Saturday, April 20, 2013

பனியாகிக் கரைந்த கணங்களிலே....! - ஆஸ்திரியா *ரோய்ட்ட - 10


30.12.2012

நகருக்கு நடைப்பயணம்

ரோய்ட்ட நகருக்கு அருகாமையில் உள்ள சிற்றூரில் எங்கள் தங்கும் விடுதி இருந்தமையால்  ரோய்ட்ட நகருக்குள் சென்று அந்த நகரத்தை அறிந்து கொள்ளும் வாய்ப்பு அமையவில்லை. ஒவ்வொரு நாளும் பனிப் பாதை பயணம், அடுத்து ஏரன்பெர்க் மலைப் பயணம் என்று அமைந்து ரோய்ட்ட நகரின் அருகாமையிலுள்ள இடங்களுக்குச் செல்வதாகவே அமைந்திருந்தது எங்கள் பயணத்தின் முதல் சில நாட்கள். இதனால் இந்த நாளில் ரோய்ட்ட நகருக்குச் சென்று வருவோமே என முடிவு செய்து கொண்டோம். 

எங்கள் தங்கும் விடுதியிலிருந்து நகருக்குச் செல்ல  ஏறக்குறைய 5 கிலோ மீட்டர் தூரம் இருந்தது. ஆக இதனையும் ஒரு நாள் நடைப்பயணமாக வைத்துக் கொள்வோம் என முடிவாகியது.

அன்று பனித்தூரல் இல்லை. ஆனால் முதல் நாள் கொட்டிய புதிய பனி ஏற்கனவே இருந்த பனியின் மேல் கொட்டியிருந்ததில் அப்பகுதியே புதுப் பொலிவுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தது. அன்று காலை வேளையில் சூரியனை மறைத்துக் கொண்டு மேக மூட்டமாக  இருந்தமையால் நகருக்கு நடந்து செல்லும் பாதையில் மக்கள் நடமாட்டமும் குறைவாகத் தான்  இருந்தது. கிராமத்திலிருந்து வெளியே வரும் போது பல பழம் வீடுகள். வீடுகள் ஒவ்வொன்றிலும் அதன் வெளிப்புற வெண்மையான சுவற்றில்  வெவ்வேரு வகையில் சில சித்திரங்களைத் தீட்டி வைத்திருக்கின்றனர். 


அவை கிராம மக்களின் தொழிலை விளக்கும் வகையிலும் அவர்களின் பழமையான உடைகளை ஞாபகப்படுத்தும் சின்னங்களாகவும் அமைந்து சாலையில் செல்வோருக்கு இவற்றைப் பார்த்துக் கொண்டே செல்ல ஆர்வத்தை அளிப்பவையாக அமைந்திருக்கின்றன. அழகுணர்ச்சியை எத்தனையோ வகைகளில் மக்கள் கலைவடிவங்களில் தங்களுக்கேற்ற வகையில் வெளிப்படுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கின்றனர் என்று யோசிக்க வைத்தது இக்காட்சிகள்.ரோய்ட்ட நகர் மிகப் பழமை வாய்ந்த நகரம் என முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தேன். இங்கே இன்னகரின் வரலாற்றைப் பிரதிபலிக்கும் சில கட்டிடங்கள் இன்னமும் அதன் பழமை சிறப்பு மாறாமல் பாதுகாக்கப்படுவது பற்றி சுற்றுலா கையேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தமையால் அதில் உள்ள விஷயங்களை வரிசையாகப் பார்த்து வருவோம் என் முடிவெடுத்துக் கொண்டோம். முதலில் 5 கிமீதூரம் நடந்து வந்த களைப்பு தீர ஒரு ரெஸ்டாரண்டில்  காபி வாங்கி அருந்தினோம். அந்தக் குளிருக்கு சூடான காப்பி இதமாக இருந்தது.

பயணக் கையேட்டில் குறிப்பிட்டிருந்த வகையிலேயே கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டு நடந்தோம். Untermarkt  பகுதியில் தொடங்கும்  போது ஒரு கிணறு முதலில் தென்படுகின்றது. 1901ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கிணறு. இன்னமும் இது குடிநீருக்காகப் பயன்படுத்தப்படும் கிணறாக உள்ளது. 

அடுத்து உடனே வருவது ஹோட்டல் மோரென். இது 1765ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கட்டிடம். முதலில் கட்டியவரின் பெயரிலே இந்த ஹோட்டலின் பெயர் இது வரை அமைந்திருந்தாலும் இதன் உரிமையாளர்கள் மாறிவிட்டனர் என்ற குறிப்பை வாசித்துக் கொண்டேன்.இதற்கு பக்கத்திலேயே டவ்கர் ஹ்வுஸ் Tauscher Haus  எனும் கட்டிடம் வருகின்றது.  18ம் நூற்றாண்டு பழமை கொண்ட இது அதில் உள்ள சுவர் சித்திரத்திற்காக புகழ் பெற்று விளங்குகின்றது. 

அன்னை மேரியின் இந்தச் சித்திரத்தை ரோய்ட்ட நகரின் அக்காலத்து புகழ் பெற்ற பாரோக் சித்திரக் கலைஞர் யோகன் ஜேக்கப் செய்லர் வரைந்திருக்கின்றார். 350 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தச் சித்திரம் இன்னமும் மிகத் தெளிவாக உள்ளது. இதைத் தொடர்ந்து சென்றால் 18ம் நூற்றாண்டு வரை உப்புக் கிடங்கு வைக்கப்பட்டிருந்த  ஒரு கட்டிடத்தை வந்தடைவோம். இது கிடங்கு என்ற நிலை மாறி தற்சமயம் பல கடைகள் இங்கே உள்ளே அமைந்திருக்கின்றன. 


இங்கு பார்க்கும் ஒவ்வொரு வீடுகளுக்கும் ஒரு கதை இருக்கின்றது. ஒவ்வொன்றுமே அதன் வடிவத்திலும் சரி அதன் சுவற்றில் தீட்டப்பட்டுள்ள சித்திரங்களிலும் சரி அது கொண்டுள்ள வரலாற்றுச் செய்தியிலும் சரி தனித்துவம் பெற்றே அமைந்திருக்கின்றன.

அடுத்து நேராக Grüner Haus என்ற பழமையானதொரு வீட்டினைக் கண்டோம். இது 16ம் நூற்றாண்டு பழமை வாய்ந்த வீடு.  இதில் தற்சமயம் ஒரு அருங்காட்சியகமும் அமைந்திருந்தது. நாங்கள்  திரும்பி வரும் வழியில் மீண்டும் இங்கு வந்து ஒரு காப்பியும் கேக்கும் சாப்பிட்டுத் திரும்பினோம். அருமையான Renaissance  சித்திரங்கள் இந்தக் கட்டிடத்தை முழுதுமாக அலங்கரிக்கின்றன.இந்த நகருக்குள்ளேயே மூன்று சாலைகளில் நடப்பதற்குள்  5 தேவாலையங்களைப் பார்த்து விட்டோம்.  சிறிதும் பெரிதும் என பெரும்பாலும் 17ம் நூற்றாண்டுக்குப் பின்னர் கட்டப்பட்டவையாக உள்ளவை இவை. 

இப்படி ஒவ்வொரு கட்டிடமாகப் பார்த்துக் கொண்டே சுற்றுலா கையேட்டில் வழங்கப்பட்டிருந்த விளக்கங்களை வாசித்துக் கொண்டே பார்த்து வந்தோம். மெதுவாக மேகக் கூட்டம் கலைந்து சூரிய வெளிச்சம் வர பயணம் மேலும் சுவாரசியமாக இருந்தது. அன்றைய மதியப் பொழுதை ரோய்ட்ட நகரிலேயே கழித்த  பின்னர் மீண்டும் தங்கும் விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

அன்று முழுமையாக ஏறக்குறைய 12 கி.மீ  தூர நடைப்பயணமாக அமைந்தது.  ரோய்ட்ட நகரின் கட்டிடக் கலையை ரசித்து வந்த்தில் அலுப்பு தெரியவில்லை. 
ரோய்ட்ட நகரச் சின்னம்தொடரும்...

அன்புடன்
சுபா


No comments:

Post a Comment