Monday, December 22, 2003

Travelog - Seoul, S.Korea 1

எஸ்லிங்கன்(ஜெர்மனி) பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் எனக்கு கொரியாவைச் சேர்ந்த ஒரு தோழியும் இருந்தாள். அவளுடன் ஆங்கிலத்தில் பேசி விஷயத்தைத் தெரிந்து கொள்வது என்பது அசாதாரணமான விஷயம் என்பதை என்னைப்போலவே என்னோடு படித்த மற்ற நண்பர்களும் கூட உணர்ந்திருந்தனர். அந்த அனுபவம் மனதில் இன்னமும் மறையாமலேயே இருந்தாலும் இந்த கிறிஸ்மஸ் விடுமுறையை கொஞ்சம் வித்தியாசமாக அனுபவிக்கலாமே என்ற சிந்தனையில் மலேசியாவிற்குப் பதிலாக தென் கொரியாவிற்கு பயணம் செய்யலாம் என்று தோன்றியது. இப்போது தென்கொரியாவில் இருக்கும் முந்தைய ஜெர்மனிவாசியான நா.கண்ணனும் அங்கு இருப்பதால் நிச்சயமாக அங்கு சுற்றுலா செல்வது சிரமமாக இருக்காது என்று முடிவெடுத்து கிளம்பிவிட்டேன்.

ஜெர்மனியிலிருந்து KLM விமான சேவையின் வழி Amstredam சென்று அதன் பின்னர் Seoul செல்ல வேண்டும். பயணிக்கும் போதுதான் தெரிந்து கொண்டேன் Air France விமானச் சேவையும் KLM விமானச் சேவையும் தற்போது ஒன்றாக இணைந்து சேவை வழங்குகின்ற ¢ஷயத்தைப் பற்றி. வியாபாரத்தில் புதிய அணுகு முறை, வர்த்தகத் தந்திரம் என பல தொழில்நுட்ப வார்த்தைகளை வைத்து தங்களின் இந்த இணைப்புக்காண காரணத்தை அவர்கள் விளக்கிக் கொண்டிருந்தாலும், வியாபார ரீதியாக KLM தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் பலரும் அறிந்ததே. ஆனாலும் உலகின் மிகப் பழமையான இந்த நிறுவனம் இந்த பொருளாதார நெருக்கடியில் மாட்டிக் கொண்டு சிக்கித் தவிப்பதை பார்பதற்கு கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கின்றது.

Air France கொஞ்சம் தந்திரமாகச் செயல்படும் நிறுவனம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் அலுவலக விஷயமாக ப்ரான்ஸ் செல்லும் போதெல்லாம் air france வழி செல்வதுதான் வழக்கம். ஒரு விமானத்தில் குறைவாக பயணிகள் பதிவு செய்திருந்தார்கள் என்றால் ஏதாவது ஒரு காரணம் காட்டி அடுத்த விமானத்திற்கு நம்மை மாற்றி விடுவார்கள். இதனால் விமானத்திற்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்படும். இதனை பல முறை நான் அனுபவித்திருக்கின்றேன். ஏதாவது ஒரு நொண்டிச் சாக்கு சொல்வார்கள். விமானம் தொழில்நுட்ப கோளாறு ற்பட்டதால் அடுத்த விமானத்தில் தான் செல்ல முடியும் என்று சொல்வார்கள்; அல்லது வர வேண்டிய விமானம் இன்னும் வந்து சேரவில்லை என்பார்கள்; ஆக Air France-க்கு இது புதிய விஷயமல்ல. அதிலும் ஐரோப்பாவிற்குள் செல்லும் விமானத்தில் பயணிப்பவர்கள் நிச்சயம் இந்த னுபவத்தை பெறாமல் இருக்க முடியாது. Air France -உடன் சேர்ந்த பிறகு KLM கூட இதே நடைமுறையை கடைபிடிக்கின்றதே என்று சற்று ஆதங்கமேற்பட்டது. 11:35க்கு செல்ல வேண்டிய நான் 12:45க்கு தான் Amsterdam செல்லும் விமானத்திலேயே நுழைய முடிந்தது. ஆனால் இவர்கள் தான் வியாபரத் தந்திரம் தெரிந்த கெட்டிக்காரர்கள் ஆயிற்றே. Amstredam -லிருந்து Seoul செல்லும் விமானம் சரியான நேரத்திற்கு புறப்படும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

விமானம் முழுவதும் கொரிய பயணிகள். எனது இருக்கைக்கு வந்து அமர்ந்து எனது பொருட்களை மேலே வைக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். ஏற்கனவே பக்கத்தில் இருந்த இடமெல்லாம் நிரம்பிவிட்டிருந்தது. மிச்சமிருந்த ஒரு சிறிய இடத்தில் எனது பொருட்களை வைத்துக் கொண்டிருக்கும் போது ஒரு கொரிய பெண் என்னிடம் ஆங்கிலத்தில் அவள் அந்த இடத்தில் அவளது பையை வைக்க வேண்டும் என்றாள். கொஞ்சம் அதிர்ச்சிதான் எனக்கு. இருப்பதோ சிறிய இடம். அதில் என்னுடைய சிறிய பையையும் குளிர் ஜேக்கட்டையும் வைப்பதற்கே இடம் போதுமானதாக இருந்தது. அவள் கையில் மூன்று பைகள். மிகவும் நீளமாக வேறு. என்னிடன் விவாதிக்க ஆரம்பித்துவிட்டாள். "எனக்கு 3 பைகள் இருக்கின்றது. உனக்கு ஒன்றுதானே. அதை நீ கையில் வைத்துக் கொள் என்னுடையதை நான் மேலே வைக்க வேண்டும்" என்று ஒரு பைத்தியக்காரத்தனமான தர்க்கம். "என்னுடைய இருக்கைக்கு மேலே இருக்கின்ற இடம் இது. என்னால் என் பொருட்களைக் கையில் வைத்துக் கொண்டு 12 மணி நேரம் பயணம் செய்ய முடியாது. வேறு இடம் பார்த்துக் கொள்" என்று சற்று கடுமையாக சொல்லி விட்டு அமர்ந்து விட்டேன். கொரியாவிற்கான பயணம், அதுவும் அவர்கள் இணத்து மக்களுடன் பேசும் முதல் உரையாடலே இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டுமா என்று மனதுக்குளேயே நொந்து கொண்டேன். அவளது பேச்சும் குரலும் ஆத்திரத்தை உண்டாக்கி இருந்தது. கொரிய மக்களே இப்படித்தான் அநாகரிகமாக நடந்து கொள்வார்களா என்ற கேள்வி மனதில் தோன்றி கொஞ்சம் பயத்தையும் உண்டாக்கி விட்டது. ஆனால் சியோல் வந்த பிறகு அந்த மக்களோடு ஏற்பட்ட அனுபவங்கள் எல்லாம் இந்த சிந்தனையை அடியோடு மாற்றி விட்டன. பழகுவதற்கு இனிமையான மக்கள்; அன்பானவர்கள்; அதிலும் வெளிநாட்டவரிடம் அவர்கள் காட்டும் மரியாதை ஆகியவை வியக்க வைக்கும் அளவிற்கு உள்ளன என்பதை இங்கு வந்த உடனேயே அறிந்து கொண்டேன்.
11:15 மணி நேர பயணம் இது. ஏற்கனவே கண்ணனுக்கும் எனது வருகையை தெரிவித்திருந்ததால் நிச்சயமாக விமான நிலையத்திற்கு வந்து என்னை அழைத்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டிருந்தது கொஞ்சம் தைரியமாக இருந்தது. விமானம் தரையிறங்கியதும் எனது உடமைகளை எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தேன். கொரியர்களோடு கொரியராக உருவத்திலும் சற்று மாற்றம் கொண்டிருந்த கண்ணன் முகம் முழுக்க புன்னகையோடு என்னை வரவேற்க நின்றிருந்தார். தனது ஆராய்ச்சி வேலைகளுகளுக்கிடையே எனக்காக நேரம் ஒதுக்கி சியோல் நகரைச் சுற்றிக்காட்ட உதவிய கண்ணனுக்கும் சியோல் நகரிலேயே ஒரு சிலை வைக்கலாம் தான்!

No comments:

Post a Comment