Wednesday, May 18, 2016

அயர்லாந்தின் அழகில்...! வண்ணக் கோலங்கள் 15

மதியம் உணவு வேளையைக் கடந்து ஏறக்குறை இரண்டரை மணி வாக்கில் கோல்வே நகரின் மையப்பகுதியை வந்தடைந்தோம். மழைத்தூறல் இன்னமும் இருந்ததால் அனைவருமே மழைக்கோட் அணிந்து கொண்டும் குடைகளை ஏந்திக் கொண்டும் நடக்க வேண்டியதாக இருந்தது. எங்கள் பயண வழிகாட்டி அயர்லாந்தில் வருஷம் முழுவதும் மழை பெய்வதால் எப்போதும் குடையுடனே செல்வதுதான் உதவும் என்று கூடுதலாக அழுத்தம் தந்து சூழலை விளக்கினார்.
சுற்றிப்பார்க்கச் செல்லும் போது எப்போதுமே நல்ல வெயிலாக இருந்தால் பார்க்க வேண்டியனவற்றைப் பார்க்கவும் புகைப்படம் எடுக்கவும் ஏதுவாக இருக்கும். ஆனால் மழை பெய்ய ஆரம்பித்து விட்டாலோ மழையிலிருந்து நம்மை நனையாமல் பார்த்துக் கொள்ள கவனம் எடுப்பதில், பார்க்க வேண்டியனவற்றில் பலவற்றை தவற விடக்கூடிய சந்தர்ப்பமும் நிகழ்ந்து விடும். இது சற்று கவலையையும் தரத்தானே செய்யும்.


​ 

என்னுடன் வந்த ஏனைய ஜெர்மானிய பயணிகள் பேருந்துப் பயணத்தின் போதே மழையை நினைத்து புலம்பிக் கொண்டே வந்தனர். "இந்த வாரத்தில் சுற்றுலா பதிவு செய்தது பெரிய தவறாகிவிட்டது" எனப் பலர் தங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொண்டே வந்தனர். இந்தக் குறைபாடுகளைக் கேட்ட எங்கள் பயண வழிகாட்டிச் சொன்னார். ஜெர்மானிய மக்களின் இயல்பு, எப்போதும், "இன்னும் கூட சரியாகச் செய்திருக்கலாமோ" என்றே இருக்கும். ஆனால் அயர்லாந்து மக்களின் இயல்போ இதற்கு மாற்றாக " இதற்கு மேல் மோசமாக இல்லாமல் இருக்கின்றதே - இதுவே பரவாயில்லை" என்பதாக இருக்கும் என்று சொன்னபோது ஏனைய ஜெர்மானிய சுற்றுப்பயணிகள் இதனை ஒப்புக் கொண்டனர்.

​ 

ஆக "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" என்ற பழமொழிக்கு ஏற்ப மனதில் எல்லாச் சூழலையும் ரசிக்க ஆரம்பித்து விட்டால் ஏமாற்றம் நம்மை அதிகமாகத் தாக்காது என்பதை இந்த இரண்டு சமூகங்களுக்கிடையேயான அடிப்படை குண நலன்கள் பற்றிய விளக்கம் நன்கு புரியவைப்பதை நேரிலேயே அறிந்து கொண்டேன்.


​ 


kooல்வே நகரில் ஒரு உணவகத்தில் மதிய உணவை சப்பிட்டு விட்டு சாலையோரத்தில் நடந்து சென்று ரசித்துக் கொண்டிருந்தோம். டப்ளினை விட இங்கே ஒவ்வொரு கடையும் வீடுகளும் வண்ண வண்ண கோலத்தில் கண்களைக் கவர்வதாக அமைந்திருந்தன.


​ 
வீட்டுக்குப் பூசப்பட்ட வர்ணங்கள் மிகக் கவர்ச்சியான வர்ணங்களாகவும் சாலையில் போவோரைத் திரும்பிப்பார்க்க வைக்கும் வகையிலும் இருந்தன. சில கட்டிடங்களில் ஓவியங்கள் வரைந்து அவை சாலையில் வருவோர் போவோர் நின்று பார்த்துச் செல்லும் வகையில் அமைந்திருந்ததையும் கவனித்து ரசித்தேன்.


​ 


கால்வே நகரிலே ஒரு இந்திய உணவகமும் இருக்கின்றது. அங்கே வரும் சுற்றுப்பயணிகளுக்காக இது இருக்குமா அல்லது இங்கே கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்களும் இருப்பார்களா என்ற கேள்வி மனதில் எழாமல் இல்லை. ஆயினும் இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்திய உணவு ஆங்கிலேயர்களின் அன்றாட உணவில் இணைந்து ஒன்றாக விட்டது என்பதும் வீட்டிலேயே கூட ஆங்கிலேய மக்கள் இந்திய உணவுகளைச் சமைத்து சாப்பிடுவது வழக்கமாகிவிட்டது என்பதையும் நான் அறிந்திருந்தேன். ஆனால் அயர்லாந்தில் இன்னமும் அந்த அளவிற்கு இந்திய உணவு பயன்பாடு விரிவடைந்திருக்குமா என யோசனை இருந்தது. எங்கள் பயண வழிகாட்டியிடம் கேட்ட போது பெரும்பாலும் இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கிலேயர்கள் இந்திய உணவுகளுக்குச் செல்வது வழக்கம் என்றும் அயர்லாந்து ஐரீஷ் மக்கள் இன்னமும் இந்திய உணவுக்கு அதிக அளவில் அறிமுகம் பெறவில்லை என்பதையும் அறிந்து கொண்டேன்.சாலைகளின் பல பகுதிகளைச் சுற்றிப்பார்த்த பின்னர் ஒரு நல்ல ரெஸ்டாரண்டில் அமர்ந்து காப்பி சாப்பிட்டு விட்டு பேருந்து இருக்கும் இடம் நோக்கி வரும் போது மாலை ஆறு ஆகியிருந்தது. அன்றைய நாள் நல்ல முறையில் திருப்திகரமாக அமைந்த மகிழ்ச்சியில் மறு நாள் நிகழ்ச்சிகளை எண்ணி மகிழ்ந்திருந்தது என் மனம்.


தொடரும்

சுபா

No comments:

Post a Comment