Tuesday, May 24, 2016

அயர்லாந்தின் அழகில்...! ஈமச்சடங்கு கல்திட்டைகள் 17

மானுடவியல் கூறுகளை ஆராய முற்படும் போது உலகமெங்கிலும் உள்ள மக்களிடையே பல்வேறு ஒற்றுமைக் கூறுகள் இருப்பதைக் கண்டறிய முடிவதோடு மக்கள் சிந்தனைகளிலும் பல விசயங்களில் ஒற்றுமை இருப்பதைக் காண்கின்றோம். அடிப்படையில் எங்கிருந்தால் என்ன? மனித இனம் என்பது, பௌதிக கோட்பாடுகளின் அடிப்படையில் ஹோமோ செப்பியன்கள் என்ற இனத்தினிலிருந்து கிளைத்தவர்கள் தானே. 

இப்படி பொதுக்கூறுகளை, அதிலும் பண்டைய மக்களின் வாழ்வியல் கூறுகளில் காணும் போது, குறிப்பாக ஒரு சில விசயங்களில் இருக்கின்ற ஒற்றுமைகள் என்பன, இவ்வகை ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோருக்கு ஆச்சரியத்தை அளிக்கத்தவருவதில்லை, எனது பல பயணங்களிலும் சரி, அருங்காட்சியகத் தகவல் சேகரிப்புக்களிலும் சரி, மானுடவியல் சார்ந்த அருங்காட்சியகங்களில் பொதுவாக வாழ்விடங்கள் அமைத்தல், வாழ்வியலில் அடங்கும் பல்வேறு சடங்குகள், ஈமக்கிரியைச் சடங்குகள், விவசாயம், இறப்புக்குப் பின் மனித உடல் என்பன போன்ற விசயங்களில், பல ஒற்றுகள் பல இனங்களுக்கிடையே இருப்பதைக் கண்டிருக்கின்றேன். அப்படி ஒரு ஆச்சரியத்தை அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்திற்குச் சென்ற போது நேரில் பார்த்து வியந்தேன். 

எங்களின் பயணத்தில் அடுத்ததாக அமைந்தது லிமெரிக் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கற்கால ஈமச்சடங்கு கல்திட்டைக்கான பயணம். போல்னப்ரோன் (Poulnabrone) என அழைக்கப்படும் இந்தச் சின்னம் அயர்லாந்தின் பாதுகாக்கப்படும் அறிய தொல்பொருள் சின்னங்களில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது. 

அயர்லாந்தின் மேற்குப் பகுதியில் பரவலாக இவ்வகையான ஈமச்சடங்கு கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் 90 கல்திட்டைகள் அடையாளம் காணப்பட்டு தொல்பொருள் சின்னங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. இதே போன்ற கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவிலும் இருப்பதாகவும் இவை நியோலித்திக் காலத்தைச் சேர்ந்த ஈமச்சின்னங்கள் என்றும் அங்கிருந்த தகவல் பலகையிலிருந்து அறிந்து கொண்டேன். 

இவ்வகை கல்திட்டைகளின் வடிவங்கள் குறிப்பிட்ட வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டு நிற்கும் தூண்கள். அதற்கு மேலே படுக்க வைத்தார்போன்ற அமைப்பில் கூரை போல ஒரு கல்திட்டை வைக்கப்பட்டிருக்கும். முன் பகுதியில் வாசல் போன்ற அமைப்புடன் இது காட்சியளிக்கும். இறந்தவரின் உடல் இதன் கீழ் புதைக்கப்பட்டு வைக்கப்படும். சமாதி போன்ற ஒரு அமைப்புதான் இது! இவ்வகையான சமாதிகளில் இறந்தவர் உடலை வைத்துப் புதைக்கும் போது அங்கே அவருக்குப் பிடித்த, அவர் பயன்படுத்திய, அவர் சென்றிருக்கும் புதிய உலகத்தில் அவர் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கையில் வைக்கப்படும் பொருட்கள் என அனைத்தும் சேர்த்து வைத்துப் புதைக்கப்படுவது இதன் அடிப்படை அம்சம். இதே ஈமச்சடங்கு கூறுகள் எகிப்து, சூடான், ஆப்பிரிக்கா, இந்தியா, ஐரோப்பா, என நமக்குக் கிடைக்கின்ற இவ்வகை ஈமச்சடங்கு சின்னங்களின் எச்சங்களின் வழி அறிய முடிகின்றது. ஏறக்குறைய எல்லா இனங்களிலுமே இவ்வகையான சமாதிகளுக்கு வந்து இறந்தோரை நினைத்து வழிபடுவது என்பதும் வழக்கத்தில் இருக்கின்றது என்பதும் வியப்பளிக்கும் செய்தியே. போல்னப்ரோன் கல்திட்டையை அயர்லாந்து அரசு பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச்சின்னமாக அறிவித்து இப்பகுதியை முழுமையாகப் பாதுகாத்துள்ளது. இப்பகுதியில் கல்திட்டைகள் என்றால் என்ன, இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வு நிலை, நியோலித்திக் கால சூழல், இங்கு வந்து குடியேறிய மக்கள், ஈமச்சடங்குகள் பற்றிய விரிவான விளக்கம் ஆகிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளன. 

இது சுற்றுப்பயணிகள் வந்து பார்த்துச் செல்லும் இடமாக இருப்பதால் இங்கே சில கடைகளும் இருக்கின்றன. அங்கே இரும்பு, வெள்ளி ஆகிய உலோகங்களில் காதணிகள், அலங்காரப்பொருட்கள் ஆகியன செய்யும் ஒரு பகுதிக்குச்சென்றேன். அங்கே கெல்ட் குறியீடு ஒன்றினை தேர்ந்தெடுத்து, அதில் இரும்பில் ஒரு காதணி செய்ய வைத்து வாங்கிக் கொண்டேன். ஏறக்குறைய 15 நிமிடத்தில் நான் தேர்ந்தெடுத்த வடிவத்தில் ஒரு ஜோடி அழகான காதணி ஒன்றை அந்த வியாபாரி எனக்கு செய்து கொடுத்தார். இங்கு நான் கண்ட கல்திட்டைகள் போன்ற கற்காலச் சின்னங்களை நான் 2012ம் ஆண்டு தமிழகத்தின் கிருஷ்ணகிரிக்கு அருகில் உள்ள மல்லச்சத்திரம் பகுதிக்குச் சென்றிருந்தபோது பார்த்தேன். அயர்லாந்தின் லிமெரிக் மாவட்டத்தில் நான் பார்த்த கல்திட்டை வடிவத்தை ஒத்த வகையிலேயே இங்கே மல்லச்சத்திரத்திலும் சிறு வேறுபாட்டுடன், ஆனால் அதே வடிவில் என, பல கல்திட்டைகள் இங்கே இருக்கின்றன. முன்பு 200க்கும் மேற்பட்ட கல்திட்டைகள் இங்கே மல்லச்சத்திரத்தில் இருந்திருக்கின்றன. ஆனால் தற்சமயம் ஏறக்குறைய 20 கல்திட்டைகளைத்தான் காணமுடிகின்றது. ஆயினும் கூட இப்பகுதி இன்னமும் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னமாக அடையாளம் காணப்படவில்லை என்பதும், இங்கு வந்து போகும் பொதுமக்கள் இக்கல்திட்டைகளைச் சேதப்படுத்தியும் அவற்றின் கூரைகளைப் பெயர்த்துக் கொண்டுபோய் தங்கள் வீடுகளில் ஏதாவது ஒரு காரியத்திற்குப் பயன்படுத்துவது என்பது நிகழ்வது வேதனைக்குறியது. அயர்லாந்தில் வரலாற்று புராதனச் சின்னங்கள் அடையாளம் காணப்பட்டு அவை அந்த நிலத்து மக்களின் வரலாற்றைச் சொல்கின்ற அடையாளமாக மதிக்கப்படுகின்றது. இந்த நிலை இன்னமும் தமிழகத்தில் பெருவாரியாக ஏற்படவில்லை என்பது நிதர்சனம்! இது மாற வேண்டும். தொல்லியல் வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட பெருவாரியான அளவில் வேண்டும் என்பதே எமது அவா! 


தொடரும்.. 
சுபா

No comments:

Post a Comment