காளான்களை நெய்யில் வருத்து வைத்திருந்தார்கள்; அதேபோல தக்காளியை சீஸ் கொண்டு அலங்கரித்து அதனை வருத்திருந்தார்கள். காலை உணவுக்கு இது சற்று அதிகம் என்றாலும் எப்போதும் சாப்பிடும் வகையிலிருந்து இது மாறுபட்டிருந்ததால் இதனை எடுத்துக் கொண்டு வந்தமர்ந்தேன். காளான் வருவல் நினைத்ததற்கும் மேலாக சுவையாக இருந்தது.

இன்று எனக்கும் பீட்டருக்கும் தான் வேலை. டேனியலும் ஸ்டெபானும் அவர்களுடைய
வேலையை முடித்து விட்டதால் எங்களுடைய வேலையை 12 மணிக்குள் முடித்து விடுவதாக திட்டம். அதனை நினைத்துக் கொண்டே கண்ணும் கருத்துமாக வேலைகளில்
மூழ்கிப்போனோம். நினைத்ததைவிட சற்று தாமதித்து 12:30 அளவில் தான் வேலை முடிந்தது. வெற்றிகரமாக அன்றைய வேலை முடிவடைந்ததை நினைத்து எங்கள் இருவருக்கும் ஏகப்பட்ட சந்தோஷம். அதனைக் கொண்டாட வேண்டும் என நினைத்துக் கொண்டு பாசல் நகருக்குச் சென்றோம். எங்களை 2 மணிக்கு சந்திப்பதாக சுவிஸ் அலுவலக மானேஜர் மார்க்குஸ் சொல்லியிருந்தார். ஆக மீதமிருந்த 1 1/2 மணி நேரத்திற்குப் பாசலைச் சுற்றிப் பார்க்க எங்களுக்கு வாய்ப்பிருந்தது.

பாசலின் சாலைகளை அலங்கரிக்கும் Tram களில் ஏறிப் பயணிப்போம் என முடிவு செய்து பச்சை நிற Tram -ல் ஏறிக் கொண்டோ ம். சாலைகளின் இரு பக்கங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே பெயர் தெரியாத ஒரு பகுதியில் இறங்கிக் கொண்டோ ம். ஞாயிற்றுக் கிழமை; அதிலும் பாசல் நகர விழா வேறு நடந்து கொண்டிருப்பதால் மக்கள் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது. வேடிக்கைப் பார்த்துக் கொண்டே ஒரு உணவு விடுதிக்கும் வந்து சேர்ந்தோம். சுவிஸர்லாந்தின் பாரம்பரிய உணவு சாப்பிடலாம் என இருவருமே முடிவு செய்ய மிக அருமையான 'ராக்லெட்' சீஸினால் சமைக்கப்பட்ட ஒரு உணவு பதார்த்தத்தை தேர்ந்தெடுத்தேன். அருமையான தேர்வு. வருக்கப்பட்ட காய்கறிகளோடு மிக நேர்த்தியாக உருளைக்கிழங்குகளை அவித்து 'ராக்லெட்' சீஸினால் அவற்றை அலங்கரித்திருந்தனர்.
ராக்லெட் பற்றி அறிந்து கொள்ள http://en.wikipedia.org/wiki/Raclette !

ஐரோப்பாவிற்கு வருகின்ற பலர் பயந்து கொண்டு புதிய வகையான உணவுகளை முயற்சிப்பதை தவிர்த்து விடுகின்றனர். பயத்தை விட்டு விட்டு திறந்த மனத்தோடு புதுமையான உணவு வகைகளைச் சாப்பிட்டுப் பழக வேண்டும். எத்தனை விதமான சைவ உணவு வகைகள் இங்கிருக்கின்றன என்பதை பட்டியலே போடலாம். அந்த அளவிற்கு பல வகை உணவு வகைகள் இங்கு கிடைக்கின்றன.
3 மணி அளவில் தான் எங்களின் கணினி அறைக்குத் திரும்பிச் சென்றோம். நாங்கள் சற்றுதாமதமாகத்தான் திரும்புவோம் என அவருக்கு அறிவித்திருந்தாலும் எங்களுக்காக மார்க்குஸ் வந்து காத்திருந்தார். மீதமிருந்த அறிக்கை தயாரிப்பு வேலைகள், குறிப்புக்கள் ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாடிவிட்டு 5 மணி அளவில் பாசலிலிருந்து புறப்பட்டோம். ரைன் நதியைக் கடந்து எங்கள் ஓப்பல் வெக்ட்ரா பயணிக்கும் போது மனதில் அலாதியான ஒரு சந்தோஷம் வந்து சேர்ந்தது. வெற்றிகரமாக எங்கள் திட்டம் நிறைவேறிய ஒரு சந்தோஷம்; இனிமையாக பாசலை சில மணி நேரங்களாவது சுற்றிப்பார்க்க கிடைத்த வாய்ப்பு; இவையெல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள். 15 நிமிடத்தில் சுவிஸ் எல்லையைத் தாண்டி ஜெர்மனிக்குள் நுழைந்தோம்; மனதில் இனிமையான நினைவுகளைச் சுமந்து கொண்டு.
முற்றும்