Friday, June 22, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 18

அங்கோரில் சில நாட்கள் - 16
18.மே.2018

தமிழகத்து சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறு போல கம்போடியாவை ஆட்சி செய்த பேரரசுகளின் வரலாறும் சுவாரசியமானது. ஃபூனான், சென்லா பேரரசுகளுக்குப் பின்னர், மன்னன் 2ம் ஜெயவர்மனின் ஆட்சி காலம் தொடங்குகின்றது. க்மெர் பேரரசின் தொடக்கப்புள்ளியாக இது அமைகின்றது. கி.பி.800லிருந்து கி.பி 1000 வரையிலான காலகட்டத்தை இதில் குறிப்பிடலாம்.

மன்னன் 2ம் ஜெயவர்மனின் சிலைகள் சியாம் ரீப் நகரின் பல இடங்களில் காணப்படுகின்றன. நாட்டின் வீரச்சின்னமாக, க்மெர் பண்பாட்டின் அடிப்படையை அமைத்த நாயகனாக மன்னன் 2ம் ஜெயவர்மன் கம்போடிய மக்களால் கருதப்படுகின்றான். இவனது ஆட்சி காலத்தில் தான் இந்த நாடு கம்பூஜதேசம் அல்லது கம்போடியா என்ற பெயரைப் பெறுகின்றது என்பது முக்கியச் செய்தி. அதோடு, மன்னர்களுக்கெல்லாம் மன்னனான மாமன்னன் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்கின்றான் 2ம் ஜெயவர்மன். மாமன்னன் என்பவன் இறைவனின் பிரதிநிதி என்றும் அதனால் பல சடங்குகள் மாமன்னனுக்கு நடைபெறும் என்ற கலாச்சார அமைப்பையும் இவனே அதிகாரப்பூர்வமாக கட்டமைக்கின்றான். நாம் முந்தைய பதிவில் பார்த்த ஆக் யூம் கோயில் இந்த 2ம் ஜெயவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்டது என்றே வரலாற்றாசிரியர்கள் பதிகின்றனர்.

மாமன்னன் 2ம் ஜெயவர்மன் கி.பி 790லிருந்து 835 வரை ஆட்சி புரிந்தான். புனோம் குலேன் பகுதியை மேரு மலையாகப் பாவித்து அதற்கு மகேந்திரப்பர்வதம் எனப்பெயர் சூட்டினான். அவனுக்குப் பட்டாபிஷேகம் மகேந்திரப்பர்வதத்தில் நடைபெற்றது. அப்பகுதியில் ஓடும் நீர்நிலைகளில் 1000 லிங்கங்கள் வடிவமைத்தான். மகாலெட்சுமியுடன் அமர்ந்த நிலையில் மகாவிஷ்ணு, பிரம்மா, வெவ்வேறு வடிவிலான சிவலிங்கங்கள் என இப்பகுதியே ஒரு கோயில்வளாகமாகத் திகழ்கின்றது. அருகிலேயே பௌத்த மடாலயம் ஒன்றும் அமைந்துள்ளது.

எங்கள் பயணத்தின் 2ம் நாளில் புனோம் குலேன் பகுதியில் ஓடும் ஆற்றில் செதுக்கப்பட்ட இந்த 1000 லிங்க வடிவங்களையும் ஆற்றின் நீர்பரப்பின் கீழ் கற்பாறையில் செதுக்கப்பட்ட விஷ்ணு, மகாலட்சுமி வடிவங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. உலக அதிசயங்களில் ஒன்று இப்பகுதி எனக் குறிப்பிட்டால் அது மிகையில்லை.

மாமன்னன் 2ம் ஜெயவர்மனுக்குப் பின் அவனது சந்ததியினர் தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பைத் தொடர்கின்றனர்.

மூன்றாம் ஜெயவர்மன்
முதலாம் இந்திரவர்மன்
முதலாம் யசோவர்மன்
முதலாம் ஹர்ஷாவர்மன்
இரண்டாம் ஈசானவர்மன்
நான்காம் ஜெயவர்மன்
இரண்டாம் ஹர்ஷாவர்மன்
முதலாம் ராஜேந்திரவர்மன்
ஐந்தாம் ஜயவர்மன்
எனத் தொடரும் இந்தப் பட்டியலில் உதயாதித்தவர்மனும் ஜெயவீரவர்மனும் இறுதியில் வருகின்றனர். ஆனால் மிகக் குறுகிய கால ஆட்சியாகவே இது குறிப்பிடப்படுகின்றது.

இதற்குப் பின்னர் முதலாம் சூரியவர்மனின் ஆட்சிகாலம் கி.பி.1006ல் தொடங்குகின்றது. இது சூரியப் பேரரசு என்றே அடையாளப்படுத்தப்படுகின்றது.

2ம் ஜெயவர்மன் காலத்தில் உருவாக்கப்பட்ட க்மெர் பேரரசின் முக்கிய மதங்களாக சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும் முதன்மை பெறுகின்றன. பௌத்தம் ஓரளவு ஆங்காங்கே பரவி வழக்கில் இருந்தமையைச் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் முதலாம் சூரியவர்மனின் காலம் தொடங்கி கம்போடியாவின் அதிகாரப்பூர்வ அரச மதமாக பௌத்தம் தன்னை நிலைநாட்டிக் கொள்ளும் வரலாற்று மாற்றத்தின் தொடக்கத்தைக் காணமுடிகின்றது.

முதலாம் சூரியவர்மன் மஹாயான பௌத்த மரபைப் பின்பற்றியவன். தேரவாத பௌத்த மரபும் அவன் காலத்தில் வழக்கில் இருந்தமையைக் கல்வெட்டுச் சான்றுகள் சொல்கின்றன.

குறிப்புக்கள்:
The civilization of Angkor by Charles Higham
https://en.wikipedia.org/wiki/Monarchy_of_Cambodia















தொடரும்..
சுபா

No comments:

Post a Comment