Sunday, August 3, 2025

Maulbronn Kloster

 


மவுல்ப்ரோன் மடம். என் லியோன்பெர்க் பகுதியிலிருந்து ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற ஒரு மடாலயம்.
இந்த தேவாலயம் மற்றும் மடப்பள்ளி கத்தோலிக்க கிறிஸ்துவ சமய மடமாக 1147 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. ஆனால் இப்பகுதியில் சீர்திருத்த கிருத்துவம் பரவலாக்கம் கண்ட பின்னர் 16ஆம் நூற்றாண்டில் இந்த மடம் சீர்திருத்த ப்ரொட்டஸ்டன்ட் மதத்தைச் சார்ந்த மடமாக மாறியது.
மிகப்பெரிய வளாகம். இரண்டு அருங்காட்சியங்கள் இதற்குள் இருக்கின்றன.
நாம் நன்கு அறிந்த இரண்டு அறிஞர்கள்-
யோகானஸ் கெப்ளர் , இவரது பெயரில் நாசா செட்டிலைட் ஒன்றிற்கு கெப்ளர் சட்டலைட் என்று பெயர் வைத்திருக்கின்றது என்பதை பலரும் அறிந்திருப்பீர்கள். அவர் படித்த பள்ளி இது. அடுத்து நமக்கெல்லாம் தெரிந்த சித்தார்த்தன் நாவலை எழுதிய ஹெர்மான் ஹெஸ்ஸ படித்த கல்லூரியும் இதுதான். அவர் பின்னர் இந்தியா இலங்கை என வந்து புத்த மதத்தின் பால் ஈர்க்கப்பட்டு சித்தார்த்தா என்ற நாவலை எழுதினார். அது நோபல் பரிசு பெற்றது.
இன்று யுனஸ்கோவின் பாதுகாக்கப்படுகின்ற ஒரு மரபுச் சின்னமாக இந்த மடாலயம் அமைந்துள்ளது.
இதன் வரலாற்றைப் பற்றி இரண்டு காணொளிகள் இணைத்திருக்கின்றேன். பார்த்து மகிழுங்கள்.
-சுபா
3.8.2025














பிலிப் மெலஞ்தோன் - Bretten

 


இன்று ஞாயிற்றுக்கிழமை. ஜெர்மனியில் உள்ள 1500 க்கும் மேற்பட்ட அருங்காட்சியங்களில் வீட்டிற்கு சற்று தூரம் இல்லாத பகுதிகளில் உள்ள சில அருங்காட்சிகளைப் பார்த்து வரலாம் என கிளம்பி விட்டேன்.
90களின் தமிழ் பாடல்களை கேட்டுக்கொண்டு வாகனத்தில் பயணம் செய்வது சுகமான அனுபவம் தானே 🙂
முதலில் நான் வந்தது வீட்டிலிருந்து 42 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிரெட்டன் (Bretten) என்ற சிறு நகரம். சீர்திருத்த கிருத்துவம் அதாவது புரோட்டஸ்டன்ட் மதம் என்று சொல்லப்படுகின்ற இச்சமய உருவாக்கத்தில் முக்கியமான ஒரு நகரம். ஆம் பிலிப் மெலஞ்தோன் பிறந்த ஊர்.
இவர் யார்? தெரிந்து கொள்வோமே.
சீர்திருத்த கிருத்துவ மதம் என சொல்லப்படும் ப்ராட்டஸ்டண்ட் மதத்தை உருவாக்கிய மார்ட்டின் லூதர் உடன் இணைந்து பணியாற்றியவர். அவர் பணியாற்றிய அதே விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தில் இவரும் சமயத்துறை பேராசிரியராக பணிபுரிந்தவர். இருவரும் இணைந்து சீர்திருத்தங்களை மக்களிடையே கொண்டு வந்தனர்.
கத்தோலிக்க சமய அமைப்பான வார்த்தைகளின் கிளை நிறுவனங்களுடன் பல மத விவாதங்களில் பங்கேற்றத்துடன் மிக முக்கியமான "ஆக்ஸ்புர்க் அறிக்கையை" 1530 ஆம் ஆண்டு எழுதியவர் என்ற புகழுக்கு சொந்தக்காரர்.
பிலிப் எழுதிய 9000 க்கும் மேற்பட்ட கடிதங்கள் இந்த அவரது இல்லத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
ஒரு வீடியோ ஒன்றும் இணைத்திருக்கின்றேன். காணுங்கள். இந்த இல்லத்தைப் பற்றிய முக்கியமான செய்திகளை அதில் பகிர்ந்திருக்கின்றேன்.
-சுபா
3.8.2025











Sunday, March 16, 2025

இங்கிலாந்தில் சில நாட்கள் -10

 



(இறுதிப் பகுதி)
கடற்கரை காற்று யாருக்குத்தான் பிடிக்காது?
இங்கிலாந்து அடிப்படையில் ஒரு தீவு. இங்கிலாந்து தீவின் தென்கிழக்கு நகரங்களில் இருந்து லண்டன் நகரை ஏறக்குறைய ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்திற்குள் வாகனத்தில் பயணித்து சென்றடைந்து விடலாம்.
பயணத்தின் முதல் நாள் நாங்கள் ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்தின் டோவர் நகருக்கு வந்து பின்னர் அங்கிருந்து லண்டனுக்கு ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் பயணம் செய்து சென்றடைந்தோம். நேற்று தமிழ் இலக்கியவாதிகளுடன் சந்திப்பை முடித்துக் கொண்டு நாங்கள் லண்டனில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் தென்கிழக்கு நகரங்களில் ஒன்றான ஹையத் நகரத்தை சென்றடைந்தோம்.
இந்த ஹையத் ஒரு கடற்கரை நகரம் என்பதால் கடற்கரையை பார்த்து ரசிக்க முடியும் என்று எண்ணம் இருந்தது. நாங்கள் வந்து சேர்ந்த போது சூரிய வெளிச்சம் நன்கு தெளிவாக இருந்து. சிறிய நகர் தான் இது. ஆயினும் ஏராளமான வரலாற்றுச் செய்திகள்... குறிப்பிடத்தக்க வரலாற்றுச் சின்னங்கள்.
1200 மண்டை ஓடுகள் வரிசையாக அடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும் ஒரு அருங்காட்சியகமும் இந்த நகரில் இருக்கின்றது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதா? இதனைப் பற்றி பின்னர் விரைவாக எழுதுகிறேன்.
கடற்கரை தூய்மையாக இருந்தது. அழகிய கூழாங்கற்கள் கடற்கரை முழுதும் நிறைந்திருந்தன. இங்கு மணல் இல்லை. அமைதியான அலைகள்.
சில்லென்ற குளிர் காற்று. நேரம் செல்ல செல்ல குளிரின் தன்மை அதிகரித்துக் கொண்டே இருந்தது. ஆனால் இந்த குளிரான காற்றின் சுகமான அனுபவம் இங்கிருந்து தங்கும் விடுதிக்கு செல்வதற்குத் தடை விதித்து கொண்டே இருந்தது.
தூரத்தில் பார்த்தால் டோவர் நகருக்கு வருகின்ற கப்பல்களின் வெளிச்சம் பளிச்சு பளிச்சென்று மின்னிக் கொண்டிருந்தது. மற்றபடி கடலில் பெரும் கப்பல்கள் எவற்றையும் காணவில்லை.
இந்த ஹையத் நகரம் கிபி நான்காம் நூற்றாண்டு காலத்தில் ரோமானியர்களால் ஒரு துறைமுகமாக நிர்மாணிக்கப்பட்ட பழம் நகரம். அதற்கு முன்னர் மீனவர்கள் இங்கு வசித்திருக்கின்றார்கள். கிபி 11ம் நூற்றாண்டு தொடங்கி மிக முக்கியமான ஒரு துறைமுகமாக இது வளர்ச்சி கண்டது. ஐரோப்பாவிலிருந்து இங்கு கப்பல்களில் மக்கள் வந்து செல்வது வழக்கமாகியது.
இன்று சுற்றுப்பயணிகளைக் கவரும் ஒரு நகரமாக இது அமைந்திருந்தாலும் கோடை காலத்தில் தான் அதிகமான சுற்றுப்பயணிகள் இங்கு வருகின்றார்கள். வசந்த காலம் இன்னும் குளிராக இருப்பதால் சுற்றுப்பயணிகளை அதிகம் காண முடியவில்லை.
கடற்கரை முழுதும் எங்களுக்கு மட்டுமே உருவாக்கப்பட்டது போல நாங்கள் மட்டும்தான் கடற்கரையில் நின்று அலைகளை ரசித்துக் கொண்டிருந்தோம்.
இன்று காலை ஹையத் நகரில் இருந்து புறப்பட்டு டோவர் வந்து கப்பல் எடுத்து ஐரோப்பாவின் டன்கிர்க் நகரம் வருவதற்காக டிக்கெட் புக்கிங் செய்திருந்தோம். ஆக புறப்படுவதற்கு முன் மீண்டும் ஒருமுறை கடற்கரையில் நீண்ட தூரம் நடக்கச் சென்று சுகமான காற்றை சுவாசித்துக் கொண்டே இந்த நகரை பற்றி அறிந்து கொண்ட செய்திகளைப் பரிமாறிக் கொண்டோம்.
இங்கிலாந்தின் கடற்கரை நகரங்களை ஒவ்வொன்றாக பார்த்து வருவதும் ஒரு நல்ல அனுபவமாக நிச்சயம் இருக்கும். மீண்டும் ஒரு முறை இத்தகைய ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன். அடுத்த முறை வரும்போது இப்போது சென்றிராத மேலும் பல கடற்கரை நகரங்களுக்குச் சென்று அவற்றைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது.
ஜெர்மனியில் வீட்டிலிருந்து ஐரோப்பாவின் பிரான்ஸ், லக்சம்பர், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் சாலைகளில் பயணித்து, இங்கிலாந்து தீவை அடைந்து, லண்டன் வரை பயணித்து, பின்னர் மீண்டும் திரும்பி வருவதற்கு ஏறக்குறைய 3600 கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் பயணம் செய்திருக்கின்றோம்.
இங்கிலாந்து ஒரு வரலாற்றுப் புதையல். இந்த தீவின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஒரு வரலாற்றுச் செய்தி நமக்காகக் காத்திருக்கின்றது!
-சுபா
17.3.2025






















இங்கிலாந்தில் சில நாட்கள் - 9



லண்டன் நகரின் ஈஸ்ட் ஹேம் பகுதி தமிழ் மக்கள் மிக அதிகமாக வசிக்கும் ஒரு பகுதி எனலாம். இங்கு ஏராளமான தமிழர்கள் நடத்தும் கடைகள் இயங்கி வருகின்றன. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கோயில்களும் அமைந்திருக்கின்றன. தமிழ்ப் பெயர் பலகைகளுடன் கடைகளும் சாலைகளில் தமிழ் மக்களும் நடந்து செல்வது தமிழ்நாட்டில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும்.
இலங்கையின் இலக்கியவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் பலர் லண்டன் நகரில் வாழ்கின்றார்கள். அவ்வகையில் குறிப்பிடத்தக்க பல ஆக்கங்களைத் தமிழ் எழுத்துலகுக்கு வழங்கியவர் பேராசிரியர் நித்தியானந்தன் அவர்கள். மலையக சூழலை விவரிக்கும் அவரது கூலித்தமிழ் தமிழ் இலக்கிய உலகம் பாராட்டும் ஓர் அரிய படைப்பு. மலையகத் தமிழர் வாழ்வியல் மட்டுமல்லாது வேறு பல கோணங்களிலும் தனது இலக்கிய படைப்பை தமிழ் இலக்கிய உலகிற்கு வழங்கி இருக்கின்றார் இவர்.
பத்மநாப ஐயர் தமிழ் இலக்கிய உலகம் நன்கறிந்த ஒருவர். நூலகம் அமைப்பின் புறவலர். இந்த அமைப்பின் வழி ஆயிரக்கணக்கான தமிழ் நூல்கள் மின்னாக்கம் செய்யப்பட்டு உலகளாவிய மக்கள் இணையம் வழி இலங்கை தமிழ் ஆய்வுகள் தொடர்பான நூல்களை வாசிக்க வழி ஏற்படுத்தித் தந்துள்ளது.
திரு பௌசர் அவர்கள் ஐரோப்பாவில் தமிழ் நூல்களை எடுத்துச் சென்று பல்வேறு பகுதிகளில், குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற பகுதிகளில் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி நூல்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருபவர். இது எளிய ஒரு பணி அல்ல. பல சிரமங்களுக்கிடையில் சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற இடங்களில் புத்தகக் கண்காட்சிகளைச் செய்து நூல் விற்பனையைச் செய்வதன் வழி தமிழ் நூல்கள் புலம் பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடையே செல்வதற்கு வழி ஏற்படுத்தி தருகின்றார். இவரது முயற்சியில் லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதியில் ஒரு சிறிய புத்தகக் கடை உள்ளது. மிகுந்த சிரமங்களுக்கிடையில் இந்த புத்தகக் கடையை நடத்தி வருகின்றார். தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ஒன்று கூடுவதற்கும் இந்த இடம் தற்சமயம் பயன்படுகிறது.
இன்று இணையர் கௌதம சன்னாவின் ஓர் உரை நிகழ்ச்சி இந்த புத்தகக் கடையில் ஏற்பாடாகி இருந்தது. பஞ்சு மிட்டாய் பிரபு, தோழர் பாஸ்கர், ஆகிய இருவரும் எங்களோடு இணைந்து கொள்ள, நாங்கள் இந்தப் பகுதியில் உள்ள வசந்த பவன் உணவகத்தில் காலை உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்றோம்.
அங்கே எங்களுக்காகத் தோழர்கள் பலரும் வந்து காத்திருந்தார்கள். தோழர் நவஜோதி, மீனாள் நித்தியானந்தன், எலிசபெத், ஓவியர் ராஜா, பத்மநாப ஐயர், பேராசிரியர் நித்தியானந்தன் உட்பட மேலும் பல புதிய நண்பர்களையும் அங்கு காண முடிந்தது.
அம்பேத்கரின் தேவை என்ற பொருண்மையில் அமைந்த உரையில் அம்பேத்கர் பற்றிய பல்வேறு வரலாற்றுச் செய்திகளைத் தனது உரையில் கௌதம சன்னா வெளிப்படுத்தினார். ஒரு மணி நேர உரைக்குப் பின்னர் வந்திருந்த தோழர்களுடன் கலந்துரையாடல் அமைந்திருந்தது. ஏறக்குறைய மணி மதியம் 1 ஆன பின்னரும் கூட தோழர்கள் ஆர்வத்துடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அம்பேத்கர் பற்றிய, அவரது செயல்பாடுகள் குறித்த பல்வேறு தகவல்களை ஆர்வத்துடன் வந்திருந்த அனைவரும் கலந்துரையாடியது மகிழ்ச்சி அளித்தது. புலம்பெயர்ந்த நாட்டில் இன்றைய காலகட்டத்தில் அம்பேத்கர் செயல்பாடுகளும் சிந்தனைகளும் காலத்தின் தேவை என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது.
மதிய உணவிற்காக அனந்தபுரம் என்ற பெயர் கொண்ட ஓர் உணவகத்திற்குச் சென்றிருந்தோம். உணவு வகைகளை ஆர்டர் செய்த பின்னரும் இந்த கலந்துரையாடல் தொடர்ந்தது.
புலம்பெயர்ந்த சூழலிலும் ஏராளமான தமிழ் குடும்பங்கள் இருக்கின்ற நிலையிலும் கூட குழந்தைகளுக்கான தமிழ் இலக்கியங்களை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பதை இங்கு லண்டன் நகரில் மட்டுமல்ல ஐரோப்பா முழுவதும் உணர முடிகிறது.
எத்தனையோ விஷயங்களுக்கு நூற்றுக்கணக்கான பவுண்டுகளையும் யூரோக்களையும் செலவிடும் தமிழ் மக்கள் மாதம் ஒரு தமிழ் நூல் வாங்குவதற்கு குறைந்த ஒரு கட்டணத்தை கூட செலவிட விரும்புவதில்லை. இப்படி ஒரு நிலை இருக்கும் பட்சத்தில் எவ்வகையில் தமிழ் இலக்கியங்களை புலம் பெயர்ந்த நாடுகளில் இரண்டாம் தலைமுறைக்கு நாம் அறிமுகப்படுத்த முடியும்?
புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கின்ற தமிழ் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். தமிழ் புத்தகங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். புத்தகக் கண்காட்சிகள் நடக்கும் போது திரளாக வந்து பார்த்து நூல்களை வாங்கிச் செல்ல வேண்டும். திரு பௌவுசர் போல பல சிரமங்களுக்கிடையே புத்தகக் கடைகளை நடத்துவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
இத்தகைய முயற்சிகளுக்கு தமிழ் மக்களிடையே ஆர்வமும் ஆதரவும் கிட்டும் போது தமிழ் மொழியும் பண்பாடும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பட அது அடிப்படையை வகுக்கும்.
லண்டன் முருகன் கோயில் இங்கு ஈஸ்ட் ஹேம் பகுதியில் இருக்கும் மிகப் பழமையான கோயிலாகும். லண்டன் நகரில் அமைக்கப்பட்ட முதல் கோயில் என்ற சிறப்பு இதற்கு உண்டு. இக்கோயிலையும் பார்த்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.
-சுபா
16.3.2025
லண்டன், இங்கிலாந்து