Saturday, March 5, 2016

அயர்லாந்தின் அழகில்... ! பயண ஏற்பாடு -2

ஆகஸ்டு மாதம் ஜெர்மனியில் கோடை காலத்தின் உச்ச சமயம். எனது தோட்டத்துச் செடிகளைப் பற்றிய கவலையே அதிகமாக இருந்தது. அண்டை வீட்டு நண்பர் தோட்டத்துச் செடிகளுக்கு நீர் விடுவதற்கு சம்மதம் தெரிவித்தாலும் மனம் அவ்வளவாக எனக்கு திருப்தியில்லை. உதவி செய்கிறேன் பேர்வழி என்று சொல்லி நிறைய நீரைக் கொட்டி வைத்து சில செடிகளை முன்னர் இழந்திருக்கிறேன். அல்லது வெயிலில் காய்ந்து செத்துப் போனால் என்ன செய்வது? சரி. உதவி செய்வதற்காவது யாராவது இருக்கின்றார்களே. அதிகம் மனச் சஞ்சலம் வேண்டாம் என நானே என்னை சமாதனப் படுத்திக் கொண்டு பயணத்தின் தயாரிப்பு வேலைகளில் எனது மனதை செலுத்தினேன்.

இது பத்து நாட்கள் Package Deal. அதாவது விமான டிக்கெட், தங்கும் இடம் ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பார்த்து வரும் பேருந்து ஏற்பாடு, காலை மாலை உணவு என அனைத்தும் இந்த ஏற்பாட்டில் அடங்கும். அதிலும் இது ஜெர்மானிய சுற்றுலா குழுவினரால் நடத்தப்படுவதால் நிச்சயம் என்னுடன் குறைந்தது 15 ஜெர்மானியர்களாவது இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். புதிய நண்பர்களையும் அறிந்து கொள்ளலாம். புதிய செய்திகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்பதும் கூட கூடுதல் குதூகலமாக அமைந்தது.

அயர்லாந்து இங்கிலாந்தின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தீவு. இது ஒரு ஆங்கிலேய நாடு என யாரும் நினைத்தால் அது முற்றிலும் தவறு. 19ம் நூற்றாண்டில் ஆங்கில மொழி இந்நாட்டின் ஆதிக்கம் மிக்க முதல் மொழியாக முக்கியத்துவத்தை அடைந்தாலும் கூட இந்த நாட்டின் முக்கிய மொழி ஐரிஷ் மொழி தான். ஐரிஷ் மொழி இம்மக்களின் தாய் மொழி. அயர்லாந்தின் சாசனத்தின் படி ஆங்கிலமும் ஐரீஷ் மொழியும் அதிகாரப் பூர்வமான மொழிகள் என அமைக்கப்பட்டிருந்தாலும் ஐரீஷ் மொழியே நாட்டின் முதன் மொழி என்ற அந்தஸ்தையும் பெறுகின்றது.

பண்டைய காலத்தில் செல்ட்டிக் தாக்கத்தால் ஐரிஷ் மொழி அயர்லாந்தில் ஆதிக்கம் பெற்றது. இம்மொழி 10ம் நூற்றாண்டு வாக்கில் அயர்லாந்து, ஸ்கோட்லண்ட் (Scotland), ஐல் ஆஃப் மேன்(Isle of Man) ஆகிய பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய மொழி இது. தற்சமயம் இம்மொழி ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மொழி என்பதோடு ரிப்பப்ளிக் ஆஃப் அயர்லான் (Republic of Ireland), வட அயர்லாந்து (Northern Ireland) ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளது. இம்மொழியின் பெயர் கேலிக் (Gaelic) என்பதாகும்.

சாலைகளின் பெயர்கள், கட்டிடங்கள் அனைத்திலும் கேலிக் மொழியில் குறியீடுகள் அமைந்திருக்கின்றன. வழக்கத்தில் இன்று இம்மொழி குறைந்து வருகின்றது என்பது எனது நேரடியான அனுபவத்தில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

என் பயணம் ப்ராங்பெர்ட் விமான நிலையத்திலிருந்து அயர்லாந்தின் தலைநகரமான டப்ளின் சென்று பின்னர் அங்கிருந்து பட்டியலிடப்பட்டிருந்த இடங்களுக்குச் செல்வது என அமைக்கப்பட்டிருந்தது.


அதாவது டப்ளினில் (Dublin) முதலில் இரண்டு நாட்கள் இருந்து பின்னர் மூன்றாம் நாள் கால்வே(Galway Region) சென்று பின்னர் கோன்னிமாரா (Connemara) பகுதிக்குச் சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்கி பின்னர் அங்கிருந்து லிமெரிக் (Limerick) பகுதிக்கு வந்து அங்கு ஒரு நள் இருந்து பின்னர் கேரி (Kerry) பகுதிக்குச் சென்று ரிங் ஆஃப் கேரியில் (Ringof Kerry)இரண்டு நாட்கள் தங்கி அப்பகுதியின் எழிலை ரசித்து பின்னர் அங்கிருந்து காஷல் (Cashel) பகுதிக்குச் சென்று ஒரு நாள் தங்கி பின்னர் அங்கிருந்து விக்லோவ் (Wicklow) பகுதிக்குச் சென்று அன்றே டப்ளின் (Dublin) வந்து இறுதி நாள் டப்ளினில் இருந்து மாலை நேரத்து சிறப்புக்களை ரசித்து பின்னர் 10ம் நாள் இல்லம் திரும்புவது என அமைக்கப்பட்டிருந்தது.


இந்தப் பயணத்தில் எங்களுக்கு சுற்றுலா வழிகாட்டியாக அமைந்தவர் ஜொஅன்னா (Joanna). இவர் ஜெர்மானியப் பெண். அயர்லாந்துக் காரரை மணந்து கொண்டு கடந்த ஐந்தாண்டுகளாக விக்லோவ் பகுதியில் வசிப்பவர். இவர் எங்கள் பயணத்தின் போது பல வரலாற்றுத் தகவல்களை சலிக்காமல் வழங்கினார். இவருடன் எங்களின் பஸ்ஸை ஓட்டி வந்த டேரன் பழக இனிமையானவராக இருந்தார். பொதுவாக பெரும்பாலும் அமைதியாக இருந்தாலும் அவ்வப்போது எங்கள் உரையாடலில் கலந்து கொண்டார். இந்த இனிய பயணத்தில் என்னுடன் 19 பேர் இணைந்து கொண்டனர். மொத்தம் இருபது பேர்கள். என்னைத் தவிர ஏனைய அனைவரும் ஜெர்மானியர்கள். ஜெர்மனியின் பல பகுதிகளிலிருந்து வந்தவர்கள். புதிய நண்பர்கள் என்பதால் ஆரம்பத்தில் சற்று விலகியே இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் நன்றாக உரையாடிக் கொண்டு மிக சுவாரசியமாக எங்கள் பயணம் அமைந்தது.

அடுத்தடுத்த பகுதிகளில் நான் சென்று பார்த்த இடங்கள் நான் அறிந்து கொண்ட அயர்லாந்தின் வரலாற்றுத் தகவல்கள், எங்கள் பயண அனுபவம் ஆகியவற்றை நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து வழங்குகிறேன். இப்பயணத்தில் எனது டிஜிட்டல் கேமராவில் ஏறக்குறைய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை எடுத்தேன். அதில் சரி பார்த்து தேவையற்றவைகளை நீக்கி சிறப்பாக வந்த ஏறக்குறைய நானூறு படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறேன். அதில் ஒரு சில காட்சிகளை உங்களுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்வேன்.


சரி..இப்போது ப்ராங்பர்ட் விமான நிலையத்தில் புறப்படக் காத்திருக்கும் ஆர் லிங்குஸ் (Air Lingus) க்கு செல்வோமா..?
தொடரும்...
சுபா

1 comment:

Subhashini said...

Very Interesting. I will reach all your travel posts later. I have read some of your Germany posts also. Nice to know about you. Glad to say my name is also Subhashini

Post a Comment