Friday, November 2, 2018

SriLanka - 39. மலையகம்

30,31-10.2018
இரண்டு நாட்கள் மலையகப் பகுதிகளின் பல்வேறு பகுதிகளில் தமிழ் மரபு அறக்கட்டளை வரலாற்றுப் பதிவுகளைச் செய்தோம். அதில் குறிப்பாகச் சில தகவல்கள்:
கி.பி 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து இலங்கைக்குக்கு வந்த தமிழ் மக்கள் இராமேஸ்வரம் வழியாக மரக்கலங்களில் பயணித்து பின்னர் மன்னார் வந்தடைந்து அங்கிருந்து கால் நடையாகவே மலையகம் வரை வந்திருக்கின்றனர். இது மிகக்கடினமான ஒரு பாதை. ஆயிரக்கனக்கான உயிரிழப்புக்கள் இதன் போது நிகழ்ந்திருக்கின்றன. அப்படி வந்த தமிழ் மக்கள் வந்து ஒன்று கூடிய முக்கிய இடமாக “மாத்தளை” கருதப்படுகின்றது.
எங்கள் பயணத்தில் மாத்தளைக்குச் செல்ல கால அவகாசம் கிட்டவில்லை. ஆயினும் ஹட்டன், நுவரலியா, பத்தனை, வட்டகொட, நியூ பீக்கோக் எஸ்டேட், சோகம் எஸ்டேட், புஸ்ஸல்லாவ மற்றும் அதன் அருகாமை கிராமங்களில் எங்கள் பதிவுகளை மேற்கொண்டோம்.
எமது பதிவில் கண்ட சில முக்கியக் கூறுகள்:
-மலையகத்தமிழர்களின் முக்கிய தொழிலாக அமைவது தேயிலைத் தோட்டத்தைச் சார்ந்ததாகவே அமைகின்றது.
-ஆண்களும் பெண்களும் சலிக்காது உழைக்கின்றனர்.
-பெருமாபாலான தேயிலைத் தோட்டங்களின் உரிமையாளர்களாக ஆங்கிலேயர்களும், இந்தியர்களும், சிங்களவர்களும் இருக்கின்றனர்.
-மலையகத்தமிழ் மக்களின் பொதுப்பிரச்சனையாக அமைவது தங்களுக்கு சொந்த வீடு இல்லாமையும், ஓய்வூதியச் சலுகைகள் ஏதும் இல்லாமையும், போதிய மருத்துவ வசதிகள் இல்லாமையும் எனலாம்.
-இஸ்லாமியர்கள் தமிழ் மக்களோடு சேர்ந்து வாழ்கின்றனர். சிங்களவர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் அனைவரிடையே நட்புணர்வு வெளிப்படுகின்றது. தமிழ் பேசும், எழுதும் சிங்களவர்கள் சிலரை தோட்டங்களில் நேரடியாகக் கண்டு உரையாட முடிந்தது.
-பெரும்பாலான தமிழ் மக்கள் சிங்கள மொழியும் பேசுகின்றனர்.
-தமிழ் மக்கள் வழிபடும் தெய்வங்களாக, பிள்ளையார், மாரியம்மன், முருகன் ஆகிய தெய்வங்களின் கோயில்கள் அதிகமாக உள்ளன.
-யாழ்ப்பாணத்தில் ஊருக்கு ஊர் நூலகங்களைப் பார்த்தோம். ஆனால் மலையகப் பகுதியில் நூலகங்களை அதிகம் காண முடியவில்லை. அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சனைகளே இங்கு அதிகமாக மக்களை வாட்டும் நிலை இருப்பதால் இந்த நிலையோ என எண்ணத் தோன்றுகிறது.
-மலையகம் முழுமையுமே தூய்மையாக உள்ளது.
-தமிழக வகை உணவுகளை இங்கே கடைகளில் காண்கின்றோம்.
-தமிழ்ப்பள்ளிகள் அனைத்துமே “வித்யாலயா” என்ற சமஸ்கிருத பெயருடனேயே வழக்கில் உள்ளன. தமிழகத்தில் 1950களின் காலகட்டத்து மணிப்பிரவாள் நடைபோல பல சமஸ்கிருத பயன்பாடு இருப்பதை இலங்கையில் காண்கிறேன்.
-பேருந்து பயணங்கள் ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்குச் செல்லும் முக்கிய போக்கு வரத்துச் சாதனமாக உள்ளது.
-தோட்டத்தில் தேயிலைப் பறிக்கும் தொழிலில் தமிழ்ப்பெண்களே அதிகம் ஈடுபடுகின்றனர். கால்களில் அட்டை கடித்து துன்பப்படுவது என்பது அவர்களது வாழ்க்கையின் இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டதால் பலரது கால்விரல்கள் மிக மோசமான நிலையில் இருப்பதைக் கண்டோம்.
-இன்று நமக்குக் கிடைக்கின்ற பல ப்ரேண்ட்களில் உள்ள தேயிலைகளை உருவாக்கி நமக்குச் சுவையான தேநீரை வழங்குபவர்களாக இலங்கை மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவு கூற வேண்டியது அவசியம்.
தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாடு அவர்களது கல்வி மேம்பாட்டினால் மட்டுமே சாத்தியப்படும்!
-முனைவர்.க.சுபாஷிணி








No comments:

Post a Comment