Thursday, May 21, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -13

டர்பன் புற்றுமாரியம்மன் ஆலயம் மூன்று பகுதிகளாக அமைக்கப்படிருப்பதைப் பற்றி முந்தைய பகுதியில் குறிப்பிட்டேன். நடுப்பகுதியில் மிகப்பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் புற்றையே அம்மனாக வைத்து மக்கள் வழிபடும் இடம் இருக்கின்றது. இப்புற்றில் அம்மன் வடிவமாக அமைக்கப்பட்ட வடிவம் இந்த மண்டபத்தின் நடுப்பகுதியில் இருக்குமாறு செய்திருக்கின்றார்கள். நடுப்பகுதியில் அமைந்திருப்பதால் பக்தர்கள் அம்மன் வடிவத்தின் முன் நின்று தாமே தீபாராதனைக் காட்டி தாமே பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல இலகுவாக அமைந்துள்ளது. இக்கோயிலில் அர்ச்சனை செய்து வைக்க என்று தனியாக அர்ச்சகர்களோ குருக்கள்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் கூட்டம் நிறைந்திருந்த அன்றும் கூட பொது மக்கள் வரிசையாக நின்று ஒவ்வொருவரும் யாரையும் இடித்து தள்ளிக் கொள்ளாமல் தங்கள் வழிபாட்டினைச் செய்து விட்டு சென்று கொண்டிருந்தனர்.

புற்று வடிவத்தின் முன் பக்தர்கள் தாங்களே தாங்கள் கையோடு கொண்டு வந்திருந்த வழிபாட்டு பொருட்களை வைத்து சூடம் ஏற்றி குடும்பத்தோடு நின்று வழிபட்டு பின்னர் தங்கள் பொருட்களைக் கையோடு எடுத்துக் கொண்டு ஆலயத்தைச் சுற்றி செல்கின்றனர். அப்படி செல்லும் போது முதலில் ஒரு பெண்மணியிடம் மங்கலப் பொருட்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.பின்னர் அங்கு நிற்கும் இரண்டு பெண்களிடம் வேப்பிலை போன்ற வடிவம் கொண்ட ஒரு இலையால் உடல் முழுவதும் படுவது போல செய்து கொண்டு அங்கிருந்து நகர்ந்து அடுத்த இடம் செல்கின்றனர். இங்கே இருக்கும் ஒரு பெண்மனி அவர்களுக்கு புனித நீரை ஒரு பெரிய கரண்டியில் எடுத்துக் கொடுக்க அதனை பக்தர்கள் பருகிச் செல்கின்றனர்.

இந்த மையப்பகுதியை அடுத்தார் போல வலது புறத்தில் ஒரு சிறிய விநாயகர் சன்னிதி இருக்கின்றது. இங்கேயும் மக்கள் வரிசையாக வருகின்றனர். முன்னால் நிற்கும் ஊழியர்கள் பக்தர்கள் கொண்டு வரும் தட்டில் சூடம் ஏற்றித் தர குடும்பத்தோடு மக்கள் விநாயகரை வழிபட்டு செல்கின்றனர். வெளியேறும் போது அங்கு நிற்கும் ஒருவர் விபூதியை அவரே  தாமாக நமது நெற்றியில் இட்டு விடுகின்றார். ஆலயத்தின் எல்லா இடங்களிலும் அவசரம், தள்ளிப்பிடித்தல் என்ற வகையில் இல்லாமல் மிக ஒழுங்காக காரியங்கள் நடைபெறுகின்றன.

இங்குள்ள விநாயகர் சிலையின் வடிவம் நம் கண்கள் பார்த்து பழகியனவற்றிலிருந்து மாறுபட்டவை. ஒல்லியான உடம்புடன் தொந்தியில்லாத விநாயகர் நமக்கு வித்தியாசமாகவே படுகின்றார். ஆயினும் அலங்காரங்களுடனும் பக்தர் கூட்டத்துடனும் பார்க்கும் போது நம் மனதைக் கவரத் தவறவில்லை. நான் என் வழிபாட்டை முடித்துக் கொண்டு கோயில் இடப்புரம் கச்சேரி நடந்து கொண்டிருந்த பகுதிக்குச் சென்றேன். அங்கே திரு.கார்த்திகேயன் இசைக்குழுவினர் தமிழிசை கச்சேரி செய்து கொண்டிருந்தனர்.

இடையில் எங்களை அழைத்துச் சென்ற திரு.சின்னப்பன் தம்பதியர் எங்கள் வருகையைப் பற்றிச் சொல்ல, உடனே எங்களில் யாரேனும் பாட விருப்பம் உள்ளதா என வினவினர். என்னுடன் வந்திருந்த திரு.நயினை விஜயன் அவர்கள் அற்புதமாக ஒரு தமிழைப்பாடலைப் பாடினார். அதனை அடுத்து நானும் பாடுகின்றேன் எனச் சொல்ல என்னையும் பாட அழைத்தனர். நான் ஒரு தேவாரப் பாடலை பாடினேன். அதற்கு பக்க வாத்தியம் மிக அருமையாக அமைந்திருந்தது. மத்தளம், ஹார்மோனியம் வயலின் இசை கலந்ததும் எனக்கு முன்னர் கச்சேரி செய்த நினைவுகள் மனதில் தோன்றின. ஆகையால் பாடலை சற்றே விரிவாக்கி பாடி முடித்து எழுந்த போது மீண்டும் ஒரு பாடலை பாடுமாறு கேட்டுக் கொண்டனர் இசைக்குழுவினர். எனக்கு இது மேலும் ஆர்வத்தையும்  மகிழ்ச்சியும் அளித்ததால் மேலும் ஒரு தமிழிசைப்பாடலை பாடினேன். பாடி முடித்து கீழே வரும்போது நண்பர்களின் புன்னகை கலந்த பாராட்டுதல்கள் எனக்கு நிறைந்த மன மகிழ்ச்சியை அளித்தன.

எதிர்பாராது நடந்த நிகழ்வு அது. மனதில் இன்னமும் நினைத்துப் பார்க்கும் போது அதே மகிழ்ச்சி மலர்கின்றது.

No comments:

Post a Comment