Monday, June 18, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 15

18.மே.2018
என் கம்போடிய பயணத்தின் இரண்டாம் நாள். அங்கோரிலிருந்து ஏறக்குறைய 50கிமீ வடக்கு நோக்கிய பயணமாக அன்றைய பயணம் அமைந்தது.

புனோம் குலேன் பகுதிக்கு வாகனத்திலேயே புறப்பட்டோம். இது ஒரு மலைப்பகுதி. கம்போடியாவின் தெய்வீகத்தன்மை பொருந்திய ஒரு மலைப்பகுதியாக இது அடையாளப்படுத்தப்படுகின்றது. சைவ, வைணவ சமயங்களும் பௌத்த சமயம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களும் நிறைந்த கம்போடியாவின் ஒரு புண்ணிய பூமி தான் புனோம் குலேன். இதனை குலேன் என்றும் குள்ளன் என்றும் கூட அழைக்கின்றனர். தமிழில் நாம் குள்ளன் மலை என்றும் வைத்துக் கொள்ளலாம்.

அடர்ந்த காடுகள் நிறைந்த மலைப்பகுதி இது. புனோம் குலேன் கம்போடிய அரசினால் பாதுகாக்கப்படும் ஒரு பகுதியும் கூட. மலைப்பகுதியின் வாசலில் காவல்துறையின் அதிகாரிகளின் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முன்பகுதியிலேயே உள்ளூர் மக்கள் சிறு சிறு கூடாரங்களை அமைத்து உள்ளூர் பழங்களை விற்பனை செய்கின்றனர். இங்கே நாவல்பழம், லைச்சி, வாழைப்பழம் ஆகியவற்றோடு பலகாரங்களையும் தயாரித்து விற்பனை செய்து கொண்டிருக்கின்றனர். இம்மலைப்பகுதியில் அதிகமாக லைச்சி பழங்கள் கிடைப்பதால் இம்மலைக்கு லைச்சி மலை என்ற ஒரு பெயரும் இருக்கின்றது.

எங்களுக்கு வழிகாட்டியாக வந்திருந்த திரு.பெய் புனோம் குலேன் பற்றியும், இங்கு ஓடும் ஆற்றில் 1000 லிங்கங்கள் அமைக்கப்பட்டிருப்பதையும், மலைப்பகுதியில் உள்ள புத்தர் கோயில் பற்றியும், நீர் வீழ்ச்சி பற்றியும் விளக்கிக் கொண்டே வந்தார். வாகனத்தில் மலையைச் சுற்றி சுற்றி எங்கள் பயணம் சென்று கொண்டிருந்தது.

கம்போடியா இன்று ஒரு ஏழை நாடு. ஆயின், இன்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தோசீனா எனும் பெரும் பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த க்மெர் பேரரசு ஆட்சி செய்த ஒரு நாடு இது என்பதை வரலாறு காட்டுகின்றது. க்மெர் பேரரசர்கள் ஒவ்வொருவரும் கோயில் கலையையும், சிற்பக் கலையையும், நாட்டியக் கலையையும், போர்க்கலையையும் ரசித்து வளர்த்திருக்கின்றனர்; தங்கள் ஆட்சியில் ரசித்து வாழ்ந்திருக்கின்றனர். இதற்குச் சான்றுகளாக இந்த வரலாற்றுப் புராதனச் சின்னங்கள் இன்று உலகிற்குக் காட்சியளிக்கின்றன.

பயணங்கள் நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் குறிப்பிட்ட ஒரு எல்லையை விரிவாக்கும் பண்பு கொண்டவை. பயண அனுவங்கள் ஒவ்வொன்றுமே நம் உலக அறிவை விசாலப்படுத்துகின்றன. இந்த உலகில் நாம் தனியாக வாழவில்லை. உயிர்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே வாழ்கின்றன. மனிதர்கள் சக மனிதர்களைச் சார்ந்தும் விலங்குகள், தாவரங்கள், பிற உயிர்கள் ஆகியவற்றோடு இயற்கையைச் சார்ந்தே வாழ்கின்றன. இதனை அனுபவப்பூர்வமாக உணர்வது நூல்களை வாசிப்பதனால் மட்டும் கிடைக்கக்கூடியதல்ல. மாறாக, பயணித்து ஏனைய மக்களையும் பார்த்து, ஏனைய இன, சமூக, மக்களின் வாழ்வியல் கூறுகளை அப்படியே உணர்ந்து கொள்ள முயற்சிப்பதன் வழி தான் அது சாத்தியப்படும்.



பயணங்கள் நாம் நமக்குள்ளேயே ஏற்படுத்தி வைத்திருக்கும் சமூகம் பற்றிய நமது சிந்தனையை நாமே அலசிப்பார்க்கும் அனுபவமாக அமையும் போது நமது கற்றல் வளம் பெறுகிறது. ’நான் இப்படித்தான். நான் இதைத்தான் செய்வேன்; நான் இதைத்தான் சாப்பிடுவேன். நான் தான் தூய்மை; ஏனையோர் தூய்மையற்றவர்கள்; ஏனையோர் கலாச்சாரமும் பண்பும் தெரியாதவர்கள். எனது பண்பும் எனது சிந்தனையும் தான் சிறந்தது. என் நலன் மட்டும் தான் முக்கியம். நான் நினைத்தபடிதான் உலகம் இயங்க வேண்டும். எனக்குத் தான் எல்லாம் தெரியும் ... எனக்கு எனக்கு எனக்கு.. நான் .. நான் நான்.. ’ என்ற குறுகிய வட்டத்திலிருந்து நமது பார்வை வெளிவர வேண்டுமென்றால் அது நமது சிந்தனையை நாமே சுயபரிசோதனை செய்யும் போது தான் சாத்தியப்படும். அதற்கு களனாக பயண அனுபவங்கள் என்றுமே உதவுவன.














தொடரும்..
சுபா

No comments:

Post a Comment