Monday, October 29, 2018

SriLanka - 21.வரலாற்றுப் பதிவுகள்

28.10.2018 (ஞாயிறு)
யாழ்ப்பாணத்தின் சில முக்கிய வரலாற்றுப் பகுதிகளுக்கு தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர் சென்றிருந்தோம். அதில் குறிப்பாக:
கந்தரோடை – தமிழ் பௌத்தம் நிலைபெற்றிருந்த பகுதியாக அறியப்படும் தொல்பழங்கால மனிதர்கள் வாழ்விடம். அகழ்வாய்வுகள் செய்யப்பட்ட ஒரு பகுதி இது. இங்கு பேரா.புஷ்பரட்ணம் அவர்களது பேட்டி ஒன்று இப்பகுதி பற்றிய விளக்கங்களுடன் பதிவு செய்யப்பட்டது. 
(இப்பகுதியில் தற்சமயம் இலங்கை இராணுவத்தினர் இருக்கின்றனர். நான் சென்றிருந்த சமயத்தில் இரண்டு இராணுவத்தினர் வருவோர் போவோரிடம் சிங்களத்தில் பேசினர். எங்களிடமும் வந்து பேசினர். இப்பகுதியை விரிவாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேராசிரியரிடம் சிங்களத்தில் கூறினர். பேருந்துகளில் சிங்களவர்கள் வந்து இப்பகுதியைப் பார்த்துச் செல்கின்றனர். )
கந்தரோடை செல்லும் சாலையில் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கடந்து சென்றோம். தற்சமயம் சாலையின் இரு பக்கங்களிலும் புதிய வீடுகள் தென்படுகின்றன. இவை இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகள் என ஒருவர் குறிப்பிட்டார். வீடுகளின் தரம் மிக எளிமையானதாக உள்ளது. 10 ஆண்டுகள் இவை தாங்குமா என்பதே சந்தேகம் எனும் வகையில் இவ்வீடுகள் காட்சியளிக்கின்றன.
கீரிமலை சிவாலயம் – இது சோழர் காலத்தில் கட்டப்பட்ட ஒரு பழம் கோயில் என அறியப்படுகின்றது. போரில் மிகுந்த சேதம் அடைந்து கடந்த ஆண்டு முழுமையாக புதிதாக கட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றது இவ்வாலயம். கோயிலின் உள்ளே சிவபுராணக் காட்சிகள் சுவர்களில் ஓவியங்களாகவும் புடைப்புச் சிற்பங்களாகவும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
மாவட்டபுரம் கந்தசாமி கோயில் – இது கீரிமலை கோயில் அருகிலேயே இருக்கும் ஒரு சிவாலயம். போரினால் மிகுந்த சேதம் அடைந்த சிவாலயங்களில் ஒன்று இது. தற்சமயம் இக்கோயில் புணரமைக்கப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் துர்க்கையம்மன் கோயில். இங்கு போரின் போது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு இயங்குகின்றது. சைவ ஆராய்ச்சி நூலகம் ஒன்றும் இவ்வளாகத்தில் உள்ளது. துர்க்கைக்கான அர்ச்சனையாக இங்கு மனநலம் பாதிக்கபப்ட்ட பெண்களின் பெயர்கள் வரிசையாக வாசிக்கப்பட்டு அவர்களுக்கான போற்றி பாடல் இங்கு வழிபாட்டில் ஓதப்படுகின்றது.
மதியம் குரும்பையூர் (குரும்பசிட்டி) கிராமத்தில் ஏற்பாடாகியிருந்த பரிசளிப்பு விழா, தமிழ்த்தினவிழாவில் கலந்து கொண்ட்டோம். முற்றிலும் அழிக்கப்பட்ட, 30 ஆண்டுகள் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு கிராமம் இது. இங்குப் புது குடியேற்றம் தொடங்கியுள்ளது. இங்கு ஒரு பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டு அங்கு வறுமைக்கோட்டின் அடித்தளத்தில் உள்ள மக்களின் குழந்தைகள் கல்வி கற்கின்றனர். குழந்தைகளின் நலனுக்காக பெரும் சேவையாற்றும் ஆசிரியை வலன்ரீனா, பள்ளி அதிபர் திரு.ரவிச்சந்திரன் ஆகியோருடன் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி மகிழ்ந்தோம்.
மாலை திருமறை கலாமன்றம், கலைத்தூது அழகியல் கல்லூரியில் பன்மொழிப்புலவர் பாதிரியார் மரியசேவியர் அவர்களையும் அவரது அமைப்பின் குழுவினரையும் சந்தித்து கலந்துரையாடினோம். பேட்டி ஒன்று பதிவாக்கப்பட்டது.
-சுபா







No comments:

Post a Comment