19.1.2020
ஊர்சுற்றி மாசுபடாத இயற்கையின் மத்தியிலும், அதன் உண்மையான வாரிசுகளின் இடையேயும் மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் கழித்தால் அவனுக்கு எவ்வளவோ மகிழ்ச்சி கிட்டும். அவன் ஒவ்வொரு நாளும் புதிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்வான்,. வரலாறு, மனித இனம், மொழி அல்லது வேறு ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிய ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பான். அவன் அங்கிருந்து வெகுதூரம் போய் விட்டால் பழைய நினைவுகள் இனிய நினைவுகளாக நிலைத்து விடுகின்றன. அந்த இனிய நினைவுகள் அவனைப் பொறுத்தவரையில் அவனுடனே மறைந்து விடலாம். ஆனால் அவன் தன் நினைவுகளுக்கு எழுத்து வடிவம் தந்து விட்டுப் போனால் அவன் மறைந்த பின்னரும் லட்சக்கணக்கான வாசகர்களின் கண்களின் முன்னால் அவ்வினிய நினைவுகள் உயிர்பெற்று எழும்.
-ஊர்சுற்றிப் புராணம், ராகுல் சாங்கிருத்யாயன்"
சட்ராஸ் அல்லது சதுரங்கப்பட்டினம் என்ற பெயர் ஓரிரு முறை மட்டுமே சில டச்சு ஆவணங்களில் பார்த்த நினைவு எனக்கு உண்டு. ஆயினும் இப்பகுதிக்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை. இது ஒரு கடற்கரைப் பட்டினம் என்பதை வரைபடத்தில் பார்த்திருந்தேன். ஆனால் ஆழமாக மனதில் ஏனோ இது பதியவில்லை. தோழி ரேச்சல் எனது வரலாற்று ஆர்வத்தைப் புரிந்து கொண்டு இந்த இடத்திற்கு நான் வரவேண்டும் எனச் சொல்லியிருந்தார். ஆகஇந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இச்சிற்றூரை எனக்கு அறிமுகப்படுத்திய ரேச்சலுக்கு நான் நன்றி சொல்வது கடமையாகும்.
தமிழக நில வரைபடத்தில் மாமல்லபுரத்திற்கு அடுத்த நகரமாக சதுரங்கப்பட்டினம் வருவதை நினைவுபடுத்திக் கொண்டேன். மதியம் ஏறக்குறைய 12 நெருங்கிக்கொண்டிருந்தது. நாங்கள் கோட்டையின் வாயில் பகுதி வந்தடைந்து உள்ளே அனுமதி உண்டா என்று தேடிப் பார்த்தோம். இந்தியத் தொல்லியல் துறையின் ஊழியர் ஒருவர் அங்கு அமர்ந்திருந்தார். அவருடன் அவரது நண்பர் ஒருவரும் அமர்ந்திருந்தார். அவரிடம் இந்தக் கோட்டையை நாங்கள் பார்க்கவேண்டும் என்று கூறிவிட்டு கோட்டையைப் பற்றி சற்று விசாரித்தோம். கோட்டையைப் பற்றிய விவரங்கள் அடங்கிய லேமினேட் செய்யப்பட்ட அட்டைகளை எனக்குக் கொண்டுவந்து கொடுத்தார். அதில் கோட்டையின் வரலாறு பற்றிய செய்திகள் வழங்கப்பட்டிருந்தன. அதனை வாசித்து விட்டு ஒவ்வொரு பகுதியாகப் பார்த்துவரக் கிளம்பினோம்.
இன்று நாம் காணும் சதுரங்கப்பட்டினம் கிபி 17ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. கி.பி. 1353ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று இப்பகுதியை ராஜநாராயணன் பட்டினம் எனக் குறிப்பிடுகின்றது என்றும், இப்பகுதியைச் சோழ மன்னர்களின் கீழ் ஆட்சி செய்த சம்புவராயர்கள் ஆட்சி செய்தனர் என்றும், கி.பி.1337லிருந்து 1367ம் ஆண்டில் ஆட்சி செய்த சிற்றரசரின் நினைவாக இப்பெயர் அமைந்ததாகவும், கி.பி.15ம் நூற்றாண்டு விஜயநகர நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட இங்குள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு ஒன்று இப்பகுதியைச் சதிரவாசகன்பட்டினம் என்றும் குறிப்பிடுவதைத் தகவல் அட்டையில் உள்ளக் குறிப்புக்களின் வழியாக அறிந்து கொண்டோம். கடற்கரை துறைமுகப் பட்டினமாக விளங்கிய இப்பகுதி மெல்லிய மஸ்லீன் துணிகள் மற்றும் முத்துக்கள் உற்பத்தி ஏற்றுமதி ஆகிய தொழிலுக்காகப் பிரசித்தி பெற்ற ஒரு நகரமாக அன்று விளங்கியது.
இன்று நாம் காணும் சிதிலமடைந்த கோட்டை டச்சுக்காரர்களால் 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 1818 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் படைகள் இக்கோட்டையைத் தாக்கி டச்சுக்காரர்களிடமிருந்து அதனைக் கைப்பற்றிக் கொண்டது. பின்னர் சதுரங்கப்பட்டினம் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.
1620 தொடங்கி 1769 வரை இப்பகுதியில் பணியாற்றிய முக்கிய டச்சு அதிகாரிகள் சிலரது கல்லறைகள் இக்கோட்டையின் வலது புறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கல்லறையின் மேற்பகுதியிலும் கல்வெட்டும் அரசு முத்திரையும் பதிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரசு முத்திரையிலும் வெவ்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்ட வகையில் கல்லறையின் மேற்பகுதி அமைந்திருக்கின்றது. கல்லறை பகுதிக்கு அடுத்து ஒரு கட்டிடம் உள்ளது. சிதிலமடைந்த கட்டடத்தின் உள்ளே சென்று பார்த்தோம். பின்னர் வெளியே வந்து ஏனைய பகுதிகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு ஒவ்வொரு பகுதிகளிலும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன் தென்னிந்தியப் பகுதியில் ஆளுமை செலுத்திய ஐரோப்பியர்களின் வரிசையில் போர்த்துக்கீசியர்களும் டச்சுக்காரர்களும் முக்கியத்துவம் பெறுகின்றனர். அதிலும் குறிப்பாகச் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியான பழவேற்காடு, மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், நாகப்பட்டினம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் டச்சுக்காரர்களின் ஆளுமை ஒரு நூற்றாண்டுக்கும் மேல் பலம் பொருந்தியதாக அமைந்திருந்தது.
சதுரங்கப்பட்டினம் நெசவாளர்கள் நிறைந்த ஒரு பகுதியாக 16ஆம் நூற்றாண்டில் திகழ்ந்தது. மிக முக்கியமாக மெல்லிய மஸ்லீன் துணிகள் ஐரோப்பியர்களின் கவனத்தை ஈர்த்ததன் விளைவாக இப்பகுதியில் டச்சுக்காரர்கள் ஒரு தொழிற்சாலையை அன்று அமைத்தார்கள். சதுரங்க பட்டினத்தில் அமைக்கப்பட்ட தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட மஸ்லீன் துணிகள் ஐரோப்பாவிற்குக் கப்பல்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டன. வணிகம் மிகச் சிறப்பாக வளர்ந்ததால் டச்சுக்காரர்கள் அங்கு ஒரு கோட்டையைக் கட்ட முயன்று இன்று நாம் காணும் இக்கோட்டையைக் கட்டினார்கள்.
டச்சுக்காரர்களிடமிருந்து இக்கோட்டையைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இதனைப் பாதுகாக்கவில்லை. இன்று இக்கோட்டை இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. சதுரங்கப்பட்டினம் உள்ள பகுதிக்கு அருகில் தான் கல்பாக்கம் அணு ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
சிதிலமடைந்து காட்சியளித்தாலும் இக்கோட்டை இன்றும் தமிழக வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு சின்னமாகவே திகழ்கின்றது. கோட்டைக்குள் உள்ள கல்லறையில் உள்ள சின்னங்கள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட வேண்டியவை. ஒரு கல்லறையில் கப்பல் வடிவமும் மற்றொரு கல்லறையில் சூலம், ருத்ராட்சம், விலங்கு சின்னமும், மற்றுமொரு கல்லறையில் புலியின் சின்னமும், மற்றுமொரு கல்லறையில் மீன் சின்னமும் என வெவ்வேறு சின்னங்கள் பொறிக்கப்பட்ட வகையில் கல்லறைகள் டச்சு மொழி கல்வெட்டுகள் இணைந்த வகையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வெட்டுகள் மற்றும் சின்னங்கள் சொல்லும் செய்திகளை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரையாக ஆய்வு மாணவர்கள் சமர்ப்பிக்கலாம். ஆய்வுக்கு வழிவகுக்கும் சிறந்த களமாக இப்பகுதி உள்ளது என்பதை நானும் தோழி ரேச்சலும் பேசிக்கொண்டே கொளுத்தும் மதிய வெயிலில் நடந்தோம்.
இக்கோட்டை வளாகத்திற்குள்ளேயே ஒரு கிணறு இருக்கின்றது. விரிந்த கிளைகளுடன் கூடிய 200 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு புளியமரமும் இருக்கின்றது. கோட்டையை முழுமையாகப் பார்த்துவிட்டு தொல்லியல் துறை பணியாளரிடம் நன்றி சொல்லி வருகைப்பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டுவிடைபெற்று அங்கிருந்து புறப்பட்டோம்.
ஒரு காலத்தில் பெரும் வணிக நகரமாகவும், ஐரோப்பியர்கள் விரும்பி வாழ்ந்த ஒரு நகரமாக இருந்த சதுரங்கப்பட்டினம் இன்று ஆள் நடமாட்டம் குறைந்து முக்கியத்துவம் குறைந்த ஒரு நகரமாகக் காட்சியளிக்கின்றது. சதுரங்கப்பட்டினம் இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதிதான். கடற்கரையும் இருப்பதால் மிகச் சிறப்பாக இப்பகுதியை ஒரு சுற்றுலாத்தலமாக அரசு மாற்றி அமைக்கலாம். அப்படிச் செய்யும் பொழுது உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் விரிவாக அமையும். சுயதொழில் பெருகும். அதேசமயம் வரலாற்றுச் சிறப்பும் பாதுகாக்கப்படும்.
தமிழகத்தின் உள்ளே ஒவ்வொரு இடத்திற்குப் பயணிக்கும் போதும், இவ்வளவு இயற்கை வளத்தைப் பொருளாதார ரீதியாக வலுவாக மாற்றாமல் இருக்கிறார்களே என நினைத்து நான் வருந்துகின்றேன். இயற்கை வளம் இல்லாத எத்தனையோ நாடுகள் தமது தீவிர முயற்சியினால் நாட்டின் வளர்ச்சியை உயர்த்தி இருக்கின்றன. ஆனால் தேவைக்கு அதிகமான மனித வளம், இயல்பான இயற்கை வளம், வணிகத்திற்கு ஏற்ற இயற்கை சூழல் என அமைந்த பல சிற்றூர்கள் தமிழகத்தில் அதன் சிறப்பும் பொலிவிழந்து பரிதாபமாகக் காட்சி அளிப்பது வேதனையை அளிக்கின்றது.
சதுரங்கப்பட்டினத்திற்கான எனது பயணம் தமிழகத்தில் டச்சுக்காரர்களின் ஆளுமையை ஓரளவு நேரடியாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு வழங்கியது. இதேபோல அடுத்து மற்றுமொரு தமிழகத்துக் கடற்கரையோர நகருக்கு விரைவில் செல்லவேண்டும் என்று மனதில் திட்டம் ஓடத்தொடங்கிவிட்டது. வரலார்றுத் தேடல் நிறைந்த பயணத்திற்கும் ஆய்விற்கும் தான் முடிவில்லையே :-)
-சுபா
No comments:
Post a Comment