Monday, December 29, 2003

Travelog - Seoul, S.Korea 5



மங்கோலியப் பேரரசர் ஜெங்கிஸ் கான் கொரியாவில் மீண்டும் பிறப்பார் என்று ஒரு நம்பிக்கை கொரிய மக்களுக்கு இருந்திருக்கின்றது. இதன் அடிப்படையில் 1206ல் Temujen என்ற ஒருவரை ஜெங்கிஸ் கான் என்று தேர்ந்தெடுத்து மகுடாபிஷேகம் செய்வித்து மகாராஜாவாக்கியிருக்கின்றனர்.



அரசர்களுக்கான அரண்மனைகள், அதனைச் சேர்ந்தார்போல அமைந்திருக்கும் பூந்தோட்டங்கள் ஆகியவை சியோல் நகரத்தின் பல மூலைகளில் காண முடிகின்றது. ஜப்பானியர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் இந்த அரண்மனைகளைச் சிதைக்காமல் இருந்திருந்தால் மேலும் பல கலை நயம் மிக்க அரண்மனைகளை இப்போது காண முடியும்.

சியோல் பெரிய நகரமாக இருந்தாலும், இங்கு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்வது என்பது மிகச் சுலபமாகவே இருக்கின்றது. இந்த நகரத்தின் ஏறக்குறைய அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் பொது வாகன வசதிகள் அதிலும் குறிப்பாக subway அமைந்திருப்பது பாராட்டக்கூடிய ஒரு விஷயம்.


முதல் நாள் வேண்டிய அளவிற்கு shopping செய்து முடித்து விட்டதால் மேலும் சில முக்கியமான இடங்களைப் பார்த்து வர முடிவு செய்திருந்தேன். சம்சியோங்-டோ ங் பகுதி எனது பட்டியலில் அடுத்ததாக இருந்தது. இங்குதான் சியோலின் பொருளாதார வளர்ச்சியைக் காட்டக் கூடிய பிரமாண்டமான கட்டிடங்கள், அரசாங்க அலுவலகங்கள் போன்றவை இருக்கின்றன. சியோல் உலக வர்த்தக மையம் போங்கூன்சா கோவில், குக்குவோன் என அழைக்கப்படும் தேக்குவாண்டோ தலைமையகம் போன்றவை இங்கிருக்கும் சில முக்கிய இடங்கள்.




மிகப் பிரமாண்டமாக அமைந்திருக்கின்ற சியோல் வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்தார் போன்றே Coax Mall இருக்கின்றது. எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டும் வேடிக்கைப் ர்த்துக் கொண்டும் செல்வதுமாக இந்த இடம் இருக்கின்றது. இந்த Coax Mall உள்ளேயே 16 திரையரங்குகள் கொண்ட ஒரு சினிமா மையமும் இருக்கின்றது. அதன் அருகிலேயே இளைஞர்கள் computer games விளையாடுவதற்காக ஒரு பகுதி இருக்கின்றது. இந்த விளையாட்டை வேடிக்கைப் பார்ப்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். குளிர் காலத்தில் வெளியே செல்வதற்கு பதிலாக Coax Mall போன்ற இடங்கள் பொழுது போக்கு மையங்களாக அமைந்து விடுவதைக் காண முடிகின்றது. இங்கு எனக்கு மன நிறைவளைக்கும் படியாக சுவையான காபியும் கிடைத்தது. வர்த்தக மையத்தில் பல மூலைகளில் பொது தொலைபேசிகளை வைத்திருக்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த தொலைபேசிகளுடனேயே சேர்ந்தார் போல இணைய வசதி அமைந்த கணினியும் இருக்கின்றது. பொதுமக்கள் இந்த சேவையை எந்தக் கட்டணமுமில்லாமல் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

1 comment:

அ. சாதிக் அலி said...

உங்களை நினைத்து மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் வியப்பாகவும் அதே வேளை பொறாமையாகவும் இருக்கு சுபா... உலகையே சுற்றி வந்திருக்கிறீர்கள். பல மொழிகள், கலாச்சாரங்கள், உணவுகள், உடைகள், இடங்கள், இயற்கைகள்... அட அட..... உண்மையில் வாழ்க்கையை நன்றாக அனுபவிக்கிறீர்கள்...

Post a Comment