Sunday, June 24, 2018

கம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 19


அங்கோரில் சில நாட்கள் - 19
18.மே.2018
2ம் ஜெயவர்மன் தனது தலைநகரை புனோம் குலேன் மகேந்திரபர்வதத்தில் அமைத்து ஆட்சி செய்தான் என முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். கி.பி 11ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் க்மெர் பேரரசு படிப்படியாக அதன் வலிமையை இழக்க ஆரம்பித்த சூழலில் மீண்டும் எழுச்சி தரும் புதிய அரசு ஒன்று கம்போடியாவில் உருவானது. இந்த வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியவன் மாமன்னன் முதலாம் சூரியவர்மன். இவன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றபோது யசோதரபுரத்தில் தனது தலைநகரை அமைத்தான். கம்போங் சுவே பகுதியில் ப்ரீயெ கான் என்ற மாபெரும் ஒரு நகர உருவாக்கத் திட்டத்தை செயல்படுத்தினான். இதுவே இன்று நாம் அங்கோர் என அடையாளப்படுத்தும் பகுதி. முதலாம் சூர்யவர்மன் ஆட்சிப்பொறுப்பை எடுத்த போது கடும் போர் நிலவியது. அச்சூழலில் போரில் வெற்றிகண்டு ஆட்சியைக் கைப்பற்றினான்ன்.  இவனது ஆட்சிக்காலம் கம்போடியாவின் கலையும்  பொருளாதாரமும்  சிறந்த வளர்ச்சி கண்ட காலமாக அறியப்படுகின்றது.

தமிழகத்தின் சோழப்பேரரசுடன் அரசியல் நட்பினை உருவாக்கினான் முதலாம் சூர்யவர்மன். இது நிகழ்ந்தது கி.பி. 1012 காலகட்டமாகும். முதலாம் சூர்யவர்மன் அன்று தமிழகத்தை ஆண்டு வந்த மாமன்னன் ராஜராஜ சோழனுக்கு ஒரு தேர் செய்து பரிசாக அனுப்பி வைத்தான் என Indian History, (Reddy p.64) குறிப்பிடுகின்றது.  பரிசை அனுப்பி நட்பினை வளர்த்துக் கொண்டதோடு சூர்யவர்மனுக்குப் பிரச்சனையாக இருந்த தம்பிரலிங்க பேரரசை அடக்க உதவி கோரியதாகவும் அறிய முடிகின்றது.  இது இன்றைய மலேசிய நிலப்பரப்பில் இருந்த ஒரு பேரரசு. இந்த தம்பிரலிங்கப் பேரரசைப் பற்றின ஒரு கல்வெட்டு தஞ்சை பெருங்கோயிலில் உள்ளது. இந்தக் கல்வெட்டு முதலாம் ராஜேந்திரன் ஸ்ரீவிஜயப் பேரரசை வென்றதைச் சிறப்பித்துக் கூறும் முக்கியக் கல்வெட்டாகத் திகழ்கின்றது.  இதே கல்வெட்டு தம்பிரலிங்கம் மட்டுமன்றி, மாடமலிங்கம் உட்பட அன்று கிழக்காசியப் பிராந்தியத்தில் குறிப்பாக இன்றைய தாய்லாந்து, வியட்னாம், மலாயா இந்தோனீசிய பகுதிகளில் அரசாட்சி செய்து வந்த 13 பேரரசுகளைத் தோல்வியுறச் செய்து தனது வெற்றியை முதலாம் ராஜேந்திரன் நிலைநாட்டினான் என்பதைக் குறிப்பிடுகின்றது.

இந்த வரலாற்றுச் செய்திகளை மிக நேர்த்தியாக தனது வரலாற்று நாவலான கடாரம் என்ற நூலில் எழுத்தாளர் மாயா (மலர்விழி பாஸ்கரன்) வழங்கியிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அக்காலகட்டத்தில் கிழக்காசியாவின் மிக முக்கியப் பேரரசாக விளங்கிய ஸ்ரீவிஜயப் பேரரசைத் தமிழகத்தை ஆண்ட மாமன்னன் முதலாம் ராஜேந்திர சோழன் வீழ்த்திய நிகழ்வும்,   அவனுடன் அரசியல் நட்பினை ஏற்படுத்திக் கொண்டு ஆட்சியைத் தொடர்ந்து,  கம்போடியாவில்  சூர்யவர்மன்  எழுப்பிய அங்கோர் வாட் கோயிலும் வரலாற்று முக்கியத்துவம் பெறும் நிகழ்வுகள் என்பதில் ஐயமில்லை.

முதலாம் சூர்யவர்மன் கி.பி.1050ம் ஆண்டு நிர்வான நிலை அடைந்தான், அதாவது இறந்தான் எனக் குறிப்புகள் சொல்கின்றன. அவன் மகாயான பவுத்தத்தைப் பின்பற்றியவன். அவனது ஆட்சியில் கம்போடியாவில் புத்தமதம் செழிப்புற்று வளர ஆரம்பித்திருந்தது.

1008 லிங்கங்கள் அமைந்துள்ள மகேந்திர பர்வதம் அமைந்துள்ள புனோம் குலேன் பகுதியில் மலையில் மீண்டும் பயணித்தால் அங்குள்ள பவுத்த ஆலயத்தை காணலாம். எனது பயணத்தில் இப்பகுதிக்குச் சென்றிருந்த  போது அங்கு இன்று வழிபாட்டில் உள்ள பவுத்த ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு பவுத்த மடாலயம் ஒன்று இன்றும் செயல்பட்டு வருகின்றது.   

குறிப்புக்கள்:
The civilization of Angkor by Charles Higham
https://en.wikipedia.org/wiki/Suryavarman_I
https://en.wikipedia.org/wiki/Tambralinga









https://www.facebook.com/subashini.thf/videos/2183077931935592/

https://www.facebook.com/subashini.thf/videos/2183091511934234/



தொடரும்..
சுபா

1 comment:

Post a Comment