Saturday, February 29, 2020

ஊர் சுற்றிப்புராணம் - கடலூரில் ஒரு நாள் -3

23.1.2020

(கடலூருக்கு நான் சென்று வந்த ஊர் சுற்றிப் புராணத்தை இடையில் சில நாட்கள் தொடர முடியவில்லை... இப்போது விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.. படகில் எங்களோடு சேர்ந்து வாருங்கள்..)

முதல் பாடல் மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் போதே மேலும் ஒரு படகுப் பாடல் மனதில் ஒலிக்கத் தொடங்கியது....

’வசந்த கால நதிகளிலே
வைரமணி நீரலைகள்’

பாடல் இனிமை தான்..
ஆனாலும் திரைப்படத்தில் பாடல் காட்சி பயங்கரமானதாயிற்றே... எங்கே.. படத்தில் வருவது போல் படகிலிருந்து நாம் கடலில் விழுந்து அசம்பாவிதம் ஆகிவிடக்கூடாதே என்று மனதிற்குள் ஒரு எச்சரிக்கை ஒலி..
பாடல் ஓடிக் கொண்டிருக்கும் வானொலியை நிறுத்துவது போல மனத்திரையில் ஓடிய பாடல் காட்சியையும் நிறுத்திக்கொண்டேன்.

படகு சற்று வேகமாகப் பயணிக்கத் தொடங்கியது. எங்களை அழைத்து வந்த அந்த மீனவ நண்பரும் அவரது உறவினரான அந்த இளைஞனும் எங்களுடன் பேசிக்கொண்டே படகைச் செலுத்திக் கொண்டு வந்தனர். ஒரு நீளமான கம்பு நுனியில் துணி ஒன்று கட்டப்பட்டிருந்தது. அதைக் கொண்டு போய் கடலில் ஒரு இடத்தில் குத்தி நிறுத்தினார். இதுதான் கொடி. இப்படி கடலில் செல்லும் போது நாங்கள் இந்தக் கொடியைக் குத்தி நிறுத்தி விட்டுச் செல்வோம். படகு கடலுக்குள் சென்றிருக்கின்றது என்பதற்கு இது அடையாளமாகும் என்று விளக்கினார்.

தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்தோம். திடீரென்று துள்ளிக் குதிக்கும் நூற்றுக்கணக்கான மீன்கள். வெள்ளி நிறத்தில் பளிச் பளிச்சென கண்களை கவர்ந்தன. உடனே எல்லோரும் புகைப்படம் எடுப்போம் என முயற்சித்தோம்.. ஆனால் கண்களுக்குத் தெரியும் காட்சி புகைப்படக்கருவிக்குத் தெரிவதில்லை. இத்தகைய மீன் துள்ளும் எழில் காட்சிகளைக் கண்களால் நேரில் காண்பதுதான் இதனை முழுமையாக ரசிப்பதற்கு உள்ள ஒரே வழி. அதனை அன்று கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம்.

படகு மீண்டும் சென்று கொண்டே இருந்தது. தோழி ரேச்சலுக்கு டைட்டானிக் படம் நினைவுக்கு வந்துவிட்டது. டைட்டானிக் ஹீரோ போல நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். பெரியவர்கள் கூட குழந்தைகள் ஆகிப்போவது இத்தகைய பயணங்களில் தான். நானும் அதற்கு விதிவிலக்கல்ல.

எங்களை அழைத்து வந்த மீனவ நண்பர் படகு இயந்திரத்தை எப்படி இயக்குவது என எனக்கு காட்டுவதாகக் கூறி அழைத்தார். அருகில் சென்று அவர் சொல்லிக் கொடுத்த வகையில் பயிற்சி எடுத்துக்கொண்டேன். தோழி ரேச்சல் எங்களிருவரையும் பார்த்து கிண்டல் செய்யத் தொடங்கிவிட்டார். எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் போல படகுப்பயணமா... நீங்கள்தான் எம்ஜிஆர் என்று அந்த மீனவ நண்பரைச் சுட்டிக்கட்டி அவரை கேலி செய்யத் தொடங்க, படகில் எல்லோரும் வயிறு குலுங்கச் சிரித்தோம். அந்த மீனவ நண்பரின் முகமெல்லாம் வெட்கம். அந்தக் காட்சியும் சூழலும் நட்பு உணர்ச்சியும் என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தன.

எங்கள் படகு கடந்து சென்ற பகுதியில் ஏராளமான மீன்பிடி படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது, இதுநாள்வரை நான் கண்டிராத ஒரு புது உலகம் போல எனக்குக் காட்சி அளித்தது. நான் கற்பனை செய்து பார்க்காத தமிழகத்தின் ஒரு பகுதி. வானமும் கடலும் நீலமாகக் காட்சியளிக்க, கரையோரத்தில் இருந்த எண்ணற்ற படகுகள் வர்ணஜாலம் காட்டிக்கொண்டு வரிசையாக நின்று கொண்டிருந்தன. படகுகளின் பெயர்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக, ஆனால் அதே வேளை நாம் அறிந்த பெயர்களாக வைக்கப்பட்டிருந்தன.’ ஸ்ரீசெந்தில்குமரன், ஸ்ரீ முத்துமாரியம்மன், குமரன், மதுரைவீரன், சாந்தி’ என்ற பெயர்களுடன் அன்மைகால ’புள்ளிங்கோ’ வரை என படகுகள் அடையாளப் பெயர்களுடன் அழகழகாய் காட்சி அளித்தன.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு அழகிய வர்ணம் தீட்டி அதற்கு தனித்துவமாக ஒரு பெயரும் சூட்டி தங்களது படகுககளை மிகக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்கின்றனர் என்பது புரிந்தது. கடற்கரையோர மீனவர்களின் வாழ்க்கையில் படகுகள் மிக உயர்ந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. கடற்கரையோர வாழ்க்கை என்பது தனித்துவம் மிக்கது. நெய்தல் நிலப் பண்புகளைக் குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோர வரலாற்று நிகழ்வுகளை ஆராய வேண்டும் என்ற தீவிரம் என் மனதிற்குள் ஆழ வேரூன்றி கிளைவிட்டு விரிய ஆரம்பித்தது.

வரலாற்று ஆர்வலர்களால் இன்று அதிகம் பேசப்படாத, அறியப்படாத தமிழகத்தின் நெய்தல் நிலப் பகுதியை அறிந்துகொள்ளவேண்டும் என்ற சிந்தனை மனதிற்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு பேரலை நாங்கள் சென்ற படகினைத் தாக்கியது. படகின் முன் பகுதியில் இருந்த தம்பி ஜானகிராஜா எழும்பி படகை நனைத்த அலையினால் முழுவதுமாக நனைந்து விட, படகில் இருந்த நாங்களும் அதிர்ந்து போனோம்.










தொடரும்
சுபா

No comments:

Post a Comment