Saturday, September 23, 2017

போலந்து - போலந்து நோக்கி இப்போது பயணம் 1



க்ராக்காவ் - 400 ஆண்டுகளுக்கு முன் வரை போலந்து நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்த நகரம். இன்று கலாச்சார மையம் என்ற புகழுடன் திகழும் நகர். யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் கலாச்சார நகரம் என்ற சிறப்பும் கொண்ட நகரம். இந்த நகர் புராண நாயகன் க்ராக்குஸ் என்பவரால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 10ம் நூற்றாண்டு வாக்கில் ஐரோப்பாவின் பிரசித்தி பெற்ற நகரங்களுள் ஒன்றாக இந்த நகரம் வளர்ச்சியடைந்தது. மங்கோலியப் படைகள் இந்த நகரை 1241ம் ஆண்டு தாக்கியபோது முற்றிலுமாக இந்த நகரம் சேதமடைந்தது. இதனை அடுத்து 1257ம் ஆண்டு இந்த நகரம் சீரமைக்கப்பட்டு புது வடிவம் கண்டது. 

வெளியிலிருந்து இந்த நகர் தாக்கப்படாமல் காக்கும் வகையில் இந்த நகரைச் சுற்றி ஒரு சுவற்றினை உருவாக்கினர். யூதர்கள் அதிகமாக வந்து க்ராக்கவில் குடியேறத்தொடங்கினர். பொருளாதார ஆதிக்கம் பெற்ற இனமாக யூதர்கள் இப்பகுதியில் தம்மை நிலைப்படுத்திக் கொண்டனர்.

1364 வாக்கில் இந்த நகரம் பொருளாதாரச் சிறப்புடன் திகழ்ந்தது . 1364ல் மன்னர் 3ம் காசிமியர் க்ராக்காவ் பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். செக் நாட்டின் ப்ராக் பல்கலைக்கழகத்திற்கு அடுத்து உருவாக்கப்பட்ட, இன்றும் புகழுடன் விளங்கும் ஒரு பழமையான பல்கலைக்கழகமாக இது திகழ்கின்றது. இங்குதான் உலகம்் புகழும் விஞ்ஞானி நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் அவர்கள் தமது கல்வியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

16ம் நூற்றாண்டில் இத்தாலியில் நிகழ்ந்த ரெனைசான்ஸ் சீரமைப்பு நிகழ்வுகள் க்ராக்காவிலும் எதிரொலித்தன. புதிய பாணியிலான சிற்பக் கலைகள், கட்டிடக் கலைகள், என பழமைக்கு மாறான சமூக மாற்றங்கள் இங்கும் நிகழ்ந்தன.

18ம் நூற்றாண்டில் போலிஷ்-லித்துவானியா பிரிவு ஏற்பட்டது. இதன் விளைவாக பரந்த ஆஸ்திரிய பேரூஷிய பேரரசில் இடம்பெறும் நிலை போலந்துக்கும் ஏற்பட்டது. 1809ம் ஆண்டு பேரரசன் நெப்போலியன் போனபார்ட்டின் போர்ப்படை க்ராக்காவ் நகரையும் கைப்பற்றியது. 1815ம் ஆண்டு நடைபெற்ற வியன்னா காங்ரஸ் க்ராக்காவ் நகருக்கு ஓரளவு சுதந்திரத்துடன் கூடிய ஆட்சி அதிகாரத்தை வழங்கியது.

போலந்து யூத இன மக்கள் அதிகமாக வாழ்ந்த நாடுகளில் ஒன்று. 2ம் உலகப் போரின் போது போலந்து மிகப் பாதிப்புக்குள்ளாகியது. 6. 9.1939 நாசி படைகள் க்ராக்காவ் நகரை வந்தடைந்தன. க்ராக்காவ் நகரின் கசிமியர் பகுதி யூதர்கள் வசிக்கும் பகுதியாக இருந்தது. 60,000 யூதர்கள் இங்கு வசித்து வந்தனர். 2ம் உலகப் போருக்கு பின்னர் இந்த கசிமியர் பகுதியில் எஞ்சிய யூதர்களின் எண்ணிக்கை 5,000 .

க்ராக்காவ் நகருக்கு புற நகராக இருக்கும் அவுஸ்விட்ஸ் பிர்கெனாவ் பகுதியில் தான் நாசி அரசுக்கு எதிராக குரல் எழுப்பியோரை சிறை பிடித்து அடைத்து வைத்திருந்தனர்.

2ம் உலக்போரின் காலத்தில் ஹிட்லரின் நாசிப்படைகளால் உருவாக்கப்பட்ட மிகபெரிய வதை முகாம் (Nazi concentration camps) இந்த அவுஸ்விட்ஸ் பிர்கெனாவ் சிறைதான். இங்கு நாசி படைகள் செய்த கொடூரங்கள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளன. 2ம் உலகப்போர் காலத்தில் இந்த வதை முகாமில் 1.2 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள். அதில் மிகப்பெரும்பாண்மையோர் யூத மக்களே.

போலந்துக்கென்று தனி மொழி உண்டு. போலிஷ் இதன் அதிகாரப்பூர்வ மொழி. இது ஸ்லாவிக் மொழி குடும்பத்தைச் சேர்ந்தது. ஜெர்மனி ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் தாக்கத்தினால் டோய்ச் மொழியும் இங்கு ஓரளவு புழக்கத்தில் உள்ளது. போலந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம் பெறும் நாடுகளில் ஒன்று. ஜெர்மனிக்கு அருகில் எல்லை நாடாக இருந்தாலும் தனித்துவத்துடன் திகழும் ஒரு நாடு எனலாம்.

சுபா,
ஸ்டுட்கார்ட் விமான நிலையத்திலிருந்து.

No comments:

Post a Comment