியக் காரணம் இது ஒரு வர்த்தக மையமாக இருப்பதுதான். இங்கு பொதுமக்கள் பரவலாக சுயமாக வாகனங்கள் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. இரயில், அதிவேக இரயில் பஸ் போன்ற பொது போக்குவரத்து சாதனங்கள் மிகச் சிறப்பாக இயங்கி வருவதாலும், கார் வைப்பதற்கான இடவசதி என்பது மிகப் பெரிய பிரச்சனை என்பதாலும் மக்கள் பொது போக்குவரத்து சாதனங்களை விரும்புகின்றார்கள். வர்த்தக மையமாக இருப்பதால் மற்ற ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் கேளிக்கை நடவடிக்கைகளுக்கு இங்கு பஞ்சமாக இருக்குமோ என்றல் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அழகழகான பூங்காக்கள், பிரமிக்க வைக்கும் வர்த்தக மையங்கள், பழமை வாய்ந்த கட்டிடங்கள், தொல்பொருள் காட்சி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், சினிமா, வகை வகையான உணவகங்கள் என்று பல வகையில் திருப்தியளிக்கக்கூடிய அனுபவத்தை வழங்குகின்ற ஒரு நகரம் தான் இது.
மாலை மூன்ஷன் நகரிலிருந்து ஸ்டுட்கார் திரும்பும் போது இந்த நகரை சுற்றிப் பார்க்க நிச்சயமாக 4 நாட்கள் போதாது என்பதை உணர்ந்தோம். இந்த பயணம் இனிமையான நினைவலைகளை எனக்குள் ஏற்படுத்தி என்னை மகிழவைத்தது.