Wednesday, March 23, 2016

அயர்லாந்தின் அழகில்..! - ஐயோனா 8

(2011 பயணத்தின் கட்டுரை)

இந்த கெல்ஸ் நூல் எப்படி ட்ரினிட்டி கோலேஜ்க்கு வந்தது என பார்ப்போம்.

அடிப்படையில் இது கையால் வர்ணம் தீட்டி எழுத்துக்களைக் கோர்த்து வடிக்கப்பட்ட ஒரு நூல். இதன் பக்கங்கள் அனைத்திலும் இருக்கும் வர்ண ஓவிய வேலைப்பாடுகளை மூன்று பாதிரிமார்கள் செய்திருக்கின்றனர். எழுத்துக்களை நான்கு பாதிரிமார்கள் வடித்திருக்கின்றனர். கி.பி 800ம் ஆண்டு வாக்கில் முடிக்கப்பட்ட இந்த நூல் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் நிறைவு செய்யப்பட்டதால் அந்த நகரின் பெயரிலே வழங்கப்படுகிறது. அயர்லாந்துக்கும் ஸ்கோட்லண்டுக்கும் இடையில் உள்ள ஐயோனா (Iona) தீவில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் இதன் ஆரம்ப கட்ட உருவாக்கப்பணிகள் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.

A எனக் குறிபிடப்பட்டுள்ள பகுதியில் ஐயோனா தீவு உள்ளது. ஐயோனாவிற்கும் டப்ளினுக்கும் உள்ள தூரத்தை இவ்வரைப்படத்தில் காணலாம்.


A எனக் குறிபிடப்பட்டுள்ள பகுதியில் கெல்ஸ் நகரம் உள்ளது. கெல்ஸுக்கும்  டப்ளினுக்கும் உள்ள தூரத்தை இவ்வரைப்படத்தில் காணலாம்.

தீவின் பெரிதாக்கப்பட்ட படம்


ஐயோனா (Iona) வில் கொள்ளையர்கள் மடத்தில் நுழைந்து தாக்கி அங்கிருந்த பொருட்களை சூறையாடிச் சென்று மடத்தையும் தீவைத்து கொளுத்தி நாசப்படுத்திய போது பாதிரிமார்கள் அங்கிருந்து சில முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு கடல் வழி பயணித்து அயர்லாந்தின் கெல்ஸ் நகருக்கு வந்திருக்கின்றனர். அங்கு கெல்ஸ் மடத்தில் இப்பணியத் தொடர்ந்து செய்து நிறைவேற்றி முழு நூலையும் முடித்திருக்கின்றனர்.

தற்சமயம் ஐயோனாவில் உள்ள ஐயோனா அபேய் (Iona Abbey). அழிவிற்குப் பின்னர் மீண்டும் சீரமைக்கப்பட்ட மடம்.

இந்த நூலில் ஆக மொத்தம் 680 பக்கங்கள் உள்ளன. அதில் இரண்டு பக்கங்களில் மட்டும் தான் வர்ணம் இல்லை. ஏனையவை முழுக்க முழுக்க கெல்ட்டிக் கலாச்சார ஓவியங்களைப் பிரதிபலிக்கும் சின்னங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

1661ம் ஆண்டு தொடங்கி இந்த நூல் ட்ரினிடி கோலேஜில் (Library of Trinity College - Dublin) ல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டாலும் பாதுகாப்பு முறைகள் சரியாக அமைந்திருக்கவில்லை. ஆக 1953ம் ஆண்டில் இந்த நூல் முறையாக தூய்மை செய்யப்பட்டு அசல் நூல் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சிறிதாக்கப்பட்டு வைக்கப்பட்டது. இந்த நூலின் அசலின் 2 பாகங்கள் ட்ரினிடி கோலேஜின் நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதன் மேலும் இரண்டு பாகங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதில்லையென்றாலும் அவை முக்கிய ஆய்வாளர்களுக்காக மட்டும் பார்வைக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. ட்ரினிடி கோலேஜில் உள்ள 2 பாகங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் திருப்பப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதனால் தினம் நூலகத்துக்கு வந்து இந்த நூலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தை வாசித்துச் செல்லலாம்.

இந்த நூலை மறுபதிப்பு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட சுவிஸர்லாந்தின் Faksimile Verlag (Fine Art Facsimile Publishers) நிறுவனத்தினர் இந்த நூலை கையில் தொடாமல் ட்ரினிடி காலேஜிலிருந்து வெளியே எடுக்காமல் ஒரு சிறப்பு கருவியை பயன்படுத்தி இதன் பக்கங்களைத் தொடாமலேயே காமெராவில் பதிவு செய்து இந்த நூலினை பதிவாக்கி முழுமைபடுத்தினர். ட்ரினிடி காலேஜ் சிறு எண்ணிக்கையில் இந்த நூலை சிறப்பு வெளியீடு செய்தனர். இந்தப் பதிப்பு நிறுவனத்துக்கு இந்தக் கருவியை உருவாக்க கால் மில்லியன் சுவிஸ் ப்ராங்க் தேவைப்பட்டதாம். இந்தக் கருவி கொண்டு 1986ம் ஆண்டில் சில நாட்கள் தொடர்ந்து இப்பணி செய்து முடிக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்த நூலை என் கண்களால் காணப்போகின்றேன் என நான் எதிர்பார்த்திருக்கவில்லை. டப்ளினில் வந்து இறங்கிய தினத்தில் மதியம் நண்பர்கள் சிலரோடு இணைந்து தனியாக ட்ப்ளின் சுற்றிப் பார்க்கலாமே என்று சென்ற நான் ட்ரினிட்டி காலேஜில் ஏதேச்சையாக நுழைய அங்கே இந்தப் பொக்கிஷத்தைக் கண்டு ரசிக்கும் பெரும் பேற்றினைப் பெற்றேப் என்று சொன்னால் மிகையாகாது.

தொடரும்..!

1 comment:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நீங்கள் கண்ட பொக்கிஷத்தைக் காண நாங்கள் காத்திருக்கிறோம்.

Post a Comment