Saturday, May 13, 2017

குரோய்ஷியா - அலசல்

Subashini Thf updated her cover photo.
குரோய்ஷியா தொடர்ச்சியாக பல போர்களைக் கண்ட நாடு. யுகோஸ்லாவியா என்ற பெயரை நினைத்தாலே நீண்டகால தொடர்ச்சியான போர்களும் அதன் சமயம் நிகழ்ந்த மனித உரிமை மீறல் தொடர்பான செய்திகளும் தான் நமக்கு நினைவுக்கு வரும்.
இன்றைய குரோய்ஷிய நிலப்பகுதி மக்கள் குடியேற்றம் நிகழ்ந்த மிகப் பழமையான ஒரு நிலப்பகுதியாகும். வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டு இங்கு மனித இனத்தின் வருகை இருந்தமைக்கானச் சான்றுகள் கிடைக்கின்றன. நியாண்டர்தால் மனிதர்களின் ஃபாசில்கள் இங்கு க்ராப்பானியா என்ற பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன எனும் போது இப்பகுதியில் மனித இனத்தின் நடமாட்டத்தின் பழமையை நாம் உணரலாம். ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போல பண்டைய கிரேக்க, ரோமானிய அரசுகளின் கீழ் இந்த நிலப்பகுதியும் இருந்துள்ளது.
குரோய்ஷிய மக்களைக் க்ரோட்ஸ் என அழைப்பர். இவர்கள் இன்றைய குரோய்ஷியா நிலப்பகுதிக்கு கிபி.7ம் நூற்றாண்டு வாக்கில் வந்தவர்கள் என அறியப்படுகின்றனர். அதே இனத்தைச் சேர்ந்த தோமிஸ்லாவ் இந்த நாட்டின் முதல் மன்னராக கிபி.925ல் அரியணை ஏறினார். அது முதல் குரோய்ஷியா ஒரு பேரரசு என்ற பெருமையைப் பெற்றது.
கி.பி 1102ல் ஹங்கேரி அரசுடன் ஒன்றிணைந்தது குரோய்ஷியா. 1527ல் ஓட்டமான் துருப்புக்கள் இப்பகுதியைத் தாக்கிய போது ஆஸ்திரிய-ஹங்கேரிக்கூட்டு ஆட்சி பேரரசின் கீழ் இது இருந்தது. இது முதலாம் உலகப்போர் வரை தொடர்ந்தது.
1918ல் முதலாம் உலகப்போருக்குப் பின்னர் குரொய்ஷியா தனி நாடாக இருந்தது. 2ம் உலகப்போரின் போது ஜெர்மானிய நாஸி அரசுக்குக் கீழ் குரோய்ஷியா வந்தது. போருக்குப் பின்னர் யுகோஸ்லாவியா என்ற கூட்டமைப்பின் கீழ் இருந்தது. இக்கூட்டமைப்பில் இன்றைய போஸ்னியா ஹெர்சகோவேனியா, குரோய்ஷியா, மெசடோமியா, மோண்டினெக்ரொ, செர்பியா, சுலோவேனியா ஆகியவை அங்கம் வகித்த நாடுகள். இதன் தலைநகராக பெல்க்ரேட் இருந்தது. கம்யூனிச சித்தாந்தத்தை உள்வாங்கிய நாடாக இந்த யுகோஸ்லாவியா என்ற கூட்டமைப்பு இருந்தது. 1991ம் ஆண்டு ஜூன் 25ம் நாள் குரோய்ஷியா தனி நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டது.
தொடர்ச்சியானப் போர்களினால் யுகோஸ்லாவியா சந்தித்த இழப்புக்கள் அதிகம். லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதும், பல நாச வேலைகள் நடைபெற்றதும் உலகம் அறிந்த செய்திகள் தான். இன்றளவும் யுத்தகால நாச செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகளையும் மாஃபியா கும்பல்களையும் பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டுதானிருக்கின்றன.
யுகோஸ்லாவியா என்ற கூட்டமைப்பில் இருந்த போது குரோய்ஷியாவின் வளங்கள் செர்பியாவினால் எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் இதனால் குரோய்ஷியா பெரும் பாதிப்புக்குள்ளானது என்றும் இங்கு அறிந்து கொண்டேன். செர்பியா ஆர்த்தடோக்ஸ் மதத்தை பின்பற்றும் நாடு. இக்கூட்டமைப்பில் இருந்த போஸ்னியா ஹெர்சகோவேனியா இஸ்லாமிய நாடு. குரோய்ஷியா கத்தோலிக்க பெரும்பாண்மையைக் கொண்ட நாடு. ஆக மத வேற்றுமையும் இனக்குழு வேற்றுமையும் மறுக்க முடியாத அம்சங்கள். செர்பியா குரோய்ஷியா மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவேனியாவிற்கு எதிராக நிகழ்த்திய போரில் எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டனர். கொடுமையான மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டன. குரோய்ஷியா இப்போருக்குப் பின்னர் தன்னை இக்கூட்டமைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதுடன் மோண்டினெக்ரோ நாட்டின் விடுதலைக்கும் உதவியது.
2009 ஏப்ரல் ஒன்றாம் தேதி குரோய்ஷியா நாட்டோவில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டது. 2013ம் ஆண்டு ஜூலை 1ம் நாள் குரோய்ஷியா ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்துக் கொண்டது.
5.7 மில்லியன் மக்கள் தொகை இன்று குறைந்து விட்டது. உள்ளூரில் வேலை கிடைக்காததால் பெரும்பாலான இளைஞர்கள் வேலை தேடி அயர்லாந்துக்கும் ஜெர்மனிக்கும் செல்கின்றனர்.
தூய்மையான சாலைகள். இங்கு யூரோ பயன்பாடு இன்னும் வரவில்லை. கரொன் பயன்படுத்துகின்றனர். பல உடைந்த வீடுகள் புற நகர்ப்பகுதியில் இன்னமும் இருக்கின்றன. பிராமாண்டமான கட்டிடங்கள் சாக்ரேப் நகர மையத்துக்குள் மட்டும் இருக்கின்றன.
நாட்டு மக்களின் வறுமை தெரிந்தாலும் ஓரளவு வளர்ந்து வரும் தொழில்நுட்ப வர்த்தகங்களின் தாக்கத்தையும் சாக்ரெப் பிரதிபலிக்கின்றது.
குரோய்ஷிய மொழியே இங்கே முக்கிய மொழி. அதோடு ஜெர்மன் மொழி அறிந்தோராக பலர் இருக்கின்றனர். என்னால் இலகுவாக மக்களிடம் ஜெர்மன் மொழி பேசி தகவல் பெற இது உதவியது. இளைஞர்கள் நன்கு ஆங்கிலம் பேசுகின்றனர்.
குரோய்ஷிய உணவு அதிகமாக கோதுமை ரொட்டி வகைதான். அதோடு மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும் மக்கள் உணவில் முக்கிய இடம் பெறுகின்றன. தங்கள் கலாச்சார உடைகளுடன் பெண்கள் சாலை வீதிகளில் தேவாலயம் செல்வதைக் காண முடிகின்றது. இங்கு பொதுப் போக்குவரத்து மிகச்சிறப்பாக இயங்குகின்றது. சுற்றுலாதுறை இனிமேல் தான் இங்கு வளரவேண்டும்.
அருங்காட்சியகங்கள் ஒவ்வொன்றும் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. சாக்ரெப்பில் எனக்கு நல்ல திருப்தியான உணவு கிடைக்கவில்லையென்றாலும் அருங்காட்சியகங்களும் தேவாலயங்களும் தந்த இனிய நினைவுகள் மனதை நிறைத்து விட்டன.
சுபா, சாக்ரெப் விமான நிலையத்திலிருந்து.



No comments:

Post a Comment