Monday, April 11, 2016

அயர்லாந்தின் அழகில்...! கெல்ட் மொழியும் நம்பிக்கைகளும் - 11

கி.மு. 58 முதல் கி.மு. 50 நிகழ்ந்த கேலிக் போர் என்பது ஐரோப்பிய நிலப்பகுதியில் நடந்த பற்பல போர்களில் வரலாற்றில் இடம் பெற்ற போர்களில் ஒன்று. கேலிக் அதாவது இந்த கெல்ட் இனக்குழுவின் ஒருபகுதியினரை எதிர்த்து சீஸரின் ரோமானியப் படை மேற்கொண்ட போர் இது. அந்தப் போரின் போது தனது அபிப்ராயத்தை குறிப்பிடும் சீஸர், கெல்ட் இனக்குழு மக்களில் முனிவர்களைப் பற்றியும் தன் கருத்தைப் பதிந்து வைக்கின்றார். இந்த முனிவர்கள் எனப்படுவோர் வருங்காலத்தைக் கணிக்கக்கூடிய, மந்திரங்கள் தெரிந்த, பூஜைகளையும் சடங்குகளையும் செய்கின்ற ஒருவர். இந்த முனிவர்களுக்கு கெல்ட் இனக்குழுவில் உயர் அந்தஸ்து கொடுக்கப்பட்டிருந்தது. இந்த முனிவர்கள் தமது சமயமானது தமது கல்வி முறையை எழுத்து வடிவில் மக்களுக்கு வழங்குவதை தடை செய்வதாக பிரகடனப் படுத்தி வைத்திருந்தனர் என்றும் வாய்மொழியாகவே அவர்கள் தங்கள் சிந்தனைக் கருவூலங்களை மனன முறையில் வழிவழியாக வழங்கி வந்தனர் என்றும் சீஸரின் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. அதே வேளை பொது விடயங்களுக்கான தேவைகளுக்குக் கிரேக்க லிபியை அவர்கள் பயன்படுத்தினர் என்றும் இதன் வழி அறிய முடிகின்றது.

ஜியோர்ஞ் பூஹ்னான் (1506 - 1582) என்ற ஸ்கோட்டிஷ் மொழியறிஞர் தாம் முதன் முதலாக கெல்ட் மொழியை இன்று வாழும் ஏனைய பல இந்தோ-ஐரோப்பிய மொழிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பினை ஆய்ந்தறிந்து வெளியிட்டவர். கெல்ட் மக்கள் தங்கள் மொழிக்கான எழுத்துருவை நிர்ணயித்துக் கொண்டபின்னர், அதாவது கிருஸ்து பிறப்புக்குப் பின்னான காலகட்டத்தில் இந்த கெல்ட் மொழியானது அதன் அடிபப்டை வடிவத்திலிருந்து பல்வேறு வகையான மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டு புதிய புதிய மொழிகளாக வடிவெடுத்து விட்டது.

இந்தோ-ஐரோப்பிய மொழிகள் எனும் போது அதில் அடங்கும் மொழிகளாக பெருவாரியான ஐரோப்பிய மொழிகள், ஈரானிய மொழி, வட இந்திய மொழி ஆகியன அமைகின்றன. உதாரணமாக பெயர் என்னும் சொல் இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் ஒலிக்கப்படும் விளக்கம் பற்றி அறியும் போது இம்மொழிகளுக்கான ஒற்றுமைக் கூற்றை அறியக்கூடியதாக உள்ளது. Nama - Anglo Saxon (north East Germany) என்ற சொல், Name - English என்றும், Namn - Gothic என்றும், Name - Deutsch, என்றும், Naam - Dutch, என்றும், onama - Greek, என்றும்Namman - Sanskrit, என்றும் aimn - Irish உள்ளன. இதே போன்ற சொற்களை ஒற்றுமைகளைக் காட்ட நன்கு பட்டியலிடலாம். இன்று அறியக்கூடிய மிகப் பழமையான இந்தோ-ஐரோப்பிய இலக்கிய வடிவம் என்றால் அது ஹைட்டைட் (Hittite) மொழியும் சமஸ்கிருத மொழியும் எனக் கூறலாம்.ஹைட்டைட் மொழியின் எழுத்துப்படிவங்கள் கி.மு 1900 வாக்கில் உருவாக்கபப்ட்டவை என்றும் சமஸ்கிருத வேதங்கள் கி.மு 1000லிருந்து 500 வரை என்றும் சொல்லலாம்.

The Celt நூலின் ஆசிரியர் ஐரிஷ் கேலிக் மொழிக்கும் சமஸ்கிருத வேத கூறுகளுக்கும் இடையில் இருக்கும் ஒற்றுமைகளை சுட்டிக் காட்டுகின்றார். சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் புழக்கத்தில் இருக்கும் இந்த இரண்டு மொழிகளுக்கும் இருக்கும் ஒற்றுமையைக் கூறும் போது மொழியியல் மட்டுமல்லாது சமூஅக நடைமுறைகள், மக்கள் வாழ்வியல் கூறுகள், புராணங்கள் ஆகியவற்றில் உள்ள ஒற்றுமைக் கூறுகளைக் குறிப்பிடுகின்றார்.

புராணங்களை எடுத்துக் கொள்ளும் போது சில ஒப்பீடுகள் சுவாரசியமாக இருக்கின்றன.

ஐரிஷ் கேலிக் புராணத்தில் இருக்கும் Danu தானு(டனு) அல்லது அனு (Anu), பழைய கேலிக் கெல்ட சமூகத்தில் இருக்கும் வழிபடப்படும் ஒரு தாய் தெய்வம். அவளே புனிதம் அவளே புனித நதி. ஐரோப்பாவில் ஓடும் டனுப் நதி இந்த தாய் தெய்வத்தின் பிரதிபலிப்பாக கெல்ட் சமய வழக்கத்தில் உள்ளது. நதியின் முக்கியத்துவம் இந்திய புனித கங்கையோடு ஒப்பிடும் போது கங்கை பல சடங்குகளைச் செய்ய பயன்படும் ஒரு புனித ஸ்தலமாக இருப்பதைக் கான்கின்றோம். கெல்ட் மக்கள் நதியில் நைவேத்தியங்களை வைத்து படைத்து நதி அன்னைக்கு சமர்ப்பணம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அதே போல கங்கை நதியில் சடங்குகளைச் செய்து கங்கா நதிக்கு சமர்ப்பணம் செய்வது இந்திய தேசத்திலிருக்கும் ஒரு பண்பாக இருப்பதைக் காண்கின்றோம். வேத புராணத்தில் Danu நதியுடன் தொடர்புடைய ஒரு தெய்வமாகக் கருதப்படுகின்றார். பண்டைய கெல்ட் சமயத்தின் படி கெல்ட் மக்கள் தாம் (Danu) தானுவின் சந்ததியினர் எனத் தம்மை நம்புகின்றனர். புனித நீராகிய (Danu) தானுவின் வழியில் ஆகாயக் கடவுள் தோன்ற அவர்களின் சந்ததியினரே தாம் என்பது கெல்ட் மக்களின் நம்பிக்கை.

ஐரோப்பாவில் பல பகுதிகளில் அகழ்வாய்வுகL செய்யப்பட்டு கெல்ட் மக்கள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் வெளியிடப்பட்டன. இதில் பிரத்தியேகமாக கெல்ட் மக்களின் வழிபாட்டில் இருக்கும் எண்ணற்ற கடவுளர்களைப் பற்றி இந்த தொல்லியல் ஆய்வுகள் சான்றுகளை வழங்குவதாக அமைந்தன. அதுமட்டுமன்றி இரு சக்கரத் தேர்கள், ஆபரணங்கள், சிறப்பு சடங்கு பொருட்கள் ஆகியனவும் இவ்வகை ஆய்வுகளில் கிடைத்தன.

இந்த கெல்ட் இனமக்கள் மிக விரிவாக தமது ஆரம்ப மையப்புளியிலிருந்து பல இடங்களுக்குப் பெயர்ந்து தங்கள் பண்டைய கெல்ட் பண்பாட்டை தாங்கள் புலம்பெயர்ந்த புதிய நிலப்பகுதிகளில் அச்சூழலையும் உள்வாங்கிக் கொண்டு புதிய பரிமாணத்தில் புதிய பண்பாடுகளை உருவாக்கிக் கொண்டனர். கெல்ட் மக்களைப் பற்றி ஆராயும் போது இவர்கள் தாம் இந்தியாவிற்குப் புலம்பெயர்ந்து வந்த ஆரிய இனக்குழுவினரோ என்ற எண்ணம் எழுகின்றது.

இனி தொடர்ந்து இக்கட்டுரையில் எனது பயணத்தில் 3ம் நாள் செய்திகளை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கின்றேன்.

1 comment:

Dr B Jambulingam said...

அரிய செய்திகளை அறியமுடிகிறது. நன்றி.

Post a Comment