Monday, April 22, 2019

ரொமேனியா பயணம் - 22- ஐரோப்பிய கலைப்படைப்புகள்

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மாமன்னர் முதலாம் கார்லின் ஆட்சி ரொமேனிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறுகின்றது. அவருடைய அரண்மனை வளாகம் முழுவதும் இன்று ரொமேனிய கலை அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய அரண்மனை வளாகம். ஒருபக்கம் ஐரோப்பிய கலைகள். மறுபக்கம் ரொமேனிய நாட்டிற்கே உரித்தான கலைகள் என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு இங்கு அரும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 70,000 ஆகும்.
3 மணி நேரங்களை இந்த அரண்மனையின் வளாகத்தின் உள்ளே செலவிட்டேன். அரண்மனையின் கட்டிடம், அதன் அமைப்பு, பளிங்கினால் செய்யப்பட்ட மாளிகையின் பல்வேறு பகுதிகள் ... என மாளிகையே ஒரு அருங்காட்சியகம் தான் எனலாம். அதில் வைக்கப்பட்டிருக்கின்ற அரும்பொருட்கள் உலகின் மிகச் சிறந்த ஓவியர்களது கைவண்ணத்தில் உருவானவை.
ஐரோப்பிய கலைப்படைப்புகள் எனும்போது பழமையான கிருத்துவ மத பின்னணி கொண்ட கலைப்படைப்புகள் என்பன ஒரு புறம். அதற்கு மாற்றாக பதினைந்தாம் நூற்றாண்டில் கிளர்ந்தெழுந்த renaissance புரட்சியின் காலத்தில் தோன்றிய புதிய கலைப்படைப்பு பாணிகள்... அவற்றின் சார்பில் எழுந்த படைப்புகள்... என்பது ஒருபுறம். அந்தவகையில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் கலை பள்ளிகளில் உருவாக்கப்பட்ட பல கலைப்படைப்புகள் மன்னர் முதலாம் கார்ல் அவர்களின் சேகரிப்பில் இருந்தன. அவற்றைக் கொண்டுதான் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. பின்னர் படிப்படியாக ரொமேனிய நாட்டின் பிரபுக்கள் சிலர் சேகரிப்பில் இருந்த கலை படைப்புகளும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறத் தொடங்கின.
இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஓவியங்களும் கலைப்பொருட்களும் ஒவ்வொரு தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய renaissance புரட்சி என்பது இத்தாலியின் பிளாரன்ஸ் நகரில் தொடங்கியது. பண்டையகால ஓவிய மரபில் அன்னைமேரி, குழந்தையைத் தூக்கிக் கொண்டிருக்கும் அன்னை மேரி, இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் ஏற்றப்பட்டஓவியம், தேவதைகள் வானில் பூச்சொரிதல், இயேசு கிறிஸ்து, அன்னை மேரி குழந்தையை தாங்கிக் கொண்டிருக்கும் போது அவரைக் காண வரும் தூதுவர்கள் என்பது போன்றே மீண்டும் மீண்டும் ஓவியங்கள் அமைந்திருக்கும். பண்டைய ஐரோப்பியக் கலை படைப்புகள் பெரும்பாலும் சோக நிகழ்வை வெளிப்படுத்துவனவாகவும் இருக்கும்.
இந்த பாணியிலிருந்து மிகப்பெரிய மாற்றத்தை கிபி 15ஆம் நூற்றாண்டில் ரெனைசான்ஸ் சீர்திருத்த காலம் உருவாக்கியது. பல்வேறு புதிய விஷயங்களை, இயற்கை, கட்டிடங்கள், அலங்காரம், மனித உடல், சிந்தனைப் புரட்சி, மறைமுகமான வெளிப்பாடுகள்... என்ற வகையில் இக்காலகட்டத்தில் புதிய கலை படைப்புகள் உருவாக்கம் கண்டன. அந்த வகையில் லியனாடோ டா வின்சி, மைக்கலாஞ்சலோ, ரபேல் போன்றோரை நாம் குறிப்பிடலாம்.
இந்த அருங்காட்சியகத்தில் உள்ள ஓவியங்கள் விலை மதிப்பிட முடியாதவை. அத்தனை அரும்பொருட்கள் இந்த அரண்மனைக்குள் உள்ளன. மன்னர் கட்டிய அரண்மனையில் இன்று மன்னரின் வாரிசுகள் இல்லை என்றாலும் அவர் சேகரித்த அரும்பொருட்களள் இங்கே இருக்கின்றன.
இந்த அரண்மனைக்கு எதிர்புறத்தில் மன்னர் முதலாம் கார்ல் அவர்களின் சிலை மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இது கார்ல் பல்கலைக்கழகத்தின் முன்னே அமைந்துள்ளது. மன்னரின் பெயரிலேயே இந்த பல்கலைக்கழகமும் பெயரிடப்பட்டுள்ளது. ரொமேனியாவின் சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் ஒரு அங்கமாக இந்த அருங்காட்சியகத்தை நிச்சயமாகக் கூறலாம்.
-சுபா








No comments:

Post a Comment