Monday, December 22, 2003

Travelog - Seoul, S.Korea 2

தென் கொரியாவின் வடக்குப் பகுதியில் வடகொரியா அதோடு, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் அமைந்திருக்கின்றன; கிழக்கில் ஜப்பான். ஆக தென் கொரியா பல ஆண்டுகளாக பலமுனை தாக்குதல்களை இந்த அண்டை நாடுகளிடமிருந்து அனுபவித்து வந்துள்ளது என்பதை தெரிந்து
கொள்ள முடியும்.

கொரிய தீபகற்பத்தின் சுற்றளவு 222,154 square kilometers. ஏறக்குறைய இங்கிலாந்தின் அளவை ஒத்தது. தென் கொரியாவின் 70 சதவிகித நிலப்பரப்பு மலைப்பாங்கானது. அதானல் எல்லா இடங்களிலும் இயற்கை அழகு நிறைந்த மலைகளைக் காண முடிகின்றது. தலைநகரான சியோலிலும் இதே நிலைதான். சியோல் நகரத்திலேயே மலைப்பகுதிகள் ஏராளமாக இருக்கின்றன. சுற்றுப்பயணிகளை கவரும் வகையில் மலை ஏற்றம் செல்வதற்கான வசதிகளையெல்லாம் சிறப்பாக செய்து வைத்திருக்கின்றனர்.



கொரியத் தலைநகரான சியோலில் சுற்றிப்பார்ப்பதற்குப் பல இடங்கள் இருக்கின்றன. கோடை காலத்தில் வருபவர்களுக்கு சியோல் நிச்சயமாக ஒரு சுவர்க்க புரியாகத்தான் இருக்கும். ஐரோப்பாவில் இருந்து இங்கு வருபவர்கள் கொரியாவில் தாராளமாச் செலவு செய்ய முடியும் என்றே சொல்லலாம். தங்கும் விடுதிகள், உணவு, மலிவான நுழைவுக் கட்டணம், மலிவான விலையில் தரமான பொருட்கள் போன்றவை இங்குள்ள சிறப்புக்கள்.



உலகின் மிகப் பெரிய Indoor Theme Park சியோலில் தான் இருக்கின்றது. குளிராக இருந்ததால் முதலில் இதற்குச் செல்வது சரி என்று தோன்றியதால் Lotte World Theme Park கிளம்பினேன். மிகப் பிரமாண்டமான வகையில் வடிவமைக்கப்பட்ட இடம் இது. 18,000 வொன் (ஏறக்குறைய 14 EUR) கொடுத்து டிக்கெட் வாங்கிக் கொண்டால் எல்லா மாதிரியான விளையாட்டுக்களிலும் சேர்ந்து கொள்ளலாம். பலூனில் ஏறி Theme Park முழுவதையும் சுற்றுவது, இரயிலில் பயணித்து இந்த இடத்தை முழுமையாக சுற்றிப் பார்ப்பது, பேய் வீட்டிற்குள் சென்று பயங்கரமான அனுபவத்தைப் பெறுவது, சிந்துபாத்தோடு சேர்ந்து கொண்டு புதையல் தேடுவது, இப்படிப் பல. ஒரு நாளில் முடிக்கமுடியாத அளவிற்குப் பல அங்கங்கள் இருக்கின்றன. இப்படி விளையாடும் போது மனதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.




Lotte World செல்வதற்கு எந்த சிரமமும் கிடையாது. சியோல் நகரில் எந்தப் பகுதியில் Subway டிக்கெட் எடுத்தாலும் 700 வொன் தான். (ஏறக்குறைய 50 சென் EUR) இரயிலை விட்டு இறங்கியதுமே Lotte World நுழைவாசலுக்கு வந்துவிடுவோம். அதனால் இதனைத் தேட வேண்டிய அவசியமே இல்லை. உணவுக் கடைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. அதிகமாகக் கொரிய வகை உணவுகள் தான் கிடைத்தாலும், மற்ற வகை உணவுகளும் ஒன்றிரண்டு இருக்கின்றன. சைவ உணவுக்காரர்களுக்கு இங்கு திண்டாட்டம் தான். கொரியர்களுக்குக் சைவ உணவைப் பற்றிய அவ்வளவான பிரக்ஞை கிடையாது என்றே நினைக்கத் தோன்றுகின்றது. எந்த உணவிலும் கடல் உணவு வகைகளை சேர்க்காமல் தயாரிப்பது அவர்களுக்கு முடியாத ஒன்று போல தோன்றுகின்றது. ஆனாலும் இங்கு சில ஆலயங்களில் புத்த பிக்குகள் சைவ உணவுகளை வழங்குவதாகவும் குறிப்புக்களில் தேடி வைத்திருந்தேன். ஆனால் இந்த ஆலயங்கள் அருகாமையில் இல்லை. ஆக Pizza, cheese burger, french fries இப்படி சாப்பிட்டுத்தான் உயிர் வாழ முடியும்..:-)



ஒரு நாள் முழுதும் மிக இனிமையாகக் கழிந்தது. சியோலுக்கு வருபவர்கள் இந்த Lotte World வருவதற்கு மறக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவமாக இது நிச்சயமாக அமையும்.



மறுநாள் சியோலில் இருக்கும் மிகப்பேரிய அரண்மனைக்கு சென்று வரவேண்டும் என்று முடிவுசெய்திருந்தேன். இந்த அரண்மனையில் ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு வைபவம் நடக்கின்றது. அதைப் பற்றிய செய்தி நாளைக்கு!

No comments:

Post a Comment