Thursday, March 17, 2016

அயர்லாந்தின் அழகில்..! ட்ரினிட்டி கல்லூரி- 6


(2011 பயணத்தின் கட்டுரை)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Trinity College நிறுத்ததில் இறங்கிக் கொண்டோம். 1579ல் கட்டப்பட்டதாக குறிப்பிடப்படும் இந்த ட்ரினிட்டி கோலேஜ் மிகப் பழமை வாய்ந்ததும் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு பல்கலைக்கழகமுமாகும்.


உள்ளே நுழைந்தபோது வாசலில் இங்கே 10யூரோவுக்கு ட்ரினிட்டி கோலேஜ் பற்றிய வழிகாட்டலும் விளக்கமும் வழங்கப்படும் என்ற ஒரு பலகையை வைத்துக் கொண்டு ஒரு மாணவி நின்று கொண்டிருந்தார். அவரிடம் டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு சில நிமிடங்கள் காத்திருந்தேன். டிக்கெட் பெற்றுக் கொண்ட எங்கள் அனைவரையும் வரவேற்று தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த மாணவி எங்களுக்கு ட்ரினிடி கோலேஜ் பற்றி விளக்கம் கொடுக்கலானார். இப்படி பணியாற்றும் வாய்ப்பு இங்கு வரலாற்றுத் துறையில் இறுதி ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த மாணவி ஜெர்மானிய வரலாறு, பொது வரலாறு ஆகிய துறைகளில் படித்துக் கொண்டிருப்பவர்.


அயர்லாந்தின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்ற சிறப்புப் பெற்றது மட்டுமல்லாமல் அயர்லாந்தின் அரசியல் மாற்றங்களிலும் பங்கு வகித்த பெருமை இந்தப் பல்கலைக்கழகத்திற்கு உண்டு. 16ம் நூற்றாண்டில், டப்ளினில் வாழ்ந்த மக்கள் எலிஸபெத் மகாராணியிடம் அனுமதி பெற்று தங்களுக்கு டப்ளின் நகரில் பல்கலைக்கழகத்தை 1592ம் ஆண்டில் உருவாக்கினர். 18ம் நூற்றாண்டு வாக்கில் இது ப்ரோட்டெஸ்டண்ட் சமயத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருந்தது. இக்கால கட்டத்தில் நாட்டில் சற்று அமைதியும் நிலவி வந்ததால் அயர்லாந்தின் அரசியல் பிரமுககர்கள் பலரது குழந்தைகள் தங்கள் கல்வியை இங்கு மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் முதல் பெண் மாணவி 1904ம் ஆண்டில் இணைக்கப்பட்டிருக்கின்றார். அடுத்த பத்து ஆண்டுகளில் பெண் மாணவியர்களின் எண்ணிக்கை 16% க்கு உயர்ந்திருக்கின்றது. முதலில் பெண்கள் இப்பல்கலைக்கழக்த்தில் கல்வி பயில பெறும் எதிர்ப்பு இருந்திருக்கின்றது. இதனை மாற்றி தற்சமயம் பல பெண்கள் இங்கே கல்வி பயில்கின்றார்கள் என்று சிரித்துக் கொண்டே எங்களுக்கு விளக்கமளித்துக் கொண்டு சென்ற மாணவி குறிப்பிட்டார்.
ட்ரினிடி காலேஜ் 40 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகம். இங்கே மருத்துவம், வரலாறு, உளவியல், தியோலொஜி. சட்டம் ஆகியவை முக்கிய துறைகளாக விளங்குகின்றன. மாணவர்களின் தங்கும் விடுதி. உணவு விடுதி, கடைகள் ஆகியவையும் வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளன.
இப்போது இருக்கும் இந்தக் கல்லூரியின் நூலகம் 1712ம் ஆண்டு கட்டப்பட்டது. 200,000 பழம் நூல்கள் இந்தநூலகத்தில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளே புகைப்படங்கள் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. நூல்களில் இத்தனை விதமா என வியக்க வைக்கும் அளவு மிகப்பெரிய நூல்களின் வகைகள், நடுத்தர அளவிலானவை சிறியவை, மிகச் சிறியன என பல்வேறு வகையில் நூல்கள் பகுதி பகுதியாகத் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நூலகத்தின் நடுவே மருத்துவ ஆய்வுகளை வெளிப்படுத்தும் ஆய்வுக் குறிப்புக்கள், கண்டுபிடிப்புக்கள் அனைத்தும் விளக்கங்களுடன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.


நூலகத்தின் உள்ளே செல்லும் போது வலது புறம் அமைந்துள்ள பகுதிக்குச் சென்றால் அங்கே புக் ஆஃப் கெல்ஸ் வைக்கப்பட்டிருக்கும் பகுதியைப் பார்த்து, அதன் விளக்கங்களையும் வாசித்து பின்னர் நூலையும் பார்க்கலாம். அதே கட்டிடத்தின் வழியாகவே நூலகத்தின் Long Room (நீண்ட அறை) சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் இந்த பிரமிப்பூட்டும் அனுபவத்தைப் பெறலாம். இந்த 200,000 நூல்கள் உள்ள அறையின் உள்ளே செல்வதே பிரமிப்பாக இருந்த்து.


அந்த வேளை அந்த அறைக்குள் நுழையும் அனைவருக்குமே ஒரு வித வித்தியாசமான, ஏதோ ஒரு வகையில் நிறைவளிக்கும் ஒரு நிலை தோன்றும் என்றே எனக்கு அப்போது மனதில் தோன்றியதை எனது குறிப்பில் குறித்து வைத்திருக்கிறேன். அங்கிருந்தவர்களின் முகத்திலும் நான் அனுபவித்த அந்த பிரமிப்பு தெரிந்தது. ஒரு வேளை என் மனம் அப்படி நினைத்திருக்கலாம். ஆனாலும் அது ஒரு வித்தியாசமான ஒரு அனுபவம் என்பதில் மறுப்பில்லை.
213 அடி நீளமும் 42 அடி உயரமும் உள்ள இந்தக் கட்டிடத்தில் 200,000 நூல்கள் உள்ளன. ட்ரினிடி பல்கலைக்கழகத்தில் மொத்தம் மூன்று மில்லியன் நூல்கள் உள்ளன. அதில் இந்த நீளமான அறையில் மட்டுமே 200,000 நூல்கள் அடங்கியிருக்கின்றன.
இங்கே http://www.panoramicireland.com/arch/trinity.html சென்றால் இணையத்திலேயே 3டி பனோராமா காட்சியாக இந்த நீண்ட அறையை கண்டு ரசிக்கலாம். பார்க்க மறக்க வேண்டாம்.
தொடரும்....!

1 comment:

Dr B Jambulingam said...

டிரினிடி கல்லூரியைப் பற்றி தற்போது அறிந்துகொண்டோம். நன்றி.

Post a Comment