Saturday, April 20, 2019

ரொமேனியா பயணம் - 14- ரோமானிய எச்சங்கள்

ஐரோப்பாவின் இன்றைய பல நாடுகளில் ரோமானியப் பேரரசின் தாக்கம் மிக அதிகமாக உள்ளதை மறுக்க முடியாது. ஒரு காலத்தில் ஐரோப்பாவை தன் கைக்குள் வைத்து இருந்தது ரோமானியப் பேரரசு.
ஒரு காலத்தில் வல்லரசாக ஆட்சி செலுத்திய பேரரசுகள் இன்று வரலாற்றில் மட்டுமே இடம் பிடிக்கும் வகையில் அமைந்திருப்பதை காண்கின்றோம். ரொமேனியாவில் ரோமானிய பேரரசு தனது தடயங்களை மிக ஆழமாக பதிந்து சென்றிருக்கின்றது. கிமு 2 ஆம் நூற்றாண்டு தொடங்கி இங்கு கிரேக்க கல்வெட்டுகள் கிடைக்கின்றன. கிபி 1, கி பி 2 காலகட்டம் தொடங்கிய வரலாற்று நிகழ்வுகளைப் பற்றிய தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் இங்கு ரோமானிய பேரரசுகளின் தாக்கம் இருந்ததை சான்று பகர்கின்றன. வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரமாக சில நூற்றாண்டுகள் தொடர்ந்து இருந்திருக்கின்றது Constanta.
கிரேக்க நாகரிகத்தின் தாக்கம், அதன் பின்னர் மிக அழுத்தமாக ரோமானிய பேரரசின் தாக்கம், சில நூற்றாண்டுகள் இடைவெளியில் துருக்கியைச் சேர்ந்த ஒட்டோமான் பேரரசின் தாக்கம் என அந்நிய நாடுகள் ரொமேனியாவை கைப்பற்றி ஆட்சி செய்த தடயங்கள் நிறைய கிடைக்கின்றன.
அதில் குறிப்பாக கருங்கடலின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இந்த Constanta நகரம் விளங்குகிறது . இத்தாலியிலிருந்து இப்பகுதிக்கு வருவதற்கும் துருக்கியிலிருந்து இப்பகுதிக்கு வருவதற்கும் இங்கு உள்ளூர் மக்களை தாக்கி கைப்பற்றி நாட்டை கைப்பற்றி தனது ஆட்சியை நிறுவி பேரரசை நிலைநாட்டுவதற்கும் நல்ல வாய்ப்பாக இது அமைந்திருந்தது.
ரொமேனியாவின் மக்கள் அடிப்படையில் படை பலமற்றவர்கள். சாதாரண வாழ்வியல், விவசாயம், நாடோடி வாழ்க்கை என வாழ்பவர்கள். அந்தச் சூழலில் மிக பலம் பொருந்திய பேரரசுகளுக்கு இப்பகுதியை தாக்கி கைப்பற்றி ஆட்சி செய்வதில் பெரிய எதிர்ப்போ அல்லது பிரச்சினையோ எழவில்லை.
ஆனால் அன்று பலம் பொருந்திய வகையில் ஆட்சி செய்த ரோமானிய படைகளும் இன்று இல்லை. துருக்கிய ஒட்டோமான் படைகளும் இன்று இல்லை. கொன்ஸ்டன்டா இன்று படிப்படியாக அதன் பழமை குறைந்து வெறிச்சோடிப் போன நிலையில் காட்சி அளிக்கின்றது. மக்கள் தொகை மிகக் குறைவு. மிக முக்கியமான துறைமுகப் பகுதி தான் என்றாலும் கூட வணிக வாய்ப்புகள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. கோடை காலத்தில் மட்டுமே இங்கு சுற்றுலா வணிகத்திற்கு வாய்ப்பளிக்கின்றது. மற்றபடி பார்க்கும்போது இந்த நகர் இன்று அதன் வளம் இழந்து வறுமையை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கின்றது.
அருங்காட்சியகங்கள் வரலாற்றை சொல்கின்றன. அன்று அப்படி இருந்த ஒரு நகரமா இப்படி இருக்கின்றது என்று நம்மை வியக்க வைக்கின்றது இங்கு நாம் காணும் வரலாற்று சின்னங்கள். நம்மை ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன இங்கு அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மண்பானைகளும், மொசைக் வடிவங்களும், ரோமானிய தெய்வ வடிவங்களும், ரோமானிய கல்லறை கட்டுமானங்களும்.
அருங்காட்சியகத்தை விட்டு வெளியே வந்தால் நிகழ்காலத்தில் நிற்கின்றோம். நிகழ்காலம் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழலை நம் கண்முன் காட்டுகின்றது. எல்லா இடங்களும் தூங்கி வழிவது போல்.. சுறுசுறுப்பு இல்லாததுபோல்.. யாருமற்ற தனித் தீவுக்கு வந்ததுபோல் ஒரு சூழலை நமக்கு நினைவூட்டுகிறது.
இந்த உலகில் எதுவுமே நிலை இல்லை என்பதைத்தான் வரலாறு தொடர்ச்சியாக காட்டிக் கொண்டே இருக்கின்றது.
இந்தக் கருங்கடல் எத்தனையோ போர்வீரர்களையும் வணிகர்களையும் சந்தித்திருக்கும்.மனிதர்கள் வருகின்றார்கள் வாழ்கின்றார்கள்.. மறைகிறார்கள். ஆனால் இயற்கை தன்னை புதுப்பித்துக் கொண்டு அப்படியே இருக்கின்றது. அப்படித்தான் இந்த கருங்கடலும்; தான் மட்டும் உயிர்ப்புடன் ஓயாத அலை ஓசையுடன் நம்மை வியக்க வைக்கின்றது.
-சுபா


















No comments:

Post a Comment