Friday, February 7, 2020

ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள் -1



கடந்த சில தினங்களுக்கு முன் காலை 9 மணிக்கு கடலூரில் ஒரு மகளிர் கல்லூரியில் ஒரு கருத்தரங்கை தொடக்கிவைத்து சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். சென்னையிலிருந்து ஒரு வாகன பயணம்; இடையில் தோழி ரேச்சலும் இணைந்து கொள்வதாகத் திட்டம். அன்றைய நாள் முழுதும் கடலூரில் செலவிட்டு இரவு திரும்புவதாக எங்கள் பயணத் திட்டம் இருந்தது. கடலூருக்கு என நான் செல்வது இதுவே முதல் முறை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடலூர் சென்றிருந்த போது திரும்பிச் செல்லும் பாதையில் கடலூரைக் கடந்து வரும் வாய்ப்பு கிடைத்தது. பண்டைய தமிழக வரலாறு மற்றும் ஐரோப்பியர்கள் வருகையால் ஏற்பட்ட மாற்றம் ஆகிய வரலாற்றுத் தகவல்களை அதிகம் கொண்டிருக்கும் னகரங்களின் வரிசையில் கடலூரும் ஒன்று என்பதை நான் அறிவேன். ஆயினும் நேரில் சென்று பார்த்துவர சரியான வாய்ப்பு அமையாத காரணத்தால் ஆவல் இருந்தாலும் அது சாத்திய படாமலேயே தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. அந்த குறையை போக்குவதாக இந்த பயணம் அமைந்தது.

பண்டைய காலம் தொட்டே கடலூர் கடல் வணிகத்திற்கு மிக முக்கியமான ஒரு துறைமுக நகரமாக விளங்கியது. 17ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு டச்சுகாரர்கள், போர்த்துகீசியர்கள், பிரெஞ்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் தாக்கம் இப்பகுதியில் நிலைபெற்றது. ஜெர்மானிய பாதிரிமார்கள் தரங்கம்பாடியை அடுத்து இப்பகுதியில் தங்கள் சீர்திருத்த கிருத்துவ மையத்தையும் 18ஆம் நூற்றாண்டில் உருவாக்கினார்கள் என்பது வரலாறு.முதலில் கடலூருக்கு வணிகம் செய்ய வந்த பிரெஞ்சுக்காரர்கள் பின்னர் அருகாமையில் இருக்கும் பாண்டிச்சேரியில் தங்களது வணிக மையத்தை ஏற்படுத்தி 1674 ஆம் ஆண்டு முதல் அப்பகுதியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கினர். 1690ல் கடலூரில் ஆங்கிலேயர்கள் தங்கள் வசம் ஆக்கிக் கொண்டார்கள். 1758ம் ஆண்டு வரை கடலூர் தென்னிந்திய மாவட்டங்களின் தலைநகரமாக பிரித்தானிய காலனித்துவ அரசின் கீழ் அமைந்திருந்தது. இன்றும் இங்கு காட்சி அளிக்கும் செயிண்ட் டேவிட் கோட்டையில் தான் அன்று அரசு நிர்வாகம் செய்யப்பட்டது. இது ராபர்ட் கிளைவ் கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது.

எனக்குக் காலை நேரப் பயணத்தில் சாலையோர கடைகளில் சூடான தேநீர் வாங்கி அருந்துவது மிகப் பிடிக்கும். வாகனம் ஓட்டி தேனீருக்காக நிறுத்தியபோது நாங்களும் இறங்கிக் கொண்டோம். நான் கசப்பாக காப்பியும் தேநீரும் அருந்துவதை அறிந்திருக்கும் தோழி ரேச்சல் தேனீர் போடுபவரிடம் ஸ்ட்ராங் டிகாக்ஷன் போட்டுத் தாருங்கள் என கேட்டுக்கொண்டார். இருவருக்குமே தேனீர் வந்தது. ஆனால் எதிர்பார்த்த சுவை இல்லை. சும்மாவே தேனீர் வாங்கியிருந்தால் சுவையாக இருந்திருக்குமோ என்று பேசிக்கொண்டோம். சில நேரஙளில் இப்படித்தான் நாம் ஏதாவது ஒன்று சொல்லி இயல்பாகவே நன்றாக இருக்கும் ஒன்றை அப்ப்டியோ மாற்றி விடும் அனுபவம் ஏற்பட்டு விடுகிறது. :-

ஏறக்குறைய மூன்று மணி நேர வாகன பயணம். செங்கல்பட்டு மதுராந்தகம் மேல்மருவத்தூர், திண்டிவனம், விக்கிரவாண்டி, மாளிகைமேடு, நெல்லிக்குப்பம் என ஒவ்வொரு ஊராக பார்த்துக்கொண்டே வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். வரும் வழியில் தென்பெண்ணை ஆற்றைக் கடந்து எங்கள் பயணம் இருந்தது.

விக்கிரவாண்டி தொடங்கி மாளிகைமேடு, நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகள் பசுமையாக இருந்தன. இப்பகுதிகளில் நிலத்தடி நீர் வளமான இயற்கைச் சூழலையும் விவசாய முயற்சிகளுக்கு ஆதாரமாகவும் இருப்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். நான் சென்றிருந்தபோது இப்பகுதியில் கரும்புத் தோட்டங்களில் ஆணும் பெண்ணுமாக மக்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். காய்கறிகள் விவசாயம் சாலையின் இருபுறத்திலும் காணக்கூடியதாக இருந்தது.

முதலில் கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிற்பகல் 2 மணி வரை கலந்துகொண்டு, பின்னர் பெரியார் அரசுக் கல்லூரியிலும் தமிழ் துறை ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாலை நான்கு வாக்கில் நிகழ்ச்சிகளிலிருந்து விடுபட்டுக் கொண்டோம். உரை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த சகோதரர் முனைவர் ஜானகி ராஜா ஐரோப்பியர் கால கட்டடங்கள் சிலவற்றைச் சுற்றிக்காட்ட திட்டமிட்டிருந்தார்.

முதலில் நாங்கள் வந்தடைந்த இடம் சில்வர் பீச் அல்லது வெள்ளி கடற்கரை. இப்படி ஒரு அருமையான கடற்கரை இங்கே இருக்கும் என நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விரிவான மணல் நிறைந்த கடற்கரை அழகாக காட்சியளித்தது. அரசு கல்லூரி மாணவர்கள் கல்லூரி முடிந்து அங்கு கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்தார்கள். கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் பெரியார் அரசு கல்லூரி அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வியைப் பெற மிக முக்கிய அடித்தளம் அமைக்கும் ஒரு கல்லூரி. ஆயினும் சில மாணவர்கள் பாட நேரத்தில்கூட கடற்கரையில் நேரத்தை செலவிடுகிறார்கள் என்ற செய்தி வருத்தம் அளிக்கத் தான் செய்தது.

சாலையில் மெதுவாக வாகனத்தில் பயணித்துக் கொண்டே கடற்கரையை ரசித்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்ணமயமான படகுகள் கண்களைக் கவர்ந்தன. இறங்கி நின்றவாறு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு அதே சாலையில் எங்கள் பயணம் தொடர்ந்தது.

தொடரும்
-சுபா

No comments:

Post a Comment