Thursday, October 16, 2003

இத்தாலி - [Oct 3-5] - 11



Pisa விலிருந்து Florence செல்வதற்கு இரயிலிலேயே சென்று விடலாம். ஏறக்குறை 30 நிமிடங்கள் தான் தேவை. Florence மலைப்பாங்கான ஒரு இடம். மலைகள் சூழ்ந்த இந்த இடத்தில் பார்க்க வேண்டிய பல இடங்கள் இருக்கின்றன. ஆனால் என்னுடைய பயணத்தை ஞாயிற்றுக்கிழமையே முடித்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம்
இருந்ததால் இங்கு அதிக நேரம் இருந்து பார்க்க முடியவில்லை.

Florence வந்த சில நிமிடங்களிலேயே அங்கிருந்து விமானம் வழி மிலான் புறப்பட வேண்டும். அதன் பின்னர் மிலானிலிருந்து Stuttgart வரவேண்டும். அதனால் Florence நகரைச் சுற்றிப்பார்க்கும் எண்ணத்தை சுத்தமாகக் கைவிடவேண்டிய நிலை வந்து விட்டது. Florence விமான நிலையத்தில் எதிர்பார்த்ததைவிட கூட்டம் அதிகம். விமானம் புறப்பட 10 நிமிடம் இருக்கும் வரை என்னுடைய டிக்கட் திக்கப்படவில்லை. அவசரத்தில் பதற்றம் அதிகரிக்கவே அதிகாரியிடம் சென்று எனது அவசரத்தைத் தெரிவித்தேன். உடனே அவர், எந்த பதற்றமும் இல்லாமல் எனது டிக்கட்டை சோதித்து அனுப்பிவைக்கவே, எனது Gate எண்ணைத் தேடி விரைந்தேன்.

அது ஒரு மறக்க முடியாத விமானப் பயனமாக ஆகிவிட்டது. இந்த Airitalia விமானம் சற்று சிறியது. அன்று வானிலையும் சரியாக இல்லை. பலத்த மேக மூட்டம், காற்று என்பதால் விமானம் மிக வேகமாக அதிர்வுகளைக் கொடுக்க ஆரம்பித்து விட்டது. எனக்கு 2 வரிசைகளுக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஒரு இத்தாலியப் பெண்மனிக்கு இதனைத் தாங்கிக் கொள்ள முடியாது ரத்த அழுத்தம் அதிகரித்து மூர்ச்சையாகி விட்டார். உடனே விமான முழுவதும் பதற்றம் அதிகரித்து விட்டது. அவருக்குத் தேவையான சிகிச்சை அளித்து விமானம் தரையிறங்கியவுடன் அவரை ஆம்புலன்ஸ் வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

மிலான் விமான நிலையத்தை அடைந்தவுடன் சற்று நேரமிருந்ததால் மிலான் நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினேன். விமானம் மாலை 7:40க்கு. ஆக இடையில் அவ்வளவாக நேரம் இல்லை.

நகரத்தின் சில பகுதிகளில் நடந்து விட்டு அங்கிருந்து டெக்ஸி எடுத்து மீண்டும் விமான நிலையம் வந்து Luftansa விமானத்தில் Stuttgart புறப்பட்டேன். 75 நிமிட பயணம் இது. விமான நிலையம் அடைந்து அங்கிருந்த S-Bahn இரயில் நிலையம் வரும்போது மணி இரவு 9:30ஆகிவிட்டது.

இத்தாலியில் இரயிலில் பயணம் செய்தபோது இருந்த கூச்சல் சத்தம் இங்கில்லை. ஆனால் இதனைப் பொய்யாக்கும் வகையில் ஒரு நிலையத்தில் சில இளைஞர்கள் ஏறினர். அனைவரும் குடி போதையில் இருந்தது அவர்களது நடையிலேயே தெரிந்தது. அதில் ஒருவனுக்கு நடக்கவே முடியவில்லை. இவனை தூக்காத குறையாக இழுத்து வந்து உட்கார வைத்தனர் அவனது நண்பர்கள். சற்று நேரத்தில் அவர்களில் ஒருவன் பக்கத்தில் அமர்ந்திருந்த என்னிடமும் எனக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு ஜெர்மானியரிடமும் கொஞ்சம் பணம் கொடுக்கும் படி கெஞ்சினான். சில சில்லறைகளை நானும் கொடுத்தேன். எங்களிடம் பெற்றுக் கொண்டு அடுத்த வரிசையில் அமர்ந்திருந்தவர்களிடமும் அதே வசனம் பேசி சில்லறை சேர்க்க ஆரமித்தனர் இந்த இளைஞர்கள். மனிதர்களில் பல வகைகள். அதிலும் எல்லா வகையிலும் வாழ்க்கையில் வசதிகளையும் சௌகரியங்களையும் அனுபவிக்கும் நிலை இருந்தாலும் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளும் இந்த இளம் தலைமுறையினரின் போக்கு வருந்தும் வகையில் தான் இருக்கின்றது. இதையெல்லாம் நினைத்துக் கொண்டு வீட்டை அடையும் போது இரவு 10:30 ஆகிவிட்டது.

இனிமையான இந்த 3 நாட்களில் கிடைத்த அனுபவங்கள் பல; இவை என்றும் மனதை விட்டு நீங்காதவை !

முற்றும்.

Wednesday, October 15, 2003

இத்தாலி - [Oct 3-5] - 10

அது ஒரு மறக்க முடியாத நாள். எனது பல நாள் ஆசையான Campo dei Miracoli (Piazza Duomo), சாய்ந்த கோபுரத்தை பார்த்ததும் அதன் அழகில் ஒரு நிமிடம் திகைத்து நின்றேன். இந்த கோபுரத்தை 1173 கட்ட ஆரம்பித்தார்கள். ஏறக்குறைய 200 ஆண்டுகள் எடுத்தது இந்தக் கோபுரத்தைக் கட்டி முடிக்க. இடையிடையே இதனை முடிப்பதற்குள் பல இடர்பாடுகள் வந்ததால் தான் இந்தத் தாமதம்.




கோட்டை நுழைவாயில் உள்ளே நுழைந்ததும் முதலில் நம்மை வரவேற்பது வெள்ளை வெளேர் என இருக்கும் Cathedral. இதனை அழகான கோபுரத்தோடு வடிவமைத்திருக்கின்றனர். இந்த Cathedral -லின் சுவர்களிலும் கதவுகளிலும் அருமையான வேலைப்பாட்டுடன் அமைந்த சித்திரங்களையும் சிற்பங்களையும் காணமுடிகின்றது. Cathedral உள்ளே உள்ள கலைப்பொருட்கள் மற்றும் ஒவ்வொரு
தனிப்பட்ட அங்கங்களைப் பற்றிய விபரங்களை guide உதவியின்றி தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருக்கின்றனர். 2 தொலைபேசிகளை இணைத்த ஒரு ஒலிப்பேழை இருக்கின்றது. அதில் 1 EUR நாணயத்தை போட்டால் உடனே நாம் தேர்ந்தெடுக்கும் மொழியில் ஒவ்வொன்றுக்குமான விளத்தைத் தருகின்றது.




அடுத்ததாக Pisa கோபுரத்திற்குள் செல்வதற்காக 15 EUR கொடுத்து டிக்கட் பெற்றுக் கொண்டேன். ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ஒரு முறை என ஒரு அதிகாரி வரிசையாக அனைவரையும் நிற்க வைத்து பார்வையாளர்களை அழைத்துச் செல்கின்றார். [பள்ளியில் படித்த காலங்களில் சுற்றுலா செல்லும் போது இப்படித்தான் செல்வது வழக்கம். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கே கிடைத்த அனுபவம் அந்த பழைய அனுபவங்களை ஞாபகப்படுத்தியது. கோபுரத்தின் மேலே செல்ல குறுகலான ஒரு படி
இருக்கின்றது. ஒரு படியில் ஒருவர் தான் நிற்க முடியும். மேலே செல்ல செல்ல, ஒரு பக்கம் சாய்ந்து நடப்பதை உணரமுடிகின்றது. ஒவ்வொரு தளத்திலும் சிறிய அளவிலான ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதிலிருந்து Pisa நகரைக் காண முடிகின்றது.




ஆகக் கடைசியான தளத்திற்கு வரும்போது காற்று மிக பலமாக வீசிக் கொண்டிருந்ததால் படிகளோடு ஒட்டியிருந்த இரும்புக்கம்பியை அனைவரும் இருக்கமாகப் பிடித்துக் கொண்டே ஏறி வந்தோம். பலமான காற்றை சமாளிப்பது என்பது ஒரு சிரமமான காரியம்தான். மேல் தளத்தில் சுற்றிலும் 4 பெரிய இரும்பு ஆலயமணிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஏறக்குறைய 200 kg எடையாவது இருக்கும் என்று நினைக்கின்றேன். மேலேயிருந்து பார்க்கும் போது இந்த நகரை முழுமையாகக் காணமுடியும். அவ்வளவு நுணுக்கமாக இதனை வடிவமைத்துக் கட்டியிருக்கின்றனர். பாதுகாப்புக்காக மேலேயே எப்போதும் ஒன்றிரண்டு காவல் அதிகாரிகள் எப்போதும் இருக்கின்றனர்.

Piazza Duomo அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு அதிசயம் தான். இதன் அழகை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. நேராகப் பார்க்கும் போதுதான் அதனை உணர்ந்து ரசிக்க முடியும்.

ஏறக்குறைய 4 மணி நேரங்கள் இங்கே இருந்து விட்டு ஞாபகத்திற்காக சில நினைவுச்
சின்னங்களையும் வாங்கிக் கொண்டு புறப்பட்டேன் Florence நகரத்திற்கு. அன்று மாலை எனது திட்டப்படி Stuttgart திரும்பவேண்டும். தொடரும்....

Tuesday, October 14, 2003

இத்தாலி - [Oct 3-5] - 9

அன்று மாலையே ரோமிலிருந்து Pisa செல்ல முதலிலேயே இரயிலில் இடம் பதிவு செய்திருந்ததால் 'Rome Centrale' இரயில் நிலையத்துக்கு விரைந்தேன்.



[சிலை போல வேஷமிட்டு ரோம் நகரில் நிற்கும் பெண்]

மாலை 5 மணி அளவில் இரயில் புறப்பட்டது. இந்த முறை எனது அதிர்ஷ்டம், இரயிலில் அவ்வளவாகப் பயணிகள் இல்லை. ஒரு சிலர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக அமர்ந்திருந்தனர். கையில் வைத்திருந்த "Tantric Ground and Paths" என்ற நூலைப் படிக்க ஆரம்பித்தேன். [இந்த நூலைப் பற்றி விரைவில் எனது Suba's Musings வலைப்பூவில் எழுதவுள்ளேன்]

ரோம் நகருக்கும் பீஸா நகருக்கும் இடையில் செல்லும் இரயில் பாதையில் ஏராளமான Tunnels இருக்கின்றன. ஒரு சில, ஏறக்குறைய 5 km நீளம் வரை செல்லக் கூடியனவாகவும் இருக்கின்றன. சரியாக இரவு 9:30 மணியளவில் இரயில் Pisa Centrale வந்து சேர்ந்தது. அங்கிருந்து நான் பதிவு செய்திருந்த Bed & Breakfast தங்கும் விடுதிக்குச் செல்ல வேண்டும். இந்த இடம் இருக்கும் ஊர் Empoli என்பது. வந்து இறங்கிய பின்னர் தான் தெரிந்தது Empoli, Pisa நகரிலிருந்து ஏறக்குறைய 35 km தூரம் உள்ளது என்ற விஷயம். உடனே Taxi எடுத்து Empoli செல்லக் கிளம்பினேன். பீசாவிலிருந்து எம்போலி செல்ல 100 EUR கட்டணம் வாங்கி விட்டார் ஓட்டுநர். Stuttgart - லிருந்து Pisa -விற்கு விமானத்திலேயே இதைவிட மலிவாகச் சென்று விடலாம். என்ன செய்வது? அன்றைக்கு அதிர்ஷ்டம் ஒத்துழைக்கவில்லை. எம்போலியில் பதிவு செய்திருந்த B&B உரிமையாளர் ஆங்கில-இத்தாலிய தம்பதியர். என்னை எம்போலி இரயில் நிலையத்தில் டெக்ஸி ஓட்டுநர் இறக்கி விட, நிலையத்திற்கே வந்து என்னை இந்தத் தம்பதியர் அழைத்துச் சென்றனர்.




இத்தாலியில் பிரச்சனையின்றி ஆங்கிலம் பேசும் முதல் நபரை அங்குதான் சந்தித்தேன். 39 EUR விலையில் மிக அழகிய விஸ்தாரமான அறையுடன் கூடிய இடம் இது. இத்தாலிக்கு வருபவர்கள் எம்பொலிக்கும் வந்து கட்டாயமாக குறைந்தது ஒரு நாளாவது தங்கிச் செல்ல வேண்டும். அழகிய ஓடைகள், திராட்சைக் கொடிகள், என பார்ப்பதற்கு மிக ரம்மியமாக இருக்கின்றது இந்த ஊர். மறுநாள் காலையில் ஆங்கிலேய பாணியிலான காலை உணவை ஏற்பாடு செய்திருந்தனர். பழங்காலத்து மாளிகையில் அமர்ந்து சாப்பிடுவது போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கும் வகையில் அலங்காரம் இருந்தது. அங்கிருந்து check-out செய்து விட்டு என்னை அந்த இத்தாலியரே இரயில் நிலையத்தில் அழைத்துக் கொண்டு வந்து விட்டு விட்டுச் சென்றார். இரயில் Empoli யிலிருந்து மீண்டும் Pisa கிளம்பியது... தொடரும்...

Monday, October 13, 2003

இத்தாலி - [Oct 3-5] - 8

பழமை வாய்ந்த ரோமானிய சாம்ராஜ்ஜியத்தின் மாளிகைகளுக்கு இடையில் சற்று புதிய தோற்றத்தோடு மற்றொரு பிரமாண்டமான ஒரு மாளிகை தூரத்திலேயே தெரிந்தது. அதுதான் Victor Emmanuel II நினைவகம். வரும் வழியில் சில பிச்சைக்காரர்கள், அதிலும் பெண்கள், தங்கள் முகத்தைத் துணியால் மூடிக் கொண்டு தரையில் அமர்ந்து பிச்சைக்காக தட்டை மாத்திரம் நீட்டியவாறு அமர்ந்திருந்தனர். திடீரென்று ஒருவர் எனக்கு முன்னால் நடந்து சாலையை கடக்க முயன்று கொண்டிருந்தார். முகமெல்லாம் சுத்தமாக வெள்ளையடித்து Scream படத்தில் வரும் வில்லனைப் போல காட்சியளித்தது அவரது முகம். பழைய ரோமானியர்களின் உடையணிந்திருந்தார். சாலையைக் கடந்து பின்னர் ஒரு சுவற்றில் ஏறி அங்கேயே அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை கையில் எடுத்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்துவிட்டார். இதையெல்லாம் பார்ப்பதற்கு ஆச்சரியமாகத்தானிருந்தது.


ரோம் நகர மையத்தில் பலர் இம்மாதிரியான வேஷங்களோடு செல்வதைக் காணமுடிகின்றது. சாலைகளிலேயே நின்று கொண்டு வேடிக்கை காட்ட ஆரம்பித்து விடுகின்றனர். வருவோர் போவோர் இந்தக் காட்சிகளைப் பார்த்து விட்டு காசு போட்டு விட்டுச் செல்கின்றனர்.




இதையெல்லாம் பார்த்துக் கொண்டே Victor Emmanuel II நினைவகம் வந்து சேர்ந்தேன். மிகப் பெரிய செம்பால் ஆகிய 2 குதிரைகள் இந்த கட்டிடத்தின் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்றன. தூரத்திலிருந்தே இதனைக் காண முடிகின்றது. இந்த பிரமாண்டமான நினைவுச் சின்னம் Giuseppe Sacconi என்பவரால் (1885-1911) வடிவமைக்கப்பட்டது. வெள்ளை பளிங்கினால் இம்மாளிகையின் பெரும் பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.




அங்கேயே சற்று நேரம் அமர்ந்திருந்து விட்டு ரோமானிய கலையழகைச் சொல்லும் மற்றொரு இடமான Fontana Di Trevi பார்க்கக் கிளம்பினேன். சற்று களைப்பாக இருந்தாலும் இந்த இடத்தை வந்து சேர்ந்ததும் இவ்வளவு தூரம் நடந்தது வீண் போகவில்லை என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டேன். அத்தனை அழகு இந்த இடம். இந்த Fontana விற்கு ஒரு சிறப்பு கதையும் இருக்கின்றது. யார் ஒருவர் இந்த நீரை அருந்துகிறார்களோ, அல்லது இந்தக் குளத்தில் காசு போடுகின்றார்களோ அவர்கள் மீண்டும் ரோம் வருவர் என்பது இங்குள்ள ஐதீகம். Salvi எனும் கட்டிடக் கலைஞனால் இந்த இடம் 1735-ல் உருவாக்கப்பட்டது. இதன் அழகைப் பார்த்துக் கொண்டே அருகில் இருந்த ஒரு இத்தாலிய உணவகத்தில் இத்தாலிய Milch Caffee சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். நடந்து வந்த களைப்பேல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாய் பறந்து கொண்டிருந்தது.

தொடரும்..

Sunday, October 12, 2003

இத்தாலி - [Oct 3-5] - 7

வேட்டிக்கனிலிருந்து கொலோசியம் வருவதற்கு 2 பஸ்கள் எடுத்து வரவேண்டும். அதற்கு பதிலாக சீக்கிரமாக செல்ல நினைத்ததால், ஒரு Taxi எடுத்துக் கொண்டேன். 5 நிமிடங்களுக்குள் Colosseum இருக்கும் இடத்தை அடைந்தேன். Colosseum ரோமானிய நாகரிகத்தின் மிகப்பெரிய பழமை வாய்ந்த ஒரு அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.




உலகின் பல மூலைகளிலிருந்தும் வந்திருந்த சுற்றுப் பயணிகள் ஏராளம். பல வகையான முகங்கள்; வர்ணங்கள்; ஆடை அலங்காரம் என சாதாரண நாளிலேயே இந்த இடம் திருவிழா கோலம் பூண்டு இருந்தது. வாசலிலேயே பழங்காலத்து ரோமானிய உடைகளில் Gல்adiators நின்று கொண்டு வருவோர் போவோரிடம் பேசிக் கொண்டும் வித்தை காட்டிக் கொண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தனர்.

கொலோசியத்தில் உள்ள மிகப் பெரிய Amphitheatre, Vespasian என்பவனால் 72 A.D- யில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. அது முடிவுறாத நிலையில் அவன் இறந்து விடவும், அவனது மகனான Titus இந்த வேலையைத் தொடர்ந்து முடித்தான். ஹீப்ரூ சிறைக் கைதிகள் இந்தக்கட்டிடத்தைக் கட்ட பயன்படுத்தப்பட்டனர். இதன் உண்மையான பெயர் Flavian Amphitheatre என்றாலும் பரவலாக Colosseum என்றுதான் அழைக்கப்படுகின்றது. இது கட்டிமுடிக்கப்பட்டதும் அதற்காக சிறப்பாக ஏற்படுத்தப்பட்டிருந்த விழாவில் ஏறக்குறைய 9000 காட்டு விலங்குகள் இங்கெ பலி கொடுக்கப்பட்டதாம். அதற்குப் பின்னர்தான், உயிரை பலிவாங்கும் ஒரு வகை வீர விளையாட்டான Professional Gladiators எனப்படுபவர்கள் கலந்து கொள்ளும் சண்டை விளையாட்டுக்கள் இங்கே நிகழ்த்தப்பட்டன.




உண்மையில் இதனை விரும்பாத பேரரசர் Constantine இந்த வகை விளையாட்டை நிறுத்துவதற்காக பல முறை முயன்றும் ரோமானிய பழமை வாதிகளால் இது மறுக்கப்பட்டு தொடர்ந்து நிகழ்ந்து வந்தது என சான்றுகள் கூறுகின்றன.




கொலோசியம் உள்ளே சென்று சுற்றிப்பார்ப்பதர்க்கு 10 EURO கட்டணம் வசூலிக்கின்றனர். ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு கதை சொல்லும் வகையில் இந்த இடம் அமைந்திருக்கின்றது. [ நமது தமிழ் சினிமா பாட்டுக்களுக்கு இந்த locations இன்னும் படமாக்கப் பயன்படவில்லை என நினைக்கின்றேன். ஒரு வேளை அவர்கள் முயன்று பார்த்தும் அனுமதி கிடைக்காமல் இருக்கலாம்.(??) ] இதனை முழுமையாகப் பார்த்து விட்டு வாசலிலேயே இருந்த கடைகளில் தேடிப்பார்த்து அழகிய சில நினைவுச் சின்னங்களையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன். கொலோசியம் அருகிலேயே அகழ்வாய்வுகளின் வழி கண்டெடுக்கப்பட்ட மேலும் பல கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் இருந்தன. அவற்றையும் பார்த்து விட்டு கொலோசியத்தின் எதிர்ப்புறத்தில் இருந்த ஒரு உணவுக் கடையில் உணவுக்காக அமர்ந்தேன்.



மிக அருமையாக அலங்கரிக்கப்பட்ட 4 வகை காய்களைக் கொண்ட பீஸா ( 4 seasons Pizza) ஒன்றை ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது எனக்கு அடுத்த மேசையில் இரண்டு ரோமானிய Gladiators ( வேஷம் அணிந்திருந்தவர்கள்) உணவுக்காக வந்து அமர்ந்தனர். அவர்களால் போட்டிருந்த எல்லா ஆடைகளோடும் நாற்காலியில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. உடனே ஒவ்வொன்றாக கழற்றி விட்டு உள்ளே அணிந்திருந்த T-Shirt -டுடன் சாப்பிட ஆயத்தமானார்கள். இதனைப் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு இதுவும் ஒரு வேடிக்கை காட்சியாகவே அமைந்துவிட்டது. சாப்பிட்டு முடித்த பின்னர் அருகாமையிலேயே இருந்த Victor Emmanuel கட்டிடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. தொடரும்...

Saturday, October 11, 2003

இத்தாலி - [Oct 3-5] - 6

சனிக்கிழமை காலை உணவை முடித்தபின்னர் Pisana Palace லிருந்து check-out செய்துவிட்டு ரோம் நகரத்திற்கு புறப்பட்டு விட்டேன். எனது குறிப்பில் முதலில் இருந்தது Vatican City.



1377- லிருந்து Vatican போப்களின் மடங்களாக இருந்து வருகின்றது. வாட்டிக்கனில் முக்கியமாகப் பார்க்க வேண்டியவை St.Peter's Basilica, Vatican Museums, மற்றும் Sistine Chapel ஆகியவையே. பெப்ரவரி 11, 1929- லிருந்து வேட்டிக்கன் ஒரு தனி மாகாணமாகப் பிரகடணப்படுத்தப்பட்டது. ரோமானிய சாம்ராஜ்ஜியம் இருந்த காலத்தில் St.Peter Apostle கொல்லப்பட்டார். இவரது உடல் இந்த இடத்தில் தகனம் செய்யப்பட்டது. இதற்கு ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்குப் பின்னர் Constatntine இந்த St.Basilica எனப்படும் உலக பிரமாண்டத்தை அந்த இடத்தில் கட்டினார்.




இப்போது இருக்கும் இந்த Basilica - வை Julius II 1503 - லிருந்து காடினார். இது முழுமையடைய 176 ஆண்டுகள் பிடித்தன. வாட்டிக்கனின் ஒவ்வொரு பகுதியும் இந்த காலகட்டத்தில் முடிவடைந்தன. அதன் பின்னர் தான் Michelangelo தனது 70-வயதில் உலகின் மிகப்பெரிய dome என்று கருதப்படும் இந்த தேவாலயத்தில் dome - ஐ திட்டமிட்டு வடிவமைக்க ஆரம்பித்தார். அவர் இறந்த பின்னரும் அவரது திட்டத்தின் படியே இது முழுமைபடுத்தப்பட்டது.


வாட்டிக்கனை முழுமையாக சுற்றிப்பார்க்க 2 நாட்கள் தேவை. உலகின் பல மூலைகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நிரம்பியிருந்தனர். [ உலகின் எந்த சுற்றுலா மையங்களுக்குச் சென்றாலும் ஜப்பானிய சுற்றுலா பயணிகளை பார்க்காமல் இருக்க முடியாது. இவர்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கின்றதோ தெரியவில்லை ] St.Peter's Basilica தேவாலயத்தில் உட்பகுதியில் இருக்கும் ஒவ்வொரு சிலைகளும் கண்களுக்கு விருந்து. மணிக்கணக்கில் அதன் கலை நயத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கலாம்.




அன்றைக்கு மறுநாள் நிகழ்ச்சிக்காக ஆப்பிரிக்க நடனக் குழு ஒன்று அங்கு வந்திருந்தனர். மறுநாள் நடைபெறவிருக்கும் நிகழ்வுக்காக இவர்களின் ஒத்திகை ஒன்றும் வாசலிலேயே நிகழ்ந்து கொண்டிருந்தது. அதனைப் பார்த்து விட்டு கோட்டையின் ஒரு மூலையில் வந்து அமர்ந்தேன். எனது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒருவரை நோக்கி இரண்டு இத்தாலிய காவலர்கள் நெறுங்கிக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்தவுடன் தனது பையைத் தூக்கிக் கொண்டு மெதுவாக நழுவ ஆரம்பித்தான் இந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞன். அவனை தடுத்து நிறுத்தி இத்த்தாலியில் காவலர்கள் விசாரிக்க அது புரியாததால் ஆங்கிலத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர். குரேஷியாவிலிருந்து போதிய பயணச்சீட்டுகளோ விசாவோ இல்லாமல் அகதியாக வந்திருக்கின்றான் இந்த இளைஞன். அவனிடம் தேவையான விஷயங்களை விசாரித்து அவனை தங்களோடே கூட்டிசென்று விட்டனர். சற்று நேரத்தில் எனக்குப் பக்கத்தில் வேறொரு இத்தாலிய வயோதிகர் வந்து அமர்ந்தார். இத்தாலியில் என்னிடம் வேட்டிக்கனின் அழகை விமர்சிக்க ஆரம்பித்தார். எனக்குப் புரியவில்லை என்று ஆங்கிலத்தில் சொன்னவுடன், சைகையிலேயே என்னிடம் மிக சுவாரசியமாக விளக்க ஆரம்பித்தார். [ சைகை மொழியை ஒரு பாடமாக எடுத்துப் படிக்காமல் போய்விட்டோமே என்று மனதுக்குள் என்னையே திட்டிக் கொண்டேன் ] அவரிடம் சற்று உரையாடிவிட்டு, அதாவது சைகையிலேயே பேசிவிட்டு ரோம் நகரின் மற்றொரு அதிசயமான கொலோசியத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...

தொடரும்..

Friday, October 10, 2003

இத்தாலி - [Oct 3-5] - 5

இந்த முறை எந்த பிரச்சனையும் இன்றி 881 பஸ்ஸில் ஏறிக் கொண்டேன். ஏறக்குறைய 10 நிமிடங்களில் Rome மையப்பகுதிக்கு பஸ் வந்தது விட்டது. முதலில் கண்ணில் பட்டது உலகின் மிகப்பெரிய Dome என்று சொல்லப்படும் Vatican St.Basilica தேவாலயத்தின் dome. மிகப் பழமையான பிரமாண்டமான இந்தப் பகுதியைக் கடந்ததும் சற்று நேரத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கிக் கொண்டேன். மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததால் விளக்குகளின் வெளிச்சம் இந்த பிரமாண்டமான Rome நகரை மிக மிக அழகாக்கிக் கொண்டிருந்தது.


நேராக நடந்து St. Angelo மாளிகையை அடைந்தேன். பார்க்கும் அனைவரையும் ஒரு நிமிடம் அசர வைக்கும் அற்புதம் இந்த மாளிகை. 130 A.C- 139A.C தான் முதலில் இந்த மாளிகைக் கட்டப்பட்டது. இந்த மாளிகையை பேரரசர் Honorius 403 A.D -ல் கட்டினார் எனவும் குறிப்புகள் கூறுகின்றன. முதலில் இறந்தவர்களின் சமாதியாகவும் நினைவுச் சின்னமுமாக இருந்த இந்த மாளிகை நாளடைவில் போர் காலங்களில் தேவைப்படும் பாதுகாப்புக் கோட்டையாக மாறியது. இது ஒரு முழு மாளிகையாக உருவெடுத்தது 10ம் நூற்றாண்டில் தான். இதன் தனித்துவம் என்னவென்றால் சதுரமான அடித்தளத்தில் வட்ட வடிவிலான 4 tower-கள் இருப்பதுதான். St. Matthew, St. John, St. Mark, மற்றும் St. Luke என்று பெயரிடப்பட்ட இந்த நான்கும் தான் அவை.




இந்த பிரமாண்ட மாளிகையை அடைவதற்கு ஒரு பாலம் அமைத்திருக்கின்றனர்.இந்த பாலத்தில் கறுப்பர்கள் திருவிழா சந்தைகளில் விற்பது போல கைப்பைகள், துணி வகைகள் தொலைபேசிகள் என பலவிதமான பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர். வழியில் ஒருவர் இத்தாலிய கஸ்டானியா விற்றுக் கொண்டிருந்தார். இத்தாலிய கஸ்டானியாவை வாங்கி சுவைத்துக் கொண்டே பாலத்தின் ஓரத்தில் அமர்ந்து இந்த மாளிகையின் அழகை ரசித்துக் கொண்டிருந்தேன். இந்த மாளிகையின் வாசலிலிருந்து ஏறக்குறைய 50 மீட்டர் தூரத்தில் தான் vatican city இருக்கின்றது. t.Basilica தேவாலயத்தின் முகப்புப் பகுதியை அங்கிருந்தே ஓரளவு பார்க்க முடிந்தது.



அந்தப் பகுதியையெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு சுவையான இத்தாலிய உணவைத் தேடி நடக்க ஆரம்பித்தேன். சற்று வாகனங்களின் சத்தமில்லாத அழகிய ஒரு இத்தாலிய உணவகம் தென்பட்டது. இத்தாலிக்கே உரிய அலங்காரத்துடன் இந்த உணவகம் காட்சியளித்தது. இத்தாலிய உணவு வகைகளில் பல வகை உண்டு அல்லவா? அதில் பிரத்தியேகமானதை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற திட்டம் இத்தாலிக்கு வருவதற்கு முன்பே இர்ந்ததால், மெனுவைப் பார்த்து Gnochhi பாஸ்டா தருமாறு கேட்டுக் கொண்டேன். பொதுவாகவே பாஸ்டா வகையறாக்களை சைவமாகவே தயாரிப்பதால் எனக்கு உணவைத் தேடுவதில் பிரச்சனைகள் ஏதும் ஏற்படவில்லை. [இத்தாலிக்கு வருபவர்கள் சைவ உணவு கிடைக்காதோ என கொஞ்சமும் கவலைப்படத் தேவையில்லை. Pizza, Pasta, Spegheti, Macroni எனப் பலவகையான உணவு வகைகளை நாம் கேட்டுக் கொண்டால் சைவமாகவே தயாரித்துக் கொடுக்கின்றனர்]



சுவையான உணவுக்குப் பின்னர் இரவின் வெளிச்சத்தில் St.Angelo, மற்றும் அருகில் இருந்த ஏனைய இடங்களுக்கும் சென்று ரோமானிய கலைத்தன்மையையும் அதன் அழகையும் ரசித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு சிலையும் அழகையும் பார்க்கும் போது அதனை உருவாகியவனின் கற்பனையைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. இரவில் ரோம் நகரைப் கட்டாயம் பார்க்கத்தான் வேண்டும். பகலில் பார்ப்பதை விட இரவில் தான் அதன் அழகு மேலும் கூடிகின்றது என்பதை நேராகவே பார்த்து தெரிந்து கொண்டேன். தொடரும்...