Tuesday, May 5, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -10

தென்னாப்பிரிக்காவில் தமிழர்கள் குடியேற்றம் என்பது இன்றைக்கு ஏறக்குறைய 250 ஆண்டுகள்​ பழமை வரலாற்றைக் கொண்டது. அப்போதைய  தென்னாப்பிரிக்க ஆங்கிலேய காலணித்துவ அரசின் ஆட்சியில் கரும்புத் தோட்டங்களில் பணி புரிய தென்னிந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட மக்களில் பெரும்பாலோர் தமிழக நிலப்பரப்பைச் சார்ந்தோர். ஒப்பந்த தொழிலாளர்களாக வந்த இவர்களில் ஒரு சிலர் சில ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியா திரும்பினாலும் பலர் தென்னாப்பிரிக்காவிலேயே தங்கிவிட்டனர். இவர்களின் சந்ததியினரே இன்று தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்.

தென்னாப்பிரிக்காவின் மக்கள் தொகையில் பெரும்பாண்மையினர் உள்ளூர் சூலு இன மக்கள். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து உழைக்க வந்த இந்தியர்களை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்ல என்பதனை உள்ளூரில் நிகழ்ந்த பல சம்பவங்கள் சாட்சிகளாக காட்டுகின்றன. தற்போதும் கூட டர்பன் நகரத்திலும் அதன சுற்று வட்டாரத்திலும்  இந்தியர்கள் வாழும் பகுதி என்று பீனிக்ஸ் பகுதியும் அதற்கு எதிர்புறமாக உள்ள பகுதி சூலு மக்கள் வாழும் பகுதி என்றும் அறிந்து கொண்டேன். ஆயினும் பெரிய அளவிலான பிரச்சனைகளோ, இனக்கலவரமோ என்பது இங்கு இல்லை என்பது ஒரு மிக நல்ல விசயம்.

சூலு மக்களின் உணவு வகைகளை நான் சுவைகும் வாய்ப்பே இந்தப் பயணத்தில் எனக்கு அமையவில்லை. தமிழ் பண்பாட்டு இயக்க நிகழ்வின் மூன்று நாட்களும் சரி.. பினன்ர் தங்கியிருந்த இரண்டு நாட்களும் சரி, ஹோட்டலில் வழங்கப்பட்ட உணவு விருந்து என பெரும்பாலும் தென்னிந்திய வகை உணவையே அதில் நான் காண முடிந்தது. இந்திய வகை உணவோடு ஐரோப்பிய உணவு வகைகளான பாஸ்டா, ரொட்டி, சீஸ் போன்றவைகளும் உணவுத் தேர்வில் இடம்பெற்றிருந்தன. ஐரோப்பாவில் எப்போதும் அதிகம் ஐரோப்பிய உணவை சுவைக்கும் வாய்ப்பே எனக்கு அமைவதால் தென்னாப்பிரிக்க இந்திய வகை உணவைச் சாப்பிடுவதே எனக்குப் பிடித்திருந்தது. அதனால் கிடைத்த தோசை, உப்புமா, சாம்பார், சட்னி, பொறியல், கூட்டு, கீரை, பாயசம் என இந்திய உணவுகளை சுவைத்தேன். முற்றும் முழுதும் தென்னிந்திய வகை உணவு என்றில்லாமல், சற்றே வித்தியாசமாக  ஒரு வகையில் மலேசிய வகை தென்னிந்தியச் சமையல் சாயலும் இவர்கள் சமையலில் இருந்தது போன்ற ஒரு உணர்வும் எனக்கு ஏற்பட்டது.

சுற்றுலா சென்ற போதும் இடையில் திரு.திருமதி சின்னப்பன் இல்லத்தில் மிகத் தரமான இந்திய உணவைச் சாப்பிடும் வாய்ப்பும் அமைந்தது. பின்னர் இந்திய உணவுக்கடையில் ஓரிரு முறை சாப்பிடவும் சென்றிருந்தோம். ஆக முழுமையாக இந்த தென்னாப்பிரிக்கப் பயணத்தில் இந்திய வகை உணவுகளையே பெரும்பாலும் காண நேர்ந்தது. ஒரே ஒரு முறை மட்டும் தென்னாப்பிரிக்காவில் மிகப் பிரபலமான பன்னி சோவ் (Bunny Chow)  வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தேன்.

பன்னி சோவ் என்பது தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் உருவாக்கிய ஒரு ரெசிப்பி. 2ம் உலகப்போர் காலத்திலேயெ இது பிரபலமாகிவிட்டது என்றும் பின்னர் தென்னாப்பிரிக்காவின் டர்பன்  தவிர்த்து  க்லெல்லோ, ரொடேசியா போன்ற பகுதிகளிலும் பிரபலமாகிவிட்ட ஒரு துரித உணவு இது.

அடிப்படையில் பெரிய ரொட்டி ஒன்றிற்குள் கறி வகைகள் அல்லது பீன்ஸ் வகைகளைத் தினித்து சுற்றித் தருவது தான் பன்னி சோவ் எனப்படுகின்றது.

என் தென்னாப்பிரிக்கத் தோழி கோகி எனக்கு முதலில் இதனைப் பற்றி தெரிவித்தார். பன்னியில் காய்கறிகள் சேர்த்த பன்னியும் உண்டு, ரசம் பன்னியும் உண்டு என்று மேலும் ஆச்சரியப்படுத்தினார். இது மனதிலேயே இருக்க ஜெர்மனி திரும்புவதற்குள் ஒரு நாளாவது பன்னியை வாங்கிச் சாப்பிட வேண்டும் என ஆவல் இருந்தது. பயணத்தின் இறுதி நாளுக்கு முதல் நாள் 'இன்று எப்படியாவது ஓரிடத்தில் எல்லோரும் பன்னியை வாங்கிச் சாப்பிடுகின்றோம்' எனச் சொல்லி என்னுடன் வந்த மலேசியக் குழுவினர், கனடாவின் திரு.ராஜரட்னம், இந்து, எல்லோரையும் ஒரு ஷாப்பிங் மாலுக்குள் அழைத்துச் சென்று அங்கு தேடியதில் ஒரு ரெஸ்டாரண்டில் பன்னி விற்பனை செய்யப்படுவது தெரிந்தது.


​பன்னி மடித்து வைக்கப்பட்டுள்ளது

அங்கேயே நண்பர்கள் ஒவ்வொருவரும் ஆளுக்கு ஒரு பன்னி ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டோம். அசைவப் பிரியர்கள் அசைவ பன்னி வாங்கிக் கொண்டனர். சைவ உனவு பிரியர்கள் சைவ பன்னி வாங்கிக் கொண்டோம்.


​மேல் பகுதி மூடப்பட்ட நிலையில்

எனக்கு காய்கறி குருமா திணித்த பன்னி சாப்பிட விருப்பம் இருந்ததால் அதனையே ஆர்டர் செய்து வாங்கினேன்.

பன்னியில் மூன்று அளவுகள் உள்ளன. பெரிது, நடுத்தர அலவு, சிறியது என முன்று அளவுகளில் இவை கிடைக்கின்றன. நடுத்தர அளவே போதும் என வாங்கிய எனக்கு அது இரண்டு பேர் சாப்பிடக்கூடிய அளவு என்ரு நேரில் பார்த்ததும் தான் தெரிந்தது.

மலேசியாவில் வங்காளி ரொட்டி என்று சொல்வோம். அப்படிப்பட்ட ஒரு ரொட்டி வகை தான் இது. அதன் மேல் பகுதியை வெட்டி வைத்து விடுகின்றனர் இது மூடி போல பயன்படுகின்றது. பின்னர் ரொட்டியின் நடுப்பகுதியில் குழி மாதிரி செய்து அதற்குள் குருமாவை திணித்து விடுகின்றனர். பின்னர் வெட்டிய மூடி போன்ற பகுதியை வைத்து மூடி கொடுத்து விடுகின்றனர். ஒரு வகையில் பார்க்க வெட்டிய இளநீரின் வடிவத்தில் இந்த ரொட்டி இருக்கும்.



​மேல் பகுதியைத் திறந்ததும் உள்லே காய்கறி குருமாவுடன் பன்னி

ஒரு முறை சாப்பிட்டவர்கள் மறு முறைபன்னி சாப்பிட வேண்டும் என நிச்சயம் விரும்புவர். மிக நல்ல சுவை என்பதில் சந்தேகமில்லை.

புலம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வியல் சூழலுக்கேற்ப இவ்வகை புதுமைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கும் நிலையை உலகில் பல இடங்களில் காண்கின்றோம். தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் வெற்றிகரமான ஒரு புதுமை உணவு இந்த பன்னி சோவ் என நிச்சயம் சொல்லலாம்.

தொடரும்..

No comments:

Post a Comment