Thursday, December 25, 2003

Travelog - Seoul, S.Korea 4

கொரியாவிற்குச் செல்வதற்கு முன்னர் ஒரு சில வார்த்தைகள் கொரிய மொழியில் கற்று வைத்திருப்பது முக்கியம் என்று இங்கு வந்த உடனேயே தெரிந்து கொண்டேன். மொழி தெரியாவிட்டால் நம் பாடு அதோ கதிதான். கொரிய மக்கள் ஆங்கிலம் பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவறு என்றே நினைக்கத் தோன்றுகின்றது. ஓரிரு வார்த்தைகள் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்; அதுவும் ஒரு சிலர் மட்டுமே. சியோல் போன்ற பெரிய நகரத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற தீவிகளிலும் சிறிய நகரங்களிலும் நிலமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான்.

கொரிய உணவு வகைகளை விற்பனை செய்யும் கடைகளைப் பார்த்தபடியே தேடிக் கொண்டு வரும் போது உணவு வகைகளை படம் பிடித்து வைத்திருந்த ஒரு விளம்பரப்பலகையைப் பார்த்து இங்கு நிச்சயம் நாம் சாப்பிட ஏதாவது நிச்சயமாகக் கிடைக்கும் என்று கண்ணன் அழைத்து வந்தார். ஒரு பக்கத்தில் தரையில் அமர்ந்து சாப்பிடும் வகையில் குட்டையான மேசைகள்; மற்றொரு பக்கத்தில் சாதாரண வகை மேஜை நாற்காலி. தரையில் உட்கார்ந்து கொரிய உணவை சாப்பிடக்கூடிய மன நிலையில் நான் இல்லை. அரண்மனையைச் சுற்றியதில் நல்ல கால்வலி. அதனால் நாற்காலியில் அமர்ந்து சாப்பிடுவோம் என்று சொல்லி கண்ணன் தேர்ந்தெடுத்த Bibimbap உணவிற்காகச் சொல்லிவிட்டுக் காத்திருந்தோம். முதலில் ஒரு தட்டில் கிம்சி வந்தது. அவித்த கேபேஜில் அரைத்த சிவப்பு மிளகாயைக் கொட்டி அதோடு சாப்பிட கொஞ்சம் இதுவரை நான் பார்த்திராத வேர்களினாலான சாலட் கொண்டுவந்து வைத்தார்கள். பின்னர் சற்று நேரத்தில் எங்களுக்கான Bibimpab வந்தது. அழகான பெரிய
சட்டியில் வெள்ளரிக்காய், கேரட் துறுவல், tofu, மேலும் சில பெயர் தெரியாத கொரிய காய்கறிகளை அடுக்கி வைத்திருந்தார்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் சாதம் இருந்தது.
சுவைத்து ரசித்து சாப்பிடக்கூடிய வகை உணவு இல்லையென்றாலும் பார்ப்பதற்குக் கண்ணுக்கு அழகாக இந்த உணவு இருந்தது. ஊறுகாயை தொட்டுக் கொண்டு தயிர்சாதம் சாப்பிடுவது மாதிரி நினைத்துக் கொண்டு கிம்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சாப்பிட்டு முடித்தேன்.
மதிய உணவிற்குப் பின்னர் Namdaemun Market செல்ல நான் கிளம்பினேன். சியோலில் இம்மாதிரியான சாலையோரக் கடைப்பகுதிகள் சில இருக்கின்றன. அவற்றில் இந்த Namdaemun Market தான் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. இங்கு ஆண் பெண்களுக்கான உடைகள், தொப்பிகள், காலணிகள், குளிர் ஜேக்கட்டுகள், கைப்பைகள், ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. எதனைத் தேர்ந்தெடுப்பது என்பதுதான் பிரச்சனையே. வெளியே குளிர் காற்றூம் அதிகமாக இருந்ததால் அதிக நேரம் வெளியே நின்று பொருட்களை வாங்கிக் கொண்டிருக்க முடியவில்லை. கொரிய குளிர் ஜாக்கெட் ஒன்று வாங்குவதற்காக ஒரு கடைக்குள் நுழைந்தேன். அழகான இளம் சிவப்பு நிறத்திலான ஒரு ஜாக்கெட். அதனை எடுத்து விலை கேட்க ஆரம்பித்தேன். விற்பனை செய்பவளுக்கு 'Yes', 'service' என்பதைத் தவிர வேறு எந்த ஆங்கிலச் சொற்களும் தெரியாது. எனக்கு சில எண்களைத் தவிர வேறு எந்த கொரிய சொல்லும் தெரியாது. ஒரு calculator எடுத்துக் கொண்டு அதில் 120,000 வொன் என்று அழுத்திக் காட்டினாள். நான், முடியாது 30,000வொன் தான் தருவேன் என்று மாற்றி அழுத்திக் காட்ட, அவள் ஒரு விலை சொல்ல நான் ஒரு விலை சொல்ல என்று இறுதியாக 60,000 வொன் என்று முடிவானது. இந்த ஜேக்கட்டை வாங்கியதற்காக ஒரு இலவச அன்பளிப்பாக சட்டையில் அணிந்து கொள்ளும் அலங்காரப்பின் ஒன்றையும் 'service' என்று சொல்லிக்கொண்டு கொடுத்தாள்.
இங்கு பலரும் இப்படிச் சொல்லி பொருட்களை விற்பது சகஜமாக இருக்கின்றது. கொரிய பெண்கள் yes, மற்றும் service என்று சொல்வதும் ரசிக்கத்தக்கவை. yes என்பதை yessu...uu , service என்பதை servisu...uu என்று இழுத்து சொல்லிக் கொண்டு சிரிப்பது அழகாக இருக்கின்றது.

No comments:

Post a Comment