23.1.2020
ஊர்சுற்றிப் புராணத்தில் கடலூருக்குச் சென்ற செய்திகளைப் பத்து நாட்களுக்கு முன்பு பகிர்ந்திருந்தேன். இடையில் அதனைத் தொடர முடியவில்லை..
தமிழகத்திலிருந்து ஜெர்மனிக்குத் திரும்பி விட்டாலும், கதை பாதியிலேயே நிற்கிறதே என்று அவ்வப்போது நினைத்துப் பார்த்தாலும், இப்போதுதான் கதையைத் தொடர எனக்கு நேரம் கிடைத்தது.
வாருங்கள் ... படகுத்துறையில் என்ன நடந்தது என்பதைக் கொஞ்சம் சொல்கிறேன்.
ராபர்ட் கிளைவ் தங்கியிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கவனித்துக் கொண்டிருந்த அன்றைய முக்கியத்துவம் பெற்ற அந்தக் கட்டடம் இன்று சிதிலமடைந்த நிலையில் இருக்கின்றது. படிகளில் ஏறி உள்ளே என்ன தெரிகிறது என்று உடைந்த ஜன்னல்கள் வழியாக நானும் ஏனைய தோழர்களும் கவனிக்கத் தொடங்கினோம். உள்ளே உள்ளூர் மக்கள் சிலர் தங்கியிருக்கின்றனர் என்பதற்குச் சான்றாகப் பாய் படுக்கைகள் ஆங்காங்கே தென்பட்டன. இந்த பெரிய பழம் மாளிகையில் அன்று ஆங்கிலேயர்கள் உள்ளூர் மக்களைத் தங்க அனுமதித்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. உள்ளூர் மக்கள் தற்காலிகமாக இங்கே தங்குகிறார்கள் என்பதை அப்போதைய சூழல் வெளிப்படுத்தியது.
வெளியே சில பெண்மணிகள் பாய் போன்ற ஒரு பெரிய துணியை விரித்து அதில் கடலிலிருந்து பிடித்து வந்திருந்த கடல் உணவு வகைகளை எடுத்துப் போட்டுக் காய வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண்மணி கையில் வலை நிறையச் சிப்பிகளைக் கடலிலிருந்து எடுத்துக் கொண்டு வருவதைப் பார்த்தோம். அவரிடம் போய் அதை அருகாமையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும் கண்களும் கவனமும் எனக்குப் படகுத்துறை நோக்கியே இருந்தன.
படகுத்துறை அருகில் சென்று அங்கிருந்து ரோபர்ட் க்ளைஃப் தங்கியிருந்த அந்தப் பாழடைந்த மாளிகையைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன். சட்டென்று ஒரு ஆணின் குரல். "அம்மா பார்த்து நடங்க.. விழுந்திட போறீங்க.." என.. கரிசனம் நிறைந்த குரல்.
கடலுக்குச் செல்லவிருக்கும் படகுகளை வர்ணம் பூசி அழகு படுத்திக் கொண்டிருந்தார்கள் ஒரு சிலர். ஏனையோர் இளைஞர்கள் ஒருவர் மட்டும் 50 வயது மதிக்கத்தக்கவர். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன். "இந்தப் படகுகளைப் பற்றிச் சொல்லுங்கள், எங்கே செல்கின்றன" என விசாரிக்கத் தொடங்கினேன். அவரது வேலையை எனது பேச்சு தடை செய்கின்றது என்ற எந்த கோபமும் இல்லாமல் புன்னகையோடு வந்து விளக்க ஆரம்பித்தார்.
ஒவ்வொரு படகும் அழகாகத் தூய்மை செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு அவை இந்த சோழமண்டல கடற்கரை வெளிப்பகுதியில் வடக்கு நோக்கிச் சென்று அங்கு எல்லோரும் ஒன்றுகூடி ஒரு மிகப்பெரிய மீன் பிடிக்கும் கப்பலில் பயணம் செல்வார்களாம். தயாரிப்பு வேலை என்பது சாதாரணமல்ல. மிகுந்த பொருட்செலவு அதில் உள்ளது என்று விரிவாகத் தகவல்களை வழங்கினார். ஒருமுறை கடலுக்குள் செல்லும் மீன்பிடிக்கும் கப்பலில் ஏறக்குறைய ரூபாய் 6 லட்சத்திற்கான பொருட்கள் இருக்குமென்றும், மீன் பிடித்துக் கொண்டு வரும் பொழுது அது ஏறக்குறைய 15 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சரக்குகளாக இருந்தால்தான் அவர்களுக்கு அதில் லாபம் காண முடியும் என்றும் விளக்கினார். இவ்வளவு பணச்செலவு ஆகின்ற வேலையாக இருக்கின்றதே இந்த மீன்பிடித்தொழில், என்று நானும் தோழர்களும் பேசிக்கொண்டோம். என்னுடன் வந்த தோழர்கள் அவர்களுக்குத் தெரிந்த தகவல்களையும் கூடுதலாக எனக்கு விளக்கினர். மிகப்பெரிய பொருட்செலவும், அதேவேளை வருமானமும் தரக்கூடிய ஒரு தொழில் இது என்று நினைத்தபோது இந்தப் புதிய செய்திகளை அறிந்து கொண்ட மகிழ்ச்சி மனதிலிருந்தது.
கடற்கரையோர மீனவர்களது வாழ்க்கை என்பது நகர்ப்புற மக்களுக்குத் தூரமான விசயமாகவே இருக்கின்றது. சந்தையில் மீன் வாங்கி சுவையாக மணக்க மணக்கக் குழம்பு வைத்துச் சாப்பிட விரும்பும் நாம் மீன்களைப் பிடிக்கக் கடலுக்குச் செல்லும் மீனவ நண்பர்களின் வாழ்க்கையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லையே என நினைத்துக் கொண்டேன். நெய்தல் நில வாழ்க்கை ஆராயப்பட வேண்டியது!
படகுகளின் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பி அங்குச் சென்றேன். தோழி ரேச்சல் "படகு சவாரி செல்கிறீர்களா" என்று ஆவலைத் தூண்டும் வகையில் கேட்டார். இப்படி யாரும் சொல்லி விட்டால் போதுமே... எனக்கு கண்டிப்பாகப் போக வேண்டும் என்று மனதில் ஆசை முளைத்து விடும். "இந்தப் படகில் செல்ல முடியுமா? நீங்கள் வேலையாக இருக்கிறீர்களே" என்று அந்த மீனவ நண்பரைக் கேட்டேன்.
எந்தத் தயக்கமும் இல்லை. "வாங்க அழைத்துக்கொண்டு செல்கிறேன்", என்று சொல்லி எங்களைப் படகில் வரவேற்று ஏற்றுக் கொண்டார். சற்றும் எதிர்பார்க்கவில்லை இந்த அன்பான அழைப்பை. என்னுடன் தோழி ரேச்சல், தம்பி ஜானகிராஜன் உடன்வர அந்த மீனவ நண்பர் தனது உறவினர் ஒரு இளைஞரையும் அழைத்துக்கொண்டு நாங்கள் ஐவராக படகுப் பயணத்தைத் தொடங்கினோம்.
படகின் எந்திரத்தை அந்த இளைஞர் ஆரம்பிக்க, படகு மெல்ல நகரத் தொடங்கியது. தமிழ் சினிமாக்களில் வருகின்ற எம்ஜிஆர் பாடல் என் மனதில் ஒலிக்கத் தொடங்கியது.
ஓடும் மேகங்களே
ஒருசொல் கேளீரோ..
No comments:
Post a Comment