Sunday, April 16, 2017

புடாபெஷ்ட் விமான நிலையத்திலிருந்து

ஹங்கேரியில் 4 நாட்கள்.. இடையில் ஒரு நாள் ப்ராட்டிஸ்லாவா என பயணம் இனிதாகக் கழிந்தது.
மழை பெய்யாததால் நான் பட்டியலிட்டிருந்த முக்கிய இடங்களுக்கெல்லாம் சென்று பார்த்து வர முடிந்தது.
ஹங்கேரியின் வரலாறு மேடு பள்ளங்களை இம்மக்கள் அதிகம் சந்தித்துள்ளதைக் காட்டுகின்றது.
இங்கே புடாபெஷ்டில் பொதுவாகனங்கள் புழக்கம் மிக அருமை. செல்போனில் GPS செட் பண்ணி செல்லவேண்டிய இடங்களுக்கு உடனுக்குடன் செல்ல முடிகிறது.
புடாபெஷ்ட் தவிர்த்து புற நகர்களில் ஏழ்மை தெரிகிறது. பண வீக்கம் அதிகரித்திருப்பதால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தாலும் கூட யூரோவிற்கு இவர்களால் மாறமுடியவில்லை.
அனேகமாக எல்லா பாலங்களின் கீழும் கம்பளியைப் போர்த்திக் கொண்டு சிறு பைகளை வைத்துக் கொண்டு பியர் குடித்து உறங்கும் ஆண்களைக் காண முடிகின்றது.
பிரமாண்டமான அரண்மனை போன்ற கட்டிடங்களில் உள்ள அருங்காட்சியகங்கள் அனைத்தும் பொக்கிஷங்கள்.
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் 11%. ஜெர்மானிய மொழி பேசுவதால் சிலர் வேலை தேடி ஜெர்மனிக்கு வருகின்றனர்.
உணவு எனும் போது..இத்தாலிய மற்றும் துருக்கிய, அனைத்துலக வகை உணவுக் கடைகளே உள்ளன. சில ஹங்கேரிய உணவுக் கடைகளும் உள்ளன. ஆனால் என்னை அவை ஈர்க்கவில்லை.
இயற்கை எழில் மனதைக் கவர்கிறது. பசுமையும் டனூப் நதியின் பிரம்மாண்டமும் மனதைக் கொள்ளை கொள்கின்றது.
நகரப்பகுதி மிகத்தூய்மையாக உள்ளது. புற நகர்ப்பகுதியில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் சில குப்பைகள்.
பிரம்மாண்டத்துடன் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒரு நாட்டில் இன்று பெரும்பாண்மை மக்கள் நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் இருப்பதைக் காண முடிகின்றது.
பயணிகளுக்குப் பாதுகாப்பு உள்ளது. உள்ளூர் மக்கள் அன்புடனும் நேசத்துடனும் பழகுகின்றனர்.
ஆக மொத்தம், ஹங்கேரி எளிமையும் பிரம்மாண்டமும் கலந்த வரலாற்றுச் சிறப்புக்கள் நிறைந்த ஒரு நாடு.
புடாபெஷ்டிலேயே எனது அலுவலக நண்பர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்களிடமும் சொல்லிக்கொள்ளாமல் தனிமையில் இந்த நகரைச் சுற்றிப்பார்த்தது இனிய அனுபவம் தான். :-)
-சுபா, புடாபெஷ்ட் விமான நிலையத்திலிருந்து.


1 comment:

தனிமரம் said...

ஹங்கேரி பற்றி இன்னும் அறியும் ஆவலில்!

Post a Comment