சியோல் உலகிலேயே ஐந்தாவது பெரிய நகரம் என்ற சிறப்பையும் கொண்டிருக்கின்றது. சியோல் நகரம் மாத்திரமே 10.3 மில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கின்றது. subway இரயிலில் பயணிக்கும் போது மாலை நேரங்களில் இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை வருகின்ற இந்த இரயில்களில் மக்கள் கூட்டத்தைப் பார்த்தாலே இங்குள்ள ஜன நெருக்கடியைப் பற்றி நம்மால் ஊகித்துக் கொள்ள முடியும்.
முதல் நாளே திட்டமிட்டிருந்தபடி சியோல் நகரில் இருக்கும் பழமை வாய்ந்த மிகப்பெரிய இந்த அரண்மனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தேன். இந்த அரண்மனை முதன் முதலில் 1418ல் கட்டப்பட்டது. Sejong மகாராஜா தனது தந்தையார் Taejong மகாராஜாவிற்காக இந்த அரண்மனையைக் கட்டினார். ஜப்பானியர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றி ஆட்சி செய்துகொண்டிருந்த போது சியோல் நகரில் உள்ள இதைப்போன்ற பல அரண்மனைகளை எரித்திருக்கின்றனர். ஆனால் இந்த அரண்மனையின் அழகும் அதன் தனித்துவமிக்க வடிவமும் ஏதாவது ஒரு வகையில் அவர்களைக் கவர்ந்திருக்க வேண்டும். அதனால் இந்த அரண்மனையை ஜப்பானியர்கள் பூங்காவாகவும் மிருகக்காட்சி சாலையாகவும் சற்று மாற்றி அமைத்து, அரண்மனையின் அறைகளை அரசாங்க அலுவலகமாகவும் ஆக்கி வைத்திருந்தனர். 1980 வாக்கில் இந்த அரண்மனையைப் பாதுகாக்கும் திட்டத்தை அரசாங்கம் வகுக்க ஆர்ம்பித்தது. அப்போது இங்கிருந்த மிருகக்காட்சி சாலையை வேறிடத்திற்கு மாற்றி விட்டு முழு அரண்மணையயும் அரசாங்கத்தின் பார்வைக்கே கொண்டு வந்து விட்டது. ஜப்பானியர்கள் தென் கொரிவாலிருந்து வெளியேறிய பின்னர் 1989 வரை இங்கு அரச பரம்பரையைச் சேர்த்தவர்கள் மீண்டும் வந்து தங்கியிருந்தனர். இப்போது பொது மக்களின் பார்வைக்காகவே இந்த அரண்மனை வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மதியம் இரண்டிலிருந்து மூன்றரை வரை இங்கு ஒரு சிறப்பு வைபவம் நடைபெருகின்றது. இதனை Royal Guard changing ceremony என்கின்றார்கள். லண்டனிலுள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெருவது போன்ற ஒன்றுதான் இதுவும். ஆனால் அங்கிருக்கும் பிரமாண்டம் இங்கில்லை. அதே போல Praque, செக் நாட்டிலுள்ள அரண்மனையிலும் இன்றளவும் மிகப்பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கும் இந்த வகை சடங்குகளை விட சற்று எளிமையாகத் தான் இங்கு இருக்கின்றது. கொரிய பாரம்பரிய உடையணிந்த காவலர்கள் அணிவகுத்து வந்து சில சடங்குகளைச் செய்து, பின்னர் உறுதி மொழி செய்து விட்டு அரண்மனை வாசலுக்கு வந்து பொறுப்பேற்றுக் கொள்வதுதான் இந்த சடங்கு. இதனைப் பார்ப்பதற்காக தினமும் சுற்றுப்பயணிகள் கூடுகின்றனர். திங்கள் தவிர்த்து ஏனைய நாட்களில் இந்த சிறப்பு வைபவம் தொடர்ந்து நடக்கின்றது.
அரண்மனையையும் அதனை ஒட்டிய பூங்காவையும் பார்த்து விட்டு shopping செல்வதாகத் திட்டம். மதிய உணவிற்கு கண்ணனும் வருவதாகத் தெரிவித்திருந்தார். ஆக சியோலில் பிரசித்தி பெற்ற Namdaemun Market செல்வதற்கு முன்னர் மதிய உணவிற்காக உணவுக் கடையைத் தேட ஆரம்பித்தோம்.
No comments:
Post a Comment