Sunday, May 10, 2015

விரும்பாமல் சென்று.. விரும்பிய டர்பன்..! -11

ஏப்ரல் 5ம் தேதி மதியம் முக்கிய  நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிவடைந்ததால் எஞ்சிய மூன்று தினங்கள்  டர்பன் நகரைச் சுற்றிப் பார்க்கவேண்டும் என மனதில் நினைத்திருந்தேன்.  என்னோடு மலேசிய நண்பர்கள் திரு.ப.கு.ஷண்முகம் தலைமையிலான குழுவினர், இந்து, சாம் விஜய், கனடா நண்பர் திரு,ராஜரட்ணம் ஆகியோரும் இருந்தமையால் அனைவரும் இணைந்தே பயணம் செய்ய சம்மதம் தெரிவித்து விட்டனர். எங்கெங்கு செல்லலாம், எவற்றை பார்க்கலாம் எப்போது எப்படி என்று திட்டமிடம் பணி யாரும் திட்டமிட்டாமலேயே எனக்கு வந்து சேர்ந்தது.

தென்னாப்பிரிக்கத் தோழி கோகியும் அவர் கணவர் திரு.சின்னப்பனும் திங்கள் கிழமை அதாவது புனித வெள்ளி முடிந்த வாரத்தின் முதல் திங்கள்கிழமை அருகாமையில் இருக்கும் புற்று மாரியம்மன் ஆலயத்தில் விஷேஷம் இருப்பதாகவும் அங்கு வந்து பார்க்க விருப்பம் இருக்கின்றதா என்றும் கேட்டனர். வேறு இடங்களுக்குச் செல்வதற்கு முன்னர் ஆலயம் சென்று பார்த்து விட்டு வரலாமே என்று எனக்கும் அது சரியான யோசனையாகவே தோன்றியது. மாரியம்மன் ஆலயத்தைப் பார்த்து விட்டு அருகாமையில் இருக்கும் முருகன் கோயிலும் சென்று வரலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆக அன்று காலை முதல் மாலை வரை கோயில் சுற்றுலா என்று முடிவெடுத்து ஏனைய நண்பர்களுக்கும் காலையில் சரியாக 10 மணிக்குத் தயாராக இருக்கும் படி கேட்டுக் கொண்டதோடு அவர்களை மீண்டும் ஞாபகப்படுத்தி தயார் நிலையிலும் வைத்துக் கொண்டேன். பள்ளிக் கூட ஆசிரியர் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வது போண்ற ஒரு உணர்வு தான் எனக்கு அப்போது தோன்றியது. ஏனைய நண்பர்களும் மகிழ்ச்சியோடும் ஆவலோடும் அலய சுற்றுலாவிற்குத் தயாரானார்கள்.

திரு.சின்னப்பன் அவர்களின் மகள் சிவானியும் ஒரு கார் வைத்திருக்கின்றார்.ஆக எங்களை  இவர்கள் இருவரும் ஹோட்டலிலிருந்து கோயிலுக்குத் தங்கள் காரிலேயே அழைத்துச் சென்று விட்டனர். ஒரு பயணத்தில் எல்லோரும் செல்ல முடியாததால் சிவானி எங்களை இரண்டு முறை வந்து அழைத்துச் சென்றார். நல்ல உதவும் மனம் கொண்ட பெண் சிவானி. நாட்டியப்பள்ளி வைத்து நடத்தி வரும் சிவானி ஒரு வக்கீலாகவும் படித்து பட்டம் பெறும்  நிலையில் இருக்கின்றார்.

கோயிலுக்குச் செல்லும் போது டர்பன் நகர சாலைகளைக் கவனித்துக் கொண்டே வந்தேன். சாலைகள் நேர்த்தியாகவும் தூய்மையாகவும் இருக்கின்றன. ஆசிய நாடுகளைப் போன்ற சீதோஷ்ணம் இருப்பதால் பசுமையான சூழலைக் காணமுடிகின்றது.




கோயிலை நெருங்கும் போதே தூரத்திலிருந்தே கோயில் கோபுரம் கண்களுக்குப் புலப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் நான் பார்க்கும் முதல் இந்து ஆலயம் என்ற மகிழ்ச்சியும் மனதில் நிறைந்திருந்தது.

ஆலயத்தின் வாசல் முழுக்க வாகனங்கள் நிறைந்து இருந்தமையால் வாகனத்தை நிறுத்திவதில் சற்றே சிரமம் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க தமிழர்கள் ஆலயத்தில் நிறைந்திருந்தார்கள். கண்கொள்ளா காட்சியாக அது அமைதிருந்தது.



மாரியம்மன் ஆலயம் என்பது மனதில் ஒலித்துக் கொண்டிருந்ததால் அம்மன் சிலை எவ்வகையில் இருக்கும் என்ற ஒரு கற்பனை மனதில் ஓட ஆரம்பித்திருந்தது. காமாட்சியம்மன் அல்லது துர்கை வடிவில் அம்மன் சிலை இருக்குமோ? அல்லது மலேசியாவில் இருக்கும் மாரியம்மன் வடிவில் இங்கு மூலஸ்தான தெய்வ மடிவம் இருக்குமோ என மனதில் கேள்விகள் ஓட உள்ளே சென்று பார்க்க மனதில் ஆவல் அதிகரித்துக் கொண்டிருந்தது.

எல்லோரும் ஆலயத்திற்கு வெளிப்பகுதி வழியாகச் சுற்றிக் கொண்டு வந்து ஆலயத்தின் நேர் வாசல் பகுதியை அடைந்தோம்.



நடுப்பகுதியில் இருப்பது பிரதான ஆலயம். அதற்கு இடப்புறமும் வலப்புறமும் மேலும் ஒரு மாரியம்மன் ஆலயமும் ஒரு வினாயகர் ஆலயமும் இருக்கின்றன. மையப்பகுதியில் அமைந்திருக்கும் ஆலயத்தின் முன் வாசல் பகுதிக்கு வந்தேன். அங்கு நான் கண்ட காட்சி என்னை அதிசயத்தில் மலைக்க வைத்தது.

கற்பகிரகம் மூலஸ்தானம் என இல்லாமல் ஆலயத்தின் நடுப்பகுதியில் பிரமாண்டமான மணல் புற்று நேராக நிமிர்ந்து நிற்க அதன் மேல் மாலைகள் குவிந்து கிடக்க மையப்பகுதியில் வெள்ளியால் ஆன அம்மன் வடிவத்து முகம் மட்டும் வைத்தாற்போன்ற ஒரு அமைப்பு அங்கே கண்முன்னே காட்சியளித்தது.





நான் எதிர்பாராத ஒரு காட்சி அது.ஆச்சரியத்திலும் அக்காட்சியின் அழகிலும் மெய்மறந்து போனேன்

No comments:

Post a Comment